காவ்யா சண்முகசுந்தரத்தின் பண்பாட்டுத் தடம்- (தொகுப்பும் பதிப்பும்); பழனி.கிருஷ்ணசாமி, பக்.300; ரூ.320; காவ்யா, சென்னை-600 024; ✆98404 80232.
பொள்ளாச்சியைப் பூர்விகமாகக் கொண்ட நூலாசிரியர், பெங்களூரில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நுண்கலைகளில் சிறந்து விளங்கும் இவர், தமிழர் பண்பாட்டு ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.
தமிழ் இலக்கியக் கூறுகள், பண்பாட்டியல் மீது அதீத அக்கறை கொண்ட 'காவ்யா' சண்முகசுந்தரத்தின் முயற்சியால், முத்தமிழில் 1,500-க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து அரும்பணியாற்றி, 'தமிழ் சித்தர்' என்ற அடைமொழியைத் தாங்கியிருக்கிறார். அவருடைய குணநலன்கள், தமிழ்ப் பற்றுதல், இலக்கிய ஆளுமை என்று பன்முகத் தன்மையை இந்த நூல் அலசுகிறது.
'ஓர் ஆளுமையாக உருவாகி', 'நாட்டுப்புறவியல் பாதையில்...', 'புனைவிலக்கியச் சாலையில்...', 'இசைத் தமிழோடும், நாடகத் தமிழோடும் கைகோத்து', 'பேசியபடி ஒரு நடை...' என ஐந்து தலைப்புகளில், 25 கட்டுரைகள் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
கவிஞர் வைரமுத்து, சுப்ரபாரதிமணியன், பாவண்ணன், ஆறு.ராமநாதன், தி.பெரியசாமி, சு.செல்வகுமரன், இரா.நரேந்திரகுமார், முத்துலட்சுமி சண்முகசுந்தரம், ஓ.முத்தையா, பழனி.கிருஷ்ணசாமி, பக்தவத்சல பாரதி, பா.சிங்காரவேலன், ஆ.திருநாகலிங்கம், பெ.சுப்பிரமணியன், பி.கண்ணன், த.பழமலய், க.பஞ்சாங்கம் உள்ளிட்ட தமிழ் இலக்கிய ஆளுமைகள் காவ்யா சண்முகசுந்தரம் குறித்து அலசுகின்றனர்.
சண்முகசுந்தரத்தின் கல்லூரிக் காலம், இலக்கியப் பணி, பன்முகத் திறமைகள், பன்முக அடையாளம், கவித்துவம், உழைப்பு, நாட்டுப்புறவியல் மீதான ஆர்வம், கதைச்சொல்லியாய் அவரது பங்களிப்பு, படைப்பாளுமை போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.