மு ற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய உறையூரில் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்து, அருள்பாலித்துக் கொண்டிருக்கிறது அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில்.
திருச்சி நகரின் மேற்குப் பகுதியில் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் இந்த கோயில் உள்ளது. உறையூர் நாச்சியார் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சிறிது தொலைவு மேற்கே நடந்து சென்றால் இக்கோயிலை அடையலாம்.
முற்காலச் சோழர்களின் தலைநகரமாக முனைப்புடன் உறையூர் விளங்கியது பற்றி தாலமி என்ற யவன ஆசிரியரும், (கி.பி.130), பெரிப்ளஸ் என்ற கிரேக்க நாட்டு புவியியல் நூல் (கிபி.246) இவ்வூரை ஒர்த்துரா எனக்குறிப்பிடுகிறது. வடமொழி நூல்கள் உறையூரை உரகபுரம் என்று குறிப்பிடுகின்றன.
மேலும், இந்த ஊர் உறந்தை, கோழி, வாரணம், முக்கீஸ்வரம், வாசபுரி என்ற பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்பட்டு வந்துள்ளன.
தல வரலாறு: ஊர்களை அமைக்கும்போது ஊர்க்காவல் தெய்வங்களை ஊர்களின் எல்லையில் எழுந்தருளச் செய்வதும், வீரமும், வெற்றியளிக்கும் தெய்வங்களையும் வடக்கு நோக்கி அமைப்பார்கள். அதன்படி ஊர் எல்லையிலும், வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில்.
இக்கோயில் அமைந்துள்ளதற்கு மற்றொரு காரணம் கூறப்படுகிறது.
உறையூரில் வன்பராந்தகன் என்னும் அரசன், தனது மனைவி புவனமாதேவியுடன் ஆட்சி செய்த காலத்தில், சாரமாமுனிவர் என்பவர் நந்தவனம் அமைத்து பல்வகை மலர்ச்செடிகளையும் பயிரிட்டு, மலர் கொய்து தொடுத்துத் தாயுமானசுவாமிக்கு அணிவித்து அழகு பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்தநிலையில், பிராந்தகன் என்னும் பூ வணிகண் அரசரிடம் ஆதரவு பெற எண்ணி, நந்தவனத்து மலர்களைப் பறித்து அரசர்க்கு அளிக்கத் தொடங்கினான், அரசரும் உயர்வான மலர்களைக் கண்டு உளம் களித்து, தாயுமானவருக்கு மட்டுமே அணிவிப்பதற்கென சாரமாமுனிவர் அமைத்த நந்தவனத்து மலர்கள் என்று அறிந்தும்கூட, தவறான ஆசையால் வணிகனிடம் நாளும் மலர்களைப் பறித்துவர ஆணையிட்டான்.
நந்தவனத்தில் நாளும் மலர்கள் குறைவதைக் கண்ட சாரமாமுனிவர், ஒருநாள் வணிகன் மலர் கொய்யும் போது பிடித்துவிட்டார். தாயுமானவருக்குரிய மலர்கள் அரசனுக்கு செல்வதைக் கண்டு சினந்து மன்னரிடம் முறையிட்டார். மன்னனோ முனிவரை அலட்சியம் செய்து மலர் வணிகனது செயலை ஊக்குவிக்க, மனம் நொந்து முனிவர் தாயுமானவரிடமே முறையிட்டார்.
தனக்குச் செய்யும் குறைகளைக் கூட தாங்கிக் கொள்ளும் இறைவன், அடியார்க்குச் செய்கின்ற இடர்களைத் தாங்குவதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், மேற்கு முகமாக திரும்பி உறையூரை நோக்கியதால், மண்மாரி பொழியத் தொடங்கியது. இதனால் ஊரை மண் மூடியது.
மக்கள் தங்களைக் காக்க எல்லைத் தெய்வமாக விளங்கிய வெக்காளி அம்மனை விட்டால் வேறுவழியில்லை என்று ஓலமிட்டுச் சரண் அடைந்தனர்.
அன்னை இறைவனை வேண்டினாள். மண் மாரி நின்றது. ஆனாலும், மக்கள் வீடிழந்தனர். வெட்ட வெளியே தங்குமிடமானது. மக்கள் துயர்கண்டு அன்னை வெக்காளியம்மன், உங்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை நானும் உங்களைப் போல வெட்ட வெளியிலேயே இருக்கிறேன் என்று அருளியதாக வரலாறு கூறுகிறது.
