முகப்பு
நூல் அரங்கம்

சைவ நீதி

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

சைவ நீதி - ந.ச. நடராசன்;  பக். 192; ரூ. 150; தில்லை பதிப்பகம், வாலாசாப்பேட்டை - 632513; ✆ 9600642967.

இந்நூலில் அமைந்துள்ள 18  கட்டுரைகளும் சைவ சமயம் குறித்த  அடிப்படை செய்திகளை சாமானியர்களுக்கும் புரியும் வண்ணம் எளிமையாக விளக்குகின்றன. சைவ அன்பர்களின் தலையாய மந்திரமாக இருக்கும் "நமசிவாய' எனும் ஐந்தெழுத்தின் பெருமையை விளக்கும் கட்டுரையில் தொடங்கி, திருநீறு, ருத்திராட்சம் இவற்றின் சிறப்புகள், நம்பியாண்டார் நம்பிகள் திருமுறைகளைக் கண்டெடுத்துத் தொகுத்த வரலாறு, சிவநெறியை உணர்த்தவல்ல மெய்கண்ட சாத்திரங்களின் உயர்வு ஆகியவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன. 

இவை தவிர, சந்தானக் குரவர், அறுபத்து மூவர், சேக்கிழார், காரைக்கால் அம்மையார், ஆறுமுக நாவலர் போன்றோரின் சைவப் பணிகளும் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன.

பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணம், சேக்கிழாரின் பெரியபுராணம் ஆகியவற்றிலுள்ள அரிய செய்திகள் சுவையாக விளக்கப்பட்டுள்ளன. ஓர் கட்டுரையில், சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர், அருணகிரிநாதர், அபிராமி பட்டர், காளமேகப் புலவர் ஆகியோர் கொன்றை மலர் குறித்துப் பாடல்களைக் குறிப்பிட்டிருப்பதோடு, சரக்கொன்றையைத் தலமரமாகக் கொண்ட கோயில்கள் குறித்தும் குறிப்பிட்டிருப்பது பலரும் அறியாத செய்திகள் எனலாம்.

ஆங்காங்கே தேவார, திருவாசக நூல்களை மேற்கோளாகக் காட்டியிருப்பதோடு, பன்னிரு திருமுறைப் பாடல்களை எழுதியோர் பெயர், பாடல்களின் எண்ணிக்கை ஆகியவை கொடுக்கப்பட்டிருப்பதும், பதினான்கு மெய்கண்ட சாத்திர நூல்களின் பெயர்களும் ஆசிரியர்களின் பெயர்களும் பட்டியலிடப்பட்டிருப்பதும் மிகவும் பயனளிக்கும். சைவம் குறித்து அறிய விரும்புவோருக்கும் இந்நூல் ஓர் எளிய கையேடு. 
 

முழு கட்டுரையைப் படிக்க →