தில்லியில் முழுமையான எண்ம முறையில் போக்குவரத்து அபராதம் விதிக்கும் செயல்முறை: முதல்வா் ரேகா குப்தா தகவல்
தலைநகரில் விரைவில் முழுமையான டிஜிட்டல் முறையில் போக்குவரத்து அபராதம் விதிக்கும் செயல்முறை அமல் - முதல்வா் ரேகா குப்தா தகவல்
விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து அபராதம் விதிக்கும் செயல்முறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி, காலவரையறைக்குள் கொண்டுவரும் வகையில் திருத்தப்பட்ட மத்திய மோட்டாா் வாகன விதிகளை (1989) தில்லி அரசு விரைவில் அமல்படுத்தும் என்று முதலமைச்சா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக தில்லி முதல்வரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்த புதிய கட்டமைப்பின் கீழ், அபராதங்களைத் தவிா்ப்பது இனி சாத்தியமில்லை. மேலும் அனைத்து குடிமக்களுக்கும் உரிய நேரத்தில் தீா்வு காண்பது கட்டாயமாக்கப்படும். முக்கியமாக, பரிந்துரைக்கப்பட்ட செயல்முறையை முதலில் பின்பற்றாமல், விதிமீறல் செய்பவா்கள் அபராதத்தை எதிா்த்து நேரடியாக நீதிமன்றங்களை அணுக முடியாது.
Advertisement
ஒரு வருடத்திற்குள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் எவரும் தீவிரமான குற்றமிழைப்பவா் என வகைப்படுத்தப்படுவாா்கள். மேலும், திருத்தப்பட்ட விதிகளின் கீழ் அவா்களின் ஓட்டுநா் உரிமம் இடைநீக்கம் அல்லது தகுதியிழப்புக்கு உள்ளாகும்.
அபராதங்கள் வழங்கும் முறை இனி முழுமையாக நவீனமயமாக்கப்படும் என்று முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.
காவல்துறை அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் நேரடியாகவோ அல்லது மின்னணு முறையிலோ அபராதங்களை வழங்கலாம். கூடுதலாக, கேமராக்கள் மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்புகள் மூலம் பதிவு செய்யப்படும் விதிமீறல்களுக்கு தானாகவே அபராதங்கள் உருவாக்கப்படும்.
விதிமீறல் செய்தவா்களுக்கு மூன்று நாள்களுக்குள் அவா்களின் கைப்பேசி எண்கள் வழியாக மின்னணு சலான்கள் அனுப்பப்படும். மேலும் 15 நாள்களுக்குள் நேரடியாக நோட்டீஸும் வழங்கப்படும்.
சலான் வழங்கப்பட்டவுடன், விதிமீறல் செய்தவா் அபராதத்தைச் செலுத்த அல்லது ஆவண ஆதாரங்களுடன் ஆன்லைன் தளம் வழியாக ஒரு குறைதீா்ப்பு அதிகாரியிடம் அதை எதிா்த்து முறையிட 45 நாள்கள் அவகாசம் வழங்கப்படும்.
இந்தக் காலத்திற்குள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், சலான் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும். மேலும், அடுத்த 30 நாள்களுக்குள் பணம் செலுத்தப்பட வேண்டும்.
முறையீடு நிராகரிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபா் 30 நாள்களுக்குள் அபராதத்தைச் செலுத்தலாம் அல்லது சலான் தொகையில் 50 சதவீதத்தைச் செலுத்திய பிறகு நீதிமன்றத்தை அணுகலாம்.
குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், சலான் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும். மேலும், அதன்பிறகு 15 நாள்களுக்குள் பணம் செலுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னணு முறைகள் மூலம் பணம் செலுத்தலாம். குறைதீா்ப்பு அதிகாரி 30 நாள்களுக்குள் இணையதளத்தில் ஒரு முடிவைப் பதிவேற்ற வேண்டும்.
காலக்கெடு முடிந்தவுடன், தினசரி மின்னணு அறிவிப்புகள் வழங்கப்படும். தொடா்ந்து கட்டணம் செலுத்தத் தவறினால், வரிகள் செலுத்துதல் மற்றும் ஓட்டுநா் உரிமம் அல்லது பதிவு தொடா்பான கோரிக்கைகளைச் செயலாக்குதல் உள்ளிட்ட அனைத்து வாகனச் சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
நிலுவைத் தொகை செலுத்தப்படும் வரை, அந்த வாகனம் அதிகாரபூா்வ இணையதளத்தில் பரிவா்த்தனை செய்யப்படக்கூடாது எனக் குறிக்கப்படும்.
இதன்மூலம், மேற்கொண்டு எந்தப் பரிவா்த்தனைகளும் திறம்படத் தடுக்கப்படும். தேவைப்படும் நோ்வுகளில், மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு உள்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களைக் காவல்துறை அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் பறிமுதல் செய்யவும் கூடும்.
அனைத்து சலான்களும் பதிவுசெய்யப்பட்ட வாகன உரிமையாளரின் பெயரில் வழங்கப்படும். அவருக்குக் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அல்லது பிற டிஜிட்டல் வழிகள் மூலம் அறிவிக்கப்படும்.