முகப்பு
நூல் அரங்கம்

பாரதி தமிழ்

Updated On : 4 செப்டம்பர், 2023 at 7:11 PM
பகிர்:

பாரதி தமிழ் -  (தொகுப்பாசிரியர்: ம.ப. பெரியசாமித் தூரன்; பதிப்பாசிரியர்: சிற்பி பாலசுப்பிரமணியம்);  பக். 512;  ரூ. 610;  சாகித்திய அகாதெமி,  சென்னை - 18; ✆ 044 - 24311741.

பாரதியார் தாம் வாழ்ந்த காலத்தில் தனது கவிதைகள் நூல்வடிவம் பெற பெரிதும் சிரமப்பட்டார். அவர் மறைவுக்குப் பின்னர், ஓரளவு வெளிச்சம் பெற்றன.  திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டதால்,  சாமானிய மக்களை எளிதில் சென்றடைந்தன. அவர், 'சுதேசமித்திரன்',  'இந்தியா',  'விஜயா', 'சக்கரவர்த்தினி' போன்ற இதழ்களில் எழுதிய படைப்புகள் அதிக வெளிச்சம் பெறாமலே இருந்தன. பிற்காலத்தில் பாரதி ஆய்வாளர்கள்  அவற்றை வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டனர்.  அவர்களில் முதன்மையானவர் 'பாரதி பைத்தியம்' என்றே அறியப்பட்ட  ம.பெ. பெரியசாமித் தூரன்.  அவர் தொகுத்த நூலே இது. 

இத்தொகுப்பில் பெரும்பாலும் கதைகள், கட்டுரைகள், கடிதங்களே இடம்பெற்றுள்ளன. பாரதியார் உலகில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்துகொண்டு அதுகுறித்த தனது கருத்தையும் பதிவுசெய்திருக்கிறார் என்பதை இத்தொகுப்பின் வழி உணரலாம்.

Advertisement

ஜப்பானில் ஹைகூ (ஹொக்கு) கவிதை வடிவம் அறிமுகமானபோது அது குறித்துக் குறிப்பிடும் பாரதியார், 'இதனை சுருங்கச்சொல்லி விளங்கவைத்தல் என்கிறார்கள். நமக்குத் திருக்குறள் இருக்கிறது. அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்' என்கிறார்.

மனிதர்களுக்குத் தொடக்கக் கல்வி தாய்மொழியில் அமையாமல் தமிழின் பெருமையைப் பேசுவதால் பயனில்லை என்று கூறவந்த பாரதியார், 'தமிழிலிருந்து பூமண்டலத்திலுள்ள பாஷைகளெல்லாம் பிறந்து நிற்பதாகக் கூவின மாத்திரத்தாலே ஒருவன் தமிழபிமானியாக மாட்டான். பள்ளிக்கூடத்து சாஸ்திரங்களெல்லாம் தமிழ் பாஷையிலே கற்றுக் கொடுக்கும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி' என்று வெடிப்புறப் பேசுகிறார்.

பேசாப்பொருளை பேசத் துணிந்த பாரதியாரைப் பற்றிப் பலரும் அறியாச் செய்திகளை அறியத் தரும் அரியத் தொகுப்பு இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.