மக்களுக்கான நாடாளுமன்றம்
மக்களுக்கான நாடாளுமன்றம் - இரா. செழியன் (தமிழில் - அரங்க சுப்ரமணியம் - ஈரோடு எஸ்.ஆர்.எஸ்.); பக். 676; ரூ. 1,000; கொங்குநாடு பப்ளிகேஷன்ஸ் (இந்தியா) பி. லிமிடெட், ஈரோடு - 638011; ✆ 0424 - 2251545.
சிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவரான இரா. செழியனின் பேச்சுகள், விவாதக் குறிப்புகள் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் 'பார்லிமெண்ட் ஃபார் த பீப்பிள்' என்ற தலைப்பில் வெளியான நூலின் மொழிபெயர்ப்பு. 1962 முதல் 1984 வரையில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் உறுப்பினராக இருந்த அவரது முக்கிய பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன.
அனைத்து மொழிக் குழுக்களுக்கும் சம அந்தஸ்தும் வாய்ப்பும் அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டால் ஒழிய பிரச்னைக்குத் தீர்வு காணப்படப் போவதில்லை என்று தொலைநோக்குடன் குறிப்பிட்டிருக்கிறார் செழியன். இரு ஆண்டுகள் தொடர் முயற்சியால், யுபிஎஸ்சி தேர்வுகளை எட்டாவது அட்டவணையிலுள்ள மொழிகளிலும் எழுதலாம் என்று முதல்முதலாக மத்திய அரசு உறுதியளித்ததையே தன்னுடைய சாதனையாகக் குறிப்பிடுகிறார் அவர்.
'மூல ஆவணங்களிலிருந்து சான்றுகளைச் சேகரித்தேன்; விவாதத்தின்போது என் கருத்துகளை நிதானமாக முன்வைத்தேன், அச்சுறுத்தல் அல்லது தேவையற்ற குறுக்கீடுகள் ஏற்படும்போது ஆத்திரப்படாமல் இருந்தேன்' - நாடாளுமன்றச் செயல்பாடுகள் தொடர்பாக இரா. செழியனின் இந்த வரிகளே அவர் இன்றும் பேசப்படக் காரணம் எனலாம்.
மக்களின் கோரிக்கைகள், ஏக்கங்கள், நம்பிக்கைகள், அச்சங்கள், விரக்திகளை இரா. செழியனின் உரைகள் பிரதிபலித்தன என்ற மக்களவைத் தலைவராக இருந்த சோமநாத் சாட்டர்ஜியின் அணிந்துரை வரிகள் மிகையற்றவை.
அணிந்துரை எழுதியோர் பட்டியலே நூலின் சிறப்பை அறிவிக்கும் - ஆர். வெங்கடராமன், ஐ.கே. குஜ்ரால், ஏ.பி. வாஜ்பாய், பிரணாப் முகர்ஜி, நிஜலிங்கப்பா, ராமகிருஷ்ண ஹெக்டே, ரபி ராய், விஐடி ஜி. விசுவநாதன்.