முகப்பு
நூல் அரங்கம்

மதுரா விஜயம்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

மதுரா விஜயம் - செ. திவான்;  பக். 136; ரூ.150; ரெகான் - ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி; 0462 - 2572665. 

மதுரை வரலாற்றைப் பேசும் ஒவ்வொரு நூலும் தவிர்க்க இயலாத வகையில் குறிப்பிடும் ஒரு  நூல், மதுரா விஜயம். விஜயநகரத்திலிருந்து வந்து தென் தமிழகப் பகுதிகளை வெற்றிகொண்ட குமார கம்பணனின் மனைவி கங்காதேவி எழுதிய காவிய வகைப்பட்டது.

இலக்கிய வரலாற்றுச் சான்றாகப் போற்றப்படுகிற 'காவிய' மதுரா விஜயத்தின் தகவல்கள், முரண்களை அலசி ஆராயும் நூல்தான் வரலாற்றாய்வாளரான நூலாசிரியரின் இந்த நூல். 

மதுரா விஜயத்தின் பகுதிகளும் ஸ்லோகங்களும் எவற்றைப் பேசுகின்றன என்று சுருக்கமாகத் தெரிவிக்கும் ஆசிரியர்,  முரண்பாடான விஷயங்கள் பற்றியும் வலுவான சான்றாதாரங்களுடன் விளக்கிச் செல்கிறார். சிக்கல்களுடன் இணைந்து எத்தகைய தவறான கருதுகோள்களை வரலாற்றாசிரியர்கள் முன்வைக்கின்றனர் என்பதையும் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

சுல்தானியர்கள் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொண்ட படையெடுப்பு என்று மதுரா விஜயம் கூறினாலும் கம்பணன் படையினர், முதலில் மோதி வீழ்த்தியது சம்புவரையர்களின் ஆட்சியையே.

காவியம் கதைப்பதைப் போல - மதுரை சுல்தான்களின் ஆட்சியைக் கம்பணன் முடிவுக்குக் கொண்டுவரவில்லை. கம்பணனின் மதுரை வெற்றி கி.பி. 1371, மறைவு -1374. ஆனால், 1378 - ஆம் ஆண்டின்  மதுரை சிக்கந்தர் ஷா சுல்தான் நாணயங்கள் கிடைத்துள்ளன, திருப்பரங்குன்றம் மலையில் அடங்கியுள்ள அவர் மறைந்ததும் அதே ஆண்டுதான். நூலில் இதுபோல ஏராளமான வரலாற்றுத் தகவல்கள், அறிய வேண்டிய மேற்கோள்கள்.

வீர கம்பணன் முன்வந்து பேசும் பெண் உரு பற்றிய கற்பனைகளைத் தெளிவுபடுத்துவதுடன், இடைசெருகலாக இருக்கலாம் எனக் கருதப்படத்தக்க 'தேவர்களின் வாள்' போன்ற பகுதிகளையும் அவற்றின்  நோக்கங்களையும் கூறாமல் கூறுகிறார் ஆசிரியர்.

சிறு நூல்தான் என்றபோதிலும் ஆசிரியரின் விரிவான வாசிப்பும்  உய்த்துணரும் ஆழமும் அனுபவமும் நூலின் பக்கங்களில் காணக் கிடைக்கின்றன. 

முழு கட்டுரையைப் படிக்க →