தத் வ மஸி
தத் வ மஸி சுவாமி ஐயப்பனின் வரலாறும் வழிபாட்டு முறைகளும் - கெளதம நீலாம்பரன், ஏபி. ரவிவர்மா, பெ. கஜபதி; பக். 320; ரூ.300; வ.உ.சி. நூலகம், சென்னை - 14; ✆ 98404 44841.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18-ஆம் படி ஏறியவுடன் பெரிய எழுத்துகளில் நம் கண்ணில் படும் வாசகம் 'தத்வமஸி'. மலையாளத்திலும் சமஸ்கிருதத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும் 'தத்வமஸி' என்கிற சப்தஜாலமிக்க வாசகத்தின் பொருள் 'நீயே அதுவாக ஆகிறாய்'. அதாவது, 'நீ எதைத் தேடி வந்தாயோ அது நீயே' என்பதை விளக்குவதாக அமைந்திருக்கிறது.
ஐயப்பனை நினைத்து விரதம் இருந்து உடலையும், மனதையும் கட்டுக்குள் வைக்கிறோம். அப்போது நம்மை எல்லோரும் 'சுவாமி' என்றும் 'ஐயப்பா' என்றும் அழைக்கிறார்கள். அப்போது 'நீ ஐயப்பனாகவே ஆகிறாய்' என்பது தான் அதன் உள்பொதிந்திருக்கும் பொருளாக அறியப்படுகிறது.
கோயில், வரலாறு குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன என்றாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு புரிதலின் அடிப்படையில் படைக்கப்பட்டிருக்கின்றன என்பதே இதன் சிறப்பு. அந்த வகையில் இந்த நூலாசிரியரும் அவருடைய புரிதலின் பாதையில் ஐயப்பனின் மகிமைகளை விளக்க, உணர்ந்துகொள்ள மேலும் ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது அருமை.
விரத முறைகள் துவங்கி, அங்கு செல்லும் வழிகள் - வழிமுறைகள், கடைப்பிடிக்க வேண்டிய பூஜைகள், ஐயப்பனின் ஆறுபடை வீடு (கால், இடுப்பு, வயிறு, பிறப்புறுப்பு, மனம், பிடரி, தலை) விவரங்கள் என அனைத்து விவரங்களையும் முழுவதுமாக ஆய்ந்து தொகுக்கப்பட்டிருப்பது சிறப்பு. விரதம் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் ஒரு வழிகாட்டியாக அமையும்.
இரைத்தேடலில் துவங்கும் வாழ்க்கையானது இறைத் தேடலில் நிறைவு பெறுகிறது. அந்த இறைத் தேடலில் வழிபாட்டு முறைகள் என்பது பாலமாக அமைகிறது. அதுபோன்றதொரு பாலத்தை அமைக்க நூலாசிரியர் வழிகாட்டியிருக்கிறார்.