இன்றைக்கும் பலர் வெட்ட வெளியே வீடாகக் கொண்டிருக்கின்றனர். அன்னையின் உறுதிமொழி நிறைவேறாததால் இன்றைக்கும் அருள்மிகு வெக்காளியம்மன் வானமே கூரையாகக் கொண்டு அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
கோயில் அமைப்பு: சுற்றிலும் எழில்மிகு மண்டபம் இருக்க நடுவே வெட்டவெளியில் வெக்காளியம்மன் கருவறை உள்ளது. தெற்கு, வடக்கிலும் வாயில்கள் இருந்தாலும், தார்ச்சாலையையொட்டி தெற்கு வாயில் அமைந்துள்ளதால் பக்தர்கள் பெரும்பாலும் இந்த வாயில் வழியாகத்தான் கோயிலுக்குள் வருகின்றனர்.
தெற்கு வாயில் வழியாக கோயிலுக்கு நுழைந்தால் இடது பகுதியில் வல்லபகணபதி சன்னதி உள்ளது. அவரை வணங்கி மேலும் சென்றால் விசாலாட்சியம்மன் உடனுறை விசுவநாதர் சன்னதி உள்ளது.
இதையடுத்து, அருள்மிகு காத்தவராயன், புலிவாகனத்துடன் பெரியண்ணன், மதுரைவீரன் சன்னதிகள் அமைந்துள்ளன. இதைத் தொடர்ந்து நாகப்பிரதிஷ்டையுடன் விநாயகர் சன்னதி இடம் பெற்றுள்ளது.
அடுத்ததாக, உத்சவ அம்மன் சன்னதி உள்ளது. கோயில் திருவிழா காலங்களில் புறப்பாடாகிச் செல்லும் உத்சவ அம்மன் சிலை இங்கு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சன்னதியின் வடக்குச் சுவரில் துர்க்கை அம்மன் சன்னதியும் அமைந்துள்ளது விசேஷமாகும்.
இந்த சன்னதியைத் தொடர்ந்து, சனீசுவரருக்காகத் தனியாக பொங்கு சனீசுவரர் சன்னதியும், கோயிலின் ஈசான்ய மூலையில் நவக்கிரக சன்னதியும் அமைந்துள்ளது.
கருவறை: வடக்கு நோக்கி வீற்றிருக்கும் அருள்மிகு வெக்காளியம்மன், தனது மேற்கரங்களில் வலதுபுறம் உடுக்கையுடனும், இடதுபுறம் பாசம், கீழ்புறம் வலதுகரத்தில் சூலம், இடதுகரத்தில் கபாலத்துடன், வலது காலை மடித்து வைத்து இடதுகாலை தொங்கவிட்டு, அரக்கனை அக்கால் மிதித்துக் கொண்டிருந்தவாறு அருள்பாலிக்கிறார்.
பொதுவாக அம்மன் வலக்காலைத் தொங்கவிட்டு நிலையில் அமைப்பதுதான் வழக்கம். ஆனால், இத்திருக்கோயிலில் வெக்காளியம்மன் இடதுகாலைத் தொங்கவிட்டு வலதுகாலை மடித்து வைத்து அருள்பாலிப்பது விசேஷமாகும்.
பிரார்த்தனை சீட்டுகள்: தொழில் நஷ்டம், கடன் பிரச்னைகள், குடும்பப் பிரச்னை போன்ற பல்வேறு பிரச்னைகள் நீங்கவும், நோய், நொடியின்றி நலமாக வாழவும், கல்வி, பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைய கருவறை அம்மனுக்கு நேர் எதிரில் உள்ள சூலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை கடிதங்களை எழுதி கட்டுவது இன்றைக்கும் வழக்கமாக இருந்து வருகிறது.
இக்கோயிலுக்கு என்று தல விருட்சமோ, தலத் தீர்த்தமோ இல்லை.
பூஜைகள்: தினந்தோறும் காலை 5.15 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு சாத்தப்படுகிறது. இதனால், பக்தர்கள் தொடர்ந்து வெக்காளியம்மனைத் தரிசனம் செய்யலாம். திருவிழாக் காலங்களில் பூஜை நேரங்கள் மாறுபடும்.
காலை 5.30 மணிக்கும், பகல் 12 மணிக்கும் கட்டண அபிஷேக வழிபாடு நடைபெறும். உபயதாரர்கள் பணம் செலுத்தும் நாள்களில் மட்டுமே மாலை 6 மணிக்கு சந்தனக்காப்புடன் கூடிய ஒளிவழிபாடு நடைபெறும். உபயதாரர்கள் இல்லாத நாள்களில் மாலைக்கால வழிபாடு மட்டும் நடைபெறும். இரவு அர்த்தசாம வழிபாட்டுடன் சன்னதி திருக்காப்பிடப்படும்.
பூஜை விவரம்: விசுவரூப வழிபாடு- காலை 5.30, காலை வழிபாடு -காலை 6.15, உச்சிக்கால அபிஷேகம்- பகல் 12; உச்சிக்கால தீப ஒளி வழிபாடு -பகல் 1; மாலை வழிபாடு -மாலை 6.15, இரவு வழிபாடு -இரவு 9.
கட்டணம் செலுத்தினால் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காலை 10.15 மணிமுதல் பகல் 11.30 மணி வரை தங்கக்கவச வழிபாடு உண்டு.
மேலும், மாதந்தோறும் பௌர்ணமி நாள்களில் வெக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
மாதங்களும்- அபிஷேக பொருளும் என்ற அடிப்படையில் விவரம்:
சித்திரை -மரிக்கொழுந்து, வைகாசி- சந்தனம், குங்குமம், பச்சைக்கற்பூரம், பன்னீர், ஆனி -மா, பலா, வாழை, ஆடி -பால், ஆவணி -எள்ளுடன் நாட்டுச் சர்க்கரை, புரட்டாசி -அப்பம், ஐப்பசி -அன்னம், கார்த்திகை -தீபம், மார்கழி -பசுநெய், தை -தேன், மாசி -க்ரத கம்பளம் (போர்வை), பங்குனி -பசுந்தயிர்.
திருவிழாக்கள்: சித்திரை -சித்திரைப் பெருந்தேர் திருவிழா, வைகாசி -கடைசி வெள்ளியில் மாம்பழ அபிஷேகம், ஆனி -மூன்றாவது வெள்ளியில் காய்கறி அலங்காரம், ஆடி -அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேக வழிபாடு, ஆவணி -சத சண்டி வேள்வி மற்றும் பெருந்தீப வழிபாடு, புரட்டாசி -நவராத்திரி விழா -அம்பு போடுதல், கார்த்திகை -தீபவிழா, சொக்கப்பனை கொளுத்துதல், மார்கழி -திருப்பள்ளியெழுச்சி வழிபாடு, தை -வெள்ளிக்கிழமைகள் மற்றும் தைப்பூச நாளில் அம்மன் புறப்பாடு, மாசி -கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ஏகதின லட்சார்ச்சனை, பங்குனி -முதல் வெள்ளிக்கிழமை மலர் முழுக்கு வழிபாடு மற்றும் சித்திரைப் பெருந்திருவிழா ஆரம்பம்.
கட்டண விவரம் : தங்கக்கவசம் (செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்) -ரூ. 750 (காலை 10.15 மணி முதல் பகல் 11.30 மணி வரை), சந்தனக்காப்பு அலங்காரம் (மாலை 5 மணிக்கு) -ரூ. 750, அர்ச்சனைக் கட்டணம் (குங்குமம் உள்பட) ரூ. 2, அபிஷேகம் (தினசரி காலை 5.30 மணி மற்றும் பகல் 12 மணிக்கு) ரூ. 253, காணிக்கைக் கட்டணம் 1-க்கு ரூ. 5, பிராத்தனைச் சீட்டு 1-க்கு ரூ. 10, முடி காணிக்கை 1 க்கு ரூ. 10, சிறப்பு வழிபாடு 1 க்கு ரூ. 5, தனிச்சிறப்பு வழிபாடு 1-க்கு ரூ. 25.
அருகிலுள்ள கோயில்கள்: அரங்கனைக் காதலித்து மணம் கொண்ட மன்னன் மகளான கமலவல்லிக்காக எடுக்கப்பட்ட கமலவல்லி நாச்சியார் திருக்கோயில் உள்ளது. நாயன்மார்களால் பாடப்பெற்ற அருள்மிகு காந்திமதி உடனுறை அய்வண்ணநாதர் திருக்கோயில் (பஞ்சவர்ண சுவாமி கோயில்), தான்தோன்றீசுவரர் திருக்கோயில், செல்லாண்டியம்மன் திருக்கோயில், குழுமாயி அம்மன் கோயில் ஆகியவை உள்ளன.
இக் கோயிலுக்கு அருகில் மலைக்கோட்டை தாயுமானவர் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருவானைக்கா, வயலூர், திருவெறும்பூர், திருநெடுங்குளம், திருவாசி, திருப்பைஞ்ஞீலி போன்ற பாடல்பெற்ற கோயில்கள் உள்ளன. இந்த கோயில்கள் 5 கி.மீ. தொலைவிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவுக்குள் உள்ளன. அனைத்து கோயில்களுக்கும் பேருந்து வசதிகள் உள்ளன.
பேருந்து, ரயில் வசதிகள்: திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையங்களில் இருந்து உறையூர் வழித் தடத்தில் இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகள். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இறங்கி நகர பேருந்துகள் மூலம் கோயிலுக்கு செல்ல வசதி உண்டு. திருச்சி விமான நிலையத்தில் இருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.
கோயிலுக்கு அருகில் தங்கும் விடுதிகள் எதுