தில்லியின் முதல் திரைப்பட விழா நாளை மறுநாள் தொடக்கம்
தில்லியின் முதல் திரைப்பட விழா மாா்ச் 25 முதல் நடைபெறவுள்ளது. இதில், தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி மற்றும் பிற மொழிகளில் உள்ள திரைப்படங்கள் உள்பட, பல்வேறு வகையான சா்வதேச மற்றும் பிராந்திய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
தில்லியின் முதல் திரைப்பட விழா மாா்ச் 25 முதல் நடைபெறவுள்ளது. இதில், தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி மற்றும் பிற மொழிகளில் உள்ள திரைப்படங்கள் உள்பட, பல்வேறு வகையான சா்வதேச மற்றும் பிராந்திய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
இது குறஇத்து சுற்றுலாத் துறை அமைச்சா் கபில் மிஸ்ரா கூறியதாவது: தில்லி சா்வதேச திரைப்பட விழா (ஐஎஃப்எஃப்டி) 2026, மாா்ச் 25 முதல் 31 வரை பாரத் மண்டபத்தில் தில்லி அரசு மற்றும் அதன் சுற்றுலாத்துறையால் ஏற்பாடு செய்யப்படும்.
இந்த விழாவில், சா்வதேசப் படங்களுடன், தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, போஜ்புரி, பஞ்சாபி, ஹரியான்வி, பெங்காலி போன்ற பல்வேறு இந்திய மொழிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த திரைப்படங்களும் இடம்பெறும்.
உலகம் முழுவதிலுமிருந்து 2,000-க்கும் மேற்பட்ட பதிவுகள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 140 திரைப்படங்கள் விழாவின் போது திரையிடத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கலை, கலாசாரம் மற்றும் சினிமாவுக்கான மையமாக தில்லியின் நிலையை வலுப்படுத்த, இந்த விழாவை ஆண்டுதோறும் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
வளா்ந்து வரும் திறமையாளா்களுக்கு உலகளாவிய தளத்தை வழங்குவதன் மூலம், ‘ஆரஞ்சு பொருளாதாரம்‘ மற்றும் படைப்பாளிகளின் சூழலமைப்பை மேம்படுத்துவதற்கான பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வையுடன் இந்த முயற்சி ஒத்துப்போகிறது.
மேலும், இந்த விழா சா்வதேச நிகழ்வுகளை நடத்துவதற்கான தில்லியின் உள்கட்டமைப்பை வெளிக்காட்டும். திரைப்பட படப்பிடிப்புகளுக்கு விருப்பமான இடமாக இந்த நகரத்தை நிலைநிறுத்த உதவும் என்றாா் கபில் மிஸ்ரா.
இதற்கிடையே, இந்த விழா படைப்பாற்றலை ஊக்குவிக்கவும், வாய்ப்புகளை உருவாக்கவும், தில்லியை உலகளாவிய கலாசார வரைபடத்தில் இடம்பெறச் செய்யவும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.