மறைந்த தலைவர்கள் மறையாத நினைவுகள்
மறைந்த தலைவர்கள் மறையாத நினைவுகள் - முனைவர் வைகைச்செல்வன்; பக்124; ரூ.160; நூல் குடில் பதிப்பகம், சென்னை-17; ✆ 9940481276.
முன்னாள் அமைச்சரான நூலாசிரியர் 'கல்கி' இதழில் எழுதிய தொடரின் தொகுப்பு நூலாக வந்துள்ளது. நாட்டில் மறக்க முடியாத 20 தலைவர்கள் குறித்து நாம் சுருக்கமாக, அதேநேரத்தில் அவர்களைப் பற்றிய முழு விவரங்களையும் அறியும் வகையில் அழகாகத் தொகுத்துள்ளது சிறப்பு.
'தலைவர்கள் எப்போதும் வழிகாட்டக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் தங்களது வாழ்க்கையைத் தியாகத்தோடு இணைத்துகொள்கிறவர்கள்' என்ற கருத்து ஏற்கக் கூடியதுதான். ஒவ்வொரு கட்டுரையின் தலைப்புமே தலைவர்களின் தனித்துவத்தைச் சொல்லிவிடும்.
அஹிம்சைப் போராளி ! (மகாத்மா காந்தி), கற்பி ஒன்றுசேர் போராடு! (அம்பேத்கர்), விதைக்கப்பட்ட விண்வெளி ஆய்வுகள் (நேரு), குறையொன்றுமில்லை (ராஜாஜி), பேரெழுச்சி (பெரியார் ஈ.வெ.ரா.), எளிமையின் பிறப்பிடம் (காமராஜர்), மாநிலங்கள் இணைப்பில் உருவான தேசம் (சர்தார் வல்லபபாய் படேல்), நேர்மை சொரூபம் (மொரார்ஜி தேசாய்), தமிழ்நாடு பெயர் சூட்டிய தலைவர் (அண்ணா), இளைஞர்களின் இமயம் (அப்துல் கலாம்), ராஜதந்திரி (இந்திரா காந்தி), வரலாற்று நாயகன் (எம்ஜிஆர்), அம்மா என்ற ஆளுமை! (ஜெயலலிதா), மின்னலைக் கொப்பளித்து மின்சாரத்தைத் துப்பியவன் (பாரதியார்), சென்னையை மீட்டெடுத்த வீரர் (ம.பொ.சி.), பொதுவுடைமைப் போராளி (ஜீவானந்தம்), நெஞ்சினிக்கும் நேயர்! (காயிதே மில்லத்), தியாகச்சுடர் (பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்), எளிய சிகரம் (ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்), தமிழன் அடையாளத்தை பாட்டில் மீட்ட பாவலன்! (பாரதிதாசன்) என 20 பேரின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்க வடிவம் வியக்க வைக்கிறது. வீட்டின் அலமாரிகளில் அவசியம் இருக்க வேண்டியதொரு நூல்.