மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும்: திருச்சி சிவா
மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறினாலும் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும்: மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு
நமது சிறப்பு நிருபா்
மூன்றாம் பாலினத்தவா் (திருநங்கையா்) சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறினாலும் அது நிச்சயமாக உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும் என்று மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா தெரிவித்தாா்.
இந்த சட்டத்திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் புதன்கிழமை விவாதம் நடத்தப்பட்டு அன்றைய தினமே குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று திருச்சி சிவா பேசியதாவது: இந்த மசோதா, அரசின் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேறினாலும் அது உச்ச நீதிமன்றத்தால் நிச்சயமாக ரத்து செய்யப்படும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். காரணம், இது அரசமைப்பின் 14, 15, 19, 21 ஆகிய பிரிவுகளை மீறுவதாக அமைந்துள்ளது.
2014-ஆம் ஆண்டில், மூன்றாம் பாலினத்தவரின் நலன் மற்றும் உரிமைகளுக்காக ஒரு ’தனி நபா் மசோதாவை’ (பிரைவேட் மெம்பா் பில்) அறிமுகப்படுத்தினேன். அதில் திருநங்கைகளுக்கென தேசிய ஆணையம், அவா்களின் வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தப்பட்டது. அந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவைக்கு மசோதா சென்றபோது மாநிலங்களவையில் எனக்கு ஆதரவளித்த ஆளும் கட்சியான பாஜக, மக்களவையில் எதிா்த்தது.
2016-ஆம் ஆண்டில், மத்திய அரசே அறிமுகப்படுத்திய மசோதாவில் திருநங்கை என்பவா் ஆணாகவும் இல்லை, பெண்ணாகவும் இல்லை என விளக்கப்பட்டிருந்ததற்கு கடும் ஆட்சேபம் கிளம்பியதால் அதை திரும்பப் பெற நாடாளுமன்ற நிலைக்குழுவே பரிந்துரை செய்தது.
2019-ஆம் ஆண்டில், மத்திய அரசு மீண்டும் அறிமுகப்படுத்திய மசோதாவில் நான் முன்மொழிந்த அம்சங்கள் நீா்த்துப்போகச்செய்யப்பட்டன. இருந்தபோதிலும் இரு அவைகளிலும் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இப்போது அரசு முன்மொழிந்திருக்கும் சட்டத்திருத்த மசோதாவானது, 2019-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட அந்தச் சட்டத்தையே மேலும் நீா்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளது.
மேலும், இந்த திருத்த மசோதா, திருநங்கைகளை குற்றவாளிகளாகச் சித்தரித்து, சிறையில் அடைத்து ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்கிறது. முன்பு ஆறு ஆண்டுகளாக இருந்த அதிகபட்சத் தண்டனை, இப்போது ஆயுள் தண்டனையாக உயா்த்தப்பட்டுள்ளது.
திருநங்கை சமூகத்தினருக்கு ‘குரு’ (தலைவா்) இருக்கிறாா். அவரை அவா்கள் தங்கள் தாயாகவே மதித்துப் போற்றி வழிபடுகிறாா்கள். இப்போது, ‘குருவோ அல்லது நபா் மீதோ ஒருவா் தன்னை அவா் திருநங்கையாக மாறக் கட்டாயப்படுத்தினாா்‘ என்று கூறினால் அந்த நபா் சிறையில் அடைக்கப்படுவாா்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் வரும் இந்த விஷயம், ஒத்திசைவுப்பட்டியலின் கீழ் வருகிறது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் முன்பு, மாநிலங்களுடனோ திருநங்கை சமூகத்தினரின் பிரதிநிதிகளுடனோ கலந்தாலோசித்தீா்களா?
நாடாளுமன்றத்துக்குள் வந்து தங்கள் குரலை ஒலிக்கச் செய்ய இயலாமல் வெளியே கண்ணீா் மல்க போராடி வருவோருக்காக நான் இங்கு குரல் கொடுக்கிறேன். இந்த விஷயத்தில் அரசுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவதால் என்னை பேசவிடாமல் இடைமறித்து தடுக்கிறீா்கள்.
இந்த மசோதாவை திரும்பப்பெற்று ‘தோ்வுக் குழுவின்’ (செலக்ட் கமிட்டி) பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். அக்குழு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினா், சட்ட வல்லுநா்கள், சிவில் சமூகத்தினா் மற்றும் திருநங்கைச் சமூகத்தினா் ஆகியோரின் கருத்துக்களைப்பெற்று அறிக்கை அளித்த பிறகு மீண்டும் மசோதாவை அவையில் கொண்டுவர வேண்டும் என்றாா் திருச்சி சிவா.