இருபதாம் நூற்றாண்டில் கேரளம்
இருபதாம் நூற்றாண்டில் கேரளம் - முனைவர் அ.பிச்சை; பக்.208; ரூ.240; நியூஸ்மேன் பப்ளிகேஷன், மதுரை - 1; ✆ 98430 08113.
இயற்கை எழில் கொஞ்சும் மாநிலமான கேரளம் கடவுளின் சொந்த நாடாக கருதப்படுகிறது. ஒரு பக்கம் கடலையும், மூன்று பக்கம் மலையையும் எல்லையாக கொண்ட கேரளத்தில் இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு அரசியல், சமூக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனை கம்பம் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவரான முனைவர் அ.பிச்சை சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். இவர் முன்னதாக இருபதாம் நூற்றாண்டில் சென்னை, கொல்கத்தா நகரங்களில் ஏற்பட்ட மாற்றங்களை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கேரளத்தின் வரலாறு, மொழி, இலக்கியம், பண்பாடு, சுற்றுலாத் தலங்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்த நூலை படைத்துள்ளார். நூலின் முதல் அத்தியாயத்தில் வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் கேரளத்தின் ஆதிவழிபாடு முதல் புதிய தலைமுறைத் திரைப்படங்கள் வரையிலான தனிச்சிறப்புகளை பட்டியலிட்டுள்ளார்.
கேரளத்தில் 1911 முதல் 2010 வரை நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் காலவரிசைப்படி அமைக் கப்பட்டுள்ளது சிறப்பு. குறிப்பாக கேரளம் - தமிழகத்தை பிரிக்க முடியாத பண்பாட்டு பகுதி என்ற ஒத்துணர்வை எழுப்பி இரு பகுதி களின் இணையற்ற உறவை வலுப்படுத்தும் பாங்கில் அமைந்த பாரதியின் கேரளச் சித்திரத்தை விளக் கியுள்ளார் ஆசிரியர்.
இந்திய விடுதலைப் போராட்டம் உச்சகட்டத் தை அடைந்த காலகட்டத்தில் கேரளத்தில் நிகழ்ந்த மலபார் கலகம், மார்பக வரி, வைக்கம் போராட்டம், கம்யூனிஸ்டுகளின் தோற்றம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை விளக்க ஆசிரியர் தவறவில்லை.
இந்திய சுதந்திரத்துக்குப் பின் தொழிலாளர் போராட்டத்தின் மூலம் இடதுசாரி கருத்துகள் ஆழமாக காலூன்றியது - இலக்கியத்தின் மறுமலர்ச்சி - பண்பாட்டு வளர்ச்சியை அறிய இந்த நூல் சிறந்த கையேடு.