பல்லவர்கள்
பல்லவர்கள் - முனைவர் ப. பாலசுப்பிரமணியன்; பக்.248; ரூ.275; சங்கர் பதிப்பகம், சென்னை 49; ✆ 94441 91256.
பல்லவ சாம்ராஜ்யம் தொண்டை மண்டலத்தை உள்ளடக்கியது என சொன்னாலும் ஒவ்வொரு மன்னர்களின் ஆட்சிக்காலத்திலும் ஆளுகைப் பரப்பு மாறிக் கொண்டுதான் இருந்தது.
4-ஆம் நூற்றாண்டில் தொடங்கி 10 -ஆம் நூற்றாண்டு வரை சுமார் 700 ஆண்டுகள் நீடித்து நிலைத்து இருந்தது.
இவர்கள் ஆட்சிக்காலத்தில் இன்றைய ஆட்சியாளர்களுக்கு முன்னுதாரணத்தைக் கொடுக்கும் வகையில் பல ஆட்சி நிர்வாக நடைமுறைகளை ஏற்படுத்தியிருந்தனர்.
வரிகள், நீர்ப்பாசன வசதிகள், இலக்கியம், கலை, குடைவரை கோயில்கள், நகர்நிர்மாணம், பட்டயங்கள் என பல அம்சங்கள் இவர்கள் ஆட்சியில் இடம்பெற்றிருந்தன. நரசிம்ம வர்மன் காலத்தின் குகைக் கோயில்கள், மாமல்லபுரத்தின் கதை அம்சம், திருச்சி மலைக்கோயில் கல்வெட்டுகள் என காலத்தால் அழியாத பல வரலாற்று சான்றுகள் பல்லவர்களின் ஆட்சி நிர்வாகத்துக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாய் இன்றும் சாட்சியமாக இருக்கிறது. இவர்கள் காலத்தில் களப்பிரர்கள் குறுக்கீடு, அதனால் ஏற்பட்ட போர்கள் எனப் பல வரலாற்றுச் சான்றுகளை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் முறையான சான்றுகளுடன் விவரித்துள்ளார்.
தொடக்கம் முதல் இறுதி வரை பல்லவ பேரரசின் ஆட்சிப் பரப்பு, மன்னர்களின் விவரங்கள், அன்றைய நகரங்களின் இன்றைய பெயர்கள், வரலாற்றுக் குறிப்புகள் நந்திவர்மனின் சாணக்கியத்தனம் எனப் பல வெளிவராத தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. வரலாற்று ஆர்வலர்களுக்கு அரிய பொக்கிஷம்.