முகப்பு
நூல் அரங்கம்

லா.ச.ரா.: தேர்ந்தெடுத்த கதைகள்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

லா.ச.ரா.: தேர்ந்தெடுத்த கதைகள் - தொகுப்பாசிரியர் ஹவி; பக்.158; ரூ.222;  வானவில் புத்தகாலயம், சென்னை 17; ✆ 7200050073.

லா.ச.ரா. என்கிற  லா.ச.ராமாமிருதத்தின் 7 சிறுகதைகளின் தொகுப்பு.  மனதின் உள்ளில் நிகழும்  எண்ண ஓட்டங்களை எழுத்தில் வடிக்கும் 'நனவோடை' உத்தியை தமிழில் முதலில் கையாண்டு பல இலக்கியப் படைப்புகளை அளித்துள்ளவர்.

தனது கதை உலக மாந்தர்களின் அந்தரங்கச் சிக்கல்கள், போராட்டங்கள், குழப்பமான எண்ண ஓட்டங்களை வெற்றிகரமாக எழுத்தில் வடித்தவர்.  20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பெரும்பாலான தமிழ்க் குடும்பங்களில் இருந்த நிலைமை, எதிர்கொண்ட  மனப் போராட்டங்கள் கதைக்களமாக உள்ளன.

இதற்கு உதாரணமாக 'பாற்கடல்' என்ற சிறுகதை.  தலைதீபாவளியைக் கொண்டாட முடியாமல் தவிக்கும் மனைவி, வேலைநிமித்தம் வெளியூரில் சிக்கிய கணவனுக்கு எழுதும் கடிதம்தான்  'பாற்கடல்'. 'உங்களுடன் கடிதத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். இல்லை. கடிதத்தில் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்'  என்று ஏங்குகிறாள் அந்த மனைவி.

உரைநடை கதையா அல்லது கவிதை வரிகளா என்று வாசகரை சில சமயம் திக்குமுக்காடச் செய்யும் நடைக்கு சொந்தக்காரர் லா.ச.ரா.

'உன்னை நான் அறியுமுன்னர் என் உள் ப்ரக்ஞையில் நீ பீடம் கொண்டுவிட்டாய்.' 'துயிலில் தாண்டவ கோலத்தில் மூழ்கிவிட்ட செஞ்சடாதரன்.' 'அடித்த பஞ்சாகி பிறகு அதனுள் ஒளித்த வஞ்சகக் கோடரியின் கூர்முனையுமாகி, உவமைகள், உருவகங்கள், உருபுகள், கருக்கள் கருவின் இருளில் மறைந்து தோன்றி மீண்டும் மறையும் த்வனிகள்.'

'நேற்று, இன்று, இனி என நாம் நியமித்த ஏற்பாட்டில் நாம் உழம்பிக் கொண்டிருப்பது என்றும் உள்ள இன்றுதான்'. 

இலக்கிய வாசகர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய தொகுப்பு நூல் இது. 

முழு கட்டுரையைப் படிக்க →