தந்தையை விஞ்சிய ராஜேந்திர சோழனின் வெற்றி வரலாறு
தந்தையை விஞ்சிய ராஜேந்திர சோழனின் வெற்றி வரலாறு - அமுதன்; பக். 212; ரூ.200; மணிமேகலைப் பிரசுரம், சென்னை; ✆ 91764 51934.
பிற்கால சோழர்களின் தலைசிறந்த மன்னனான ராஜராஜனின் பல போர் வெற்றிகளுக்கு காரணமான ராஜேந்திர சோழனின் வரலாற்று பயணத்துக்குள் அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர். ராஜேந்திரனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள ஒவ்வொரு தகவலையும் உரிய கல்வெட்டு, செப்பேடு ஆதாரங்களைக் கொண்டு விளக்கியுள்ளார். குந்தவை, செம்பியன்மாதேவி, சிற்றன்னை பஞ்சவன்மாதேவி அரவணைப்பில் வளர்ந்த மதுராந்தகன் பிற்காலத்தில் கடல் கடந்து போர் புரிந்து கடாரம் கொண்டானான வரலாற்றை எடுத்துரைக்கிறது.
தமிழ் நூல்களில் அறியப்படாத காதல் கதை ராஜேந்திரன்-பரவை நங்கை காதலை கல்வெட்டு ஆதாரம் கொண்டு கூறியுள்ளார். காந்தளூர் சாலை, முன்னீர்ப்பழந்தீவு உள்ளிட்ட போர்கள் பின்னால் கடல் கடந்து செல்ல அடித்தளமிட்டன. சோழர் காலத்தில் உள்ள பல இடங்கள் தற்போது எங்கு உள்ளன என்பது வரை ஆராய்ந்து கூறியிருப்பதன் மூலம் வரலாற்று நூல்களில் தனித்த அடையாளத்தை இந்நூல் பெறுகிறது. தகவல்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என குறிப்பிட்டு காட்டியுள்ளது வாசகர்களை வரலாற்றை மேலும் அறிய தூண்டுகிறது.
சோழர்களின் வரலாறு பற்றி எழுதப்பட்ட பல நூல்களில் இந்த நூல் தனித்துவம் பெற்று விளங்குகிறது.