தமிழகத்தில் எமதர்மன் வழிபாடு - மு.செல்லன்; பக்.153; ரூ.150; அன்னம், 1, நிர்மலா நகர், தஞ்சாவூர்.
உயிரைப் படைப்பதற்கு ஒரு கடவுள் இருந்தால், உயிரை எடுப்பதற்கும் ஒருவர் வேண்டும். அவ்வாறு நியமிக்கப்பட்டவர்தான் எமன்.
மேலும், எமன் பற்றிய தொன்மைக் கதைகள், கர்ணபரம்பரைக் கதைகள், புராணங்கள், இதிகாசங்கள், ரிக் வேதம், அதர்வண வேதம், விஷ்ணுதர்மோத்ர புராணம், மகாபாரதம், கருட புராணம், பெüத்தம், கடோபநிஷத் முதலிய பலவற்றிலும் எமன் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.
எமன் உலகத்தை இயக்குபவன் என்றும், சூரியக் கடவுள் என்றும் ரிக்வேதம் கூறுகிறது. சீனர்கள் எமனை "பின்இன்' என்கின்றனர். அவர்தான் இறப்பின் கடவுள் என்றும், அரசன் என்னும் பொருளில் எமராஜா என்றும் கூறுவர். கொரியா நாட்டுக்காரர்கள் எமனை "எம்ரா' என்றும், ஜப்பானியர்கள் "எம்மா' என்றும், முஸ்லீம்கள் உயிர் வாங்கும் "மலக்' இஸ்ராயீர் என்றும், யுக முடிவு நாளில் எல்லாவற்றையும் அழித்து இறைக் கட்டளையை நிறைவேற்றுபவர் "இஸ்ராபீல்' என்றும் குறிப்பிடுகின்றனர்.
இந்நூலில் கோவை, வெள்ளலூரில் உள்ள சித்திரபுத்திர எமதர்மராஜா கோயில்; தஞ்சை, திருச்சிற்றம்பலத்தில் உள்ள எமன் கோயில்; விருதுநகரில் உள்ள பழைய ஏழாயிரம் பண்ணை எமன் கோயில், திருப்பைஞ்ஞீலி எமதர்மன் கோயில், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில், திருக்கடையூர் கோயில், ஸ்ரீவாஞ்சியம் கோயில் முதலாய பல கோயில்களில் எமதர்மன் உள்ள சந்நிதிகளும், தனிக்கோயில்களும், வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுள்ளன.
இந்நூல், உலக, இந்திய அளவில் எமதர்மன், தமிழகத்தில் எமதர்மனுக்கான கோயில்கள், எமனோடு தொடர்புடையவர்கள், எமனோடு ஒருங்கிணைத்து வழிபடத்தக்கவர்கள், எமதர்மனும் இறப்புச் சடங்குகளும் ஆகிய ஐந்து இயல்களுடன் அமைந்து, அதன் மூலம் அரிய தகவல்களை எடுத்துரைக்கிறது. பின்னிணைப்பில் தகவலாளர்களின் பட்டியல், எமதர்மன் வழிபாட்டை விளக்கும் நிழற்படங்கள் ஆகியவையும் உள்ளன. அரிய , புதிய வரவு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.