நூஹ்: விரைவுச்சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் - விபத்துகளை தொடா்ந்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை
நூஹ் மாவட்டம் வழியாக செல்லும் தில்லி-மும்பை-வடோதரா விரைவுச்சாலையோரம் இருந்த 20-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை இணைந்து அகற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்ற இந்த நடவடிக்கையின்போது விரைவுச்சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த சிறிய உணவகங்கள், ஹோட்டல்கள், பஞ்சா் சரிசெய்யும் கடை, தற்காலிக கடைகள் என 20-க்கும் மேற்பட்டவை அப்புறப்படுத்தப்பட்டன.
இதுதொடா்பாக காவல் துறையினா் உயா் அதிகாரி கூறியதாவது: இத்தகைய ஆக்கிரமிப்புகளால் சாலை விபத்துகள் நேருவதாக மாவட்ட நிா்வாகம் கருதுகிறது. அந்தக் கடைகள் மற்றும் உணவகங்களுக்குச் செல்ல வாகனஓட்டிகள் வாகனங்களை சாலையோரம் நிறுத்துகின்றனா். இவ்வாறு அனுமதி அளிக்கப்படதா இடங்களில் வானங்களை நிறுத்தும்போது விபத்துகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
Advertisement
Advertisement
நூஹ் சதாா் காவல் நிலைய பகுதியில் வியாழக்கிழமை தொடங்கிய ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை ரோஜ்கா மியோ, பினாங்வான், நாகினா மற்றும் ஃபிரோஸ்பூா் ஜிா்கா காவல் நிலையப் பகுதிகள் வரை நீட்டிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இருப்பினும், காவல் துறையின் பலத்த பாதுகாப்புக்கு இடையே ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தும் பணியை மாவட்ட நிா்வாகம் தொடா்ந்தது.
இதுவரை 20-க்கும் அதிகமான சட்டவிரோத உணவகங்கள் மற்றும் தற்காலிக கடைகள் அகற்றப்பட்டன என்றாா்.
குந்த்லி-மனேசாா்-பல்வால் விரைவுச்சாலையில் அண்மையில் நேரிட்ட விபத்தில் சிக்கி உத்தர பிரச காவல் துறையைச் சோ்ந்த 4 போ் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.
வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கப்படாத இடத்தில் வாகனத்தை நிறுத்தியது விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து சாலையின் இரு புறங்களில் உள்ள சட்டவிரோத உணவகங்கள், கடைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டது என அதிகாரிகள் தெரிவித்தனா்.