உணவு டெலிவரிக் கதைகள் (நாகரிக வாழ்வில் நவீனச் சுரண்டல்)-அ. இருதயராஜ், பக்.198; ரூ.195; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை - 600 050, ✆ 044 - 26251968.
கரோனா காலத்தில் வளர்ந்து இப்போது உலகில் தவிர்க்க முடியாததாக உருப்பெற்றுவிட்ட விநியோகத் தொழில் குறித்தும் கோடிக்கணக்கில் பணிபுரியும் இதன் தொழிலாளர்கள் குறித்தும் தமிழில் வெளிவந்துள்ள முதல் நூல் எனலாம்.
விநியோகத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பார்வையிலேயே அனைத்தையும் பார்த்திருப்பதாகத் தெரிவிக்கும் ஆசிரியர், உணவு விநியோக செயலிகள் உருவானதில் தொடங்கி, வளர்ச்சிப் போக்கின் அனைத்து நிலைகளையும் விளக்குகிறார்.
மலிவான கூலியைக் கொடுத்து நவீனமாக உழைப்பு எவ்வாறு சுரண்டப்படுகிறது என்பதை, அடிமைப்படுத்தும் அல்காரிதம், சம்பளம் கணக்கிடப்படும் விதம், ஊக்கத் தொகை, சலுகைத் தொகை, உதவித் தொகை என விளக்குவதுடன், நேரடியாகவோ, மறைமுகமாகவோ உழைப்பும் உழைப்பாளிகளும் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்ற தரவுகள் பணியாற்றுவோரிடமிருந்தே பெற்றுத் தரப்பட்டுள்ளன. தவிர, இந்தத் தொழிலில் ஈடுபடுவதன் காரணமாகத் தொழிலாளர்களுக்கு நேரிடும் உடல்நல, மனநலப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படுகின்றன.
நூல் நெடுகிலும் மிக ஆழமாக இந்தத் தொழிலாளர்களின் உளவியல் பிரச்னைகள், இவர்களுடைய குடும்பத்தினரின் மனப்பாரங்கள், மதம், ஜாதி காரணமாக ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் பேசப்படுகின்றன.
இந்த நூலின்வழி யாரும் கண்டுகொள்ளாத ஒரு மனிதக் கூட்டத்தையே மக்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதாக ஆசிரியர் தெரிவித்திருப்பது மிகவும் பொருத்தம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.