புதிய தலைமுறைகள்
நூல் அரங்கம்புதிய தலைமுறைகள்
புதிய தலைமுறைகள் - வே.சதாசிவன்; பக்.111; சதாசிவன் வெளியீடு, எட்டயபுரம்-628902; ✆ 94435 62574.
கரிசல் வட்டார மொழி இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான தோழர் வெ.சதாசிவனின் 'புதிய தலைமுறைகள்' நூலில் உள்ள சிறுகதைகளின் களத்தை 1960, 1970-ஆம் ஆண்டைய காலகட்டங்களில் நடைபெற்ற விவசாயிகளுக்கு எதிரான ஜப்தி நடவடிக்கை; சமூகத்தின் தனித்து விடப்பட்ட விளிம்பு நிலை மனிதர்கள்; சமூகத்தில் மாற்றத்தின் குரலாக இருக்கிற இளைஞர்களின் எழுச்சி என மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்.
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 10 கதைகள் இடம்பெற்றுள்ளன. 'தண்ணீருக்குள் கண்ணீர்' கதை மக்களிடம் அரசியல் உணர்வு குறைந்து ஜாதியப்பற்று மிகுந்து வருவதை வெளிப்படுத்துகிறது. 'ஒரு நிலத்தின் அழுகுரல்' கதையில் காலங்காலமாக எளிய மனிதர்கள் திட்டமிட்டு ஏமாற்றப்படுவது குறித்து சொல்லப்பட்டுள்ளது.
'ஒற்றைக்கால் மண்டபம்' கதையில் சிறுவனின் சமூகப்பொறுப்பு நம்மிடம் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. 'தீக்கண்ணு' கதை திருந்தி வரும் குற்றவாளியின் புதிய உயிர்த்தெழுதலை கூறுகிறது. இதேபோன்று 'நிலங்காக்கப் போடா', 'ஜப்தியின் முடிவு', 'ஜமீன் சுபேதார்', 'மண் வெறி' என அனைத்து கதைகளிலும் சமூகப் பிரச்னைகள், மக்களின் வாழ்வியல் என பல்வேறு அம்சங்கள் ஆங்காங்கே பரவிக் கிடப்பதை காண முடிகிறது.
இதில் உள்ள சிறுகதைகள் அனைத்தும் கூக்குரலில்லாமல், முரட்டுத்தனமான முழக்கங்கள் இல்லாமல் கலையமைதியுடன் திகழ்வது கூடுதல் சிறப்பு. சமூக அவலங்களை சிறுகதைகளின் வாயிலாக அறியும் நூல் இது.