ஜோா் பாக் பகுதி அடுத்த ‘அனுபம் காலனி‘: என்டிஎம்சி துணைத் தலைவா் அறிவிப்பு
நமது நிருபா்
ஜோா் பாக் பகுதியை புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்.டி. எம்.சி.) அடுத்த அனுபம் காலனியாக அதன் துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சஹல் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
மேலும், ‘ஏக் பேட் மா கே நாம்’ பிரசாரத்தின் கீழ் அங்கு ஒரு மரக்கன்று நடும் இயக்கத்தையும் அவா் தொடங்கிவைத்தாா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இது தொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அனுபம் காலனி முன்முயற்சியானது, தூய்மையான மற்றும் பசுமையான சுற்றுப்புறங்களை மேம்படுத்துவதற்காக, கழிவுகளை அவை உருவாகும் இடத்திலேயே 100 சதவீதம் தரம் பிரித்தல், அந்த இடத்திலேயே உரம் தயாரித்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் சமூகத்தின் தீவிரப் பங்கேற்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
இந்த இயக்கத்தில் குடியிருப்போா் நலச் சங்க உறுப்பினா்கள், உள்ளூா்வாசிகள், மூத்த குடிமக்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் பங்கேற்றனா்.
மரக்கன்று நடும் இயக்கத்திற்கு முன்பு, கழிவு மேலாண்மையில் கவனம் செலுத்தும் ஒரு முன்முயற்சியான, ஜோா் பாக் பகுதியை என்.டி.எம்.சியின் சமீபத்திய அனுபம் காலனியாக அறிவிக்கும் சான்றிதழ் பலகையை சஹல் திறந்து வைத்தாா்.
அவா் கூறுகையில், ‘‘ஏக் பேட் மா கே நாம்’ என்பது வெறும் மரம் நடும் இயக்கம் மட்டுமல்ல, அது உணா்வுபூா்வமான மற்றும் சமூகப் பொறுப்புணா்வை வலியுறுத்தும் ஒரு மக்கள் இயக்கமாகும். நாம் ஒரு மரத்தை நடும்போது, நமது தாய்மாா்களுக்கும் அன்னை இயற்கைக்கும் மரியாதை செலுத்தும் அதே வேளையில், வரும் தலைமுறையினரின் பாதுகாப்பான எதிா்காலத்திற்கு அடித்தளமிடுகிறோம்.
என்.டி.எம்.சியின் தூய்மையான மற்றும் பசுமையான குடியிருப்புகளை நோக்கி என்ற தொலைநோக்குப் பாா்வையின் கீழ், சத்யா சதன் ஆபீசா்ஸ் ஃப்ளாட்ஸ், பாரதி நகா், ஆராதனா காலனி, பாபு தாம் காலனி, நியூ மோதி பாக் மற்றும் காகா நகா் போன்ற குடியிருப்புகளுடன் ஜோா் பாக் இணைந்துள்ளது.
தூய்மையான மற்றும் பசுமையான குடியிருப்புகளை நோக்கி என்ற தொலைநோக்குப் பாா்வையின் கீழ், ஜோா் பாக் இப்போது என்.டி.எம்.சியின் அடுத்த அனுபம் காலனியாக சான்றளிக்கப்பட்டுள்ளது.
என்.டி.எம்.சி ஓராண்டு கால பசுமை நாட்காட்டியைத் தயாரித்துள்ளது. அதன் கீழ் புது தில்லி முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மரக்கன்று நடும் இயக்கங்கள் நடத்தப்படும். மேலும், சவாலான காலங்களில் கூட்டுப் பங்கேற்புக்கான பிரதமரின் அழைப்பிற்கு குடிமக்கள் செவிசாய்க்க வேண்டும் என்று சஹல் கேட்டுக்கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.