அரசாட்சியில் மனசாட்சி
அரசாட்சியில் மனசாட்சி - ஓர் அரசுப் பணியாளர் சங்க போராளியின் சுயசரிதை - வெ. சுப்பிரமணியன், எழுத்தாக்கம் கா.சு.வேலாயுதன்; பக் 360; ரூ.360; கதை வட்டம், கோவை - 42; ✆ 9994498033.
பொள்ளாச்சி கிணத்துக் கடவு அருகேயுள்ள செல்லப்பக்கவுண்டன் புதூரில் 1951-ஆம் ஆண்டு டிச. 5-இல் பிறந்தவர் வெ.சுப்பிரமணியன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் கல்லூரி படிப்பை முடித்தநிலையில், ரயில்வேயில் பணி கிடைத்தது. மக்கள் பணி செய்ய வேண்டும் என்ற தனது தாயின் விருப்பத்துக்காக டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியை தொடங்கி, அரசாட்சியில் அர்ப்பணித்துக் கொண்ட அவரது வாழ்வியல் பயணம் சுயசரிதையாக உருவாகியுள்ளது.
பணி ஓய்வு பெறும் வரை சந்தித்த பல்வேறு பிரச்னைகள், சவால்கள், அரசியல் இடையூறுகள், செல்வாக்கு மிக்கவர்களின் குறுக்கீடுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் நேர்மையான அதிகாரியாக நெருப்பாற்றில் நீந்தி அரசுப் பணியில் தனது பயணத்தை எப்படி கடந்தார் என்பதை விளக்கியுள்ளார்.
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, ஆக்கிரமிப்புகள் அகற்றம் போன்ற மக்கள் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது நேரிட்ட அனுபவங்கள் வருவாய்த் துறை சார்ந்த பணி என்பதால் ஏற்படும் சவால்களைக் கையாண்ட விதம், முதல் பணியிலே 10 ரூபாய் லஞ்சம் கொடுக்க வந்தவரை நாசூக்காக மறுத்து அனுப்பி வைத்தது முதல் கொண்ட கொள்கையில் விலகாமல் பணியாற்றியது .. எனப் பல அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
மனசாட்சியோடு அரசுப் பணியில் செயல்பட வேண்டியவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளையும் பொதுவாழ்வு நடைமுறைகளையும் ஓர் அரசு ஊழியனாய் புத்தகத்தில் அனுபவ பிழம்பாய் பதியவைத்திருக்கிறார். ஒவ்வொரு அரசுப் பணியாளரும் படித்தறிய வேண்டிய பட்டறிவு நூல் இது.