கம்பரின் கன்னித் தமிழ் ஆழியில்
கம்பரின் கன்னித் தமிழ் ஆழியில் - இடைமருதூர் கி.மஞ்சுளா; பக்.192; ரூ.200; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-600104; ✆ 93805 30884.
கம்பராமாயணம் எனும் ஆழ்கடலில் மூழ்கி தத்துவ முத்துகளை எடுத்து மக்கள் பார்வைக்கு வைத்திருப்போர் பலர். அதில், நூலாசிரியர் 10 கட்டுரைகளைப் படிப்போர் விரும்பும் வியக்கும் நன்முத்துகளாகத் தொகுத்திருப்பது பாராட்டுக்குரியது.
நூலாசிரியர் தனது முன்னுரையில் கூறுவதுபோல, 'ராம அவதாரம் மனித உயர் ஒழுக்கச் சிந்தனையை மனிதராக இருந்து கற்பிக்கும் கடவுளின் விளையாட்டு' என்றே கூறலாம். அத்தகைய ராமபிரானின் பெருமையை விளக்கும் வகையில், 'இறைவண்ணம் எவ்வண்ணம்' எனும் முதல் கட்டுரையில் ராம அவதாரம் ஏன் நிகழ்ந்தது என்பதை தத்துவார்த்த விளக்கமுடன் கூறியுள்ளார். அதில், ராமரை கருமேகத்துக்கும், தாடகையை கருப்பான மை எனும் பொருளிலும் கம்பர் சுட்டியிருப்பதற்கான விளக்கம் இலக்கியச் சுவை மிக்கதாக உள்ளது.
குகனின் அன்பை மலை உச்சி கொம்புத் தேனுக்கு கம்பர் உவமை காட்டியதைச் சுட்டிக்காட்டிய நூலாசிரியர், குகன் ராமனின் உள்ளத்தில் உயர்ந்த இடத்தை பெற்றதற்கான காரணத்தையும் அழகுற கம்பரின் கவிதை மூலம் மட்டுமல்லாது திருக்குறள் வழி நின்றும் விளக்கியிருப்பது தனிச்சிறப்பாகும். இதழியல் துறையில் கம்பர் எனும் கட்டுரையில், கம்பரின் கவிதை மகத்துவத்தை வெளிப்
படுத்தும் நூலாசிரியர், கம்பர் தானியற்றிய ராமாயணத்துக்கு ராமவதாரம் எனப் பெயர்சூட்டியதையும், கம்ப காப்பியத்தில் மிகைப் பாடல்கள் உள்ளதால், அதிகமாக பாடபேதம் நிறைந்த நூலாக அது இருப்பதாகவும் நேர் வழி நின்று விமர்சித்தும் உள்ளார், 'தினமணி'யில் தலைமை உதவி ஆசிரியராக சில காலம் பணிபுரிந்த நூலாசிரியர்.
புதிய கோணத்தில் கம்பராமாயணம் வழி நின்று கம்பனின் கவிப்படைப்பை இளந்தலை முறையினருக்கு எளிய முறையில் எடுத்துரைப்பதாக இந்நூல் அமைந்துள்ளது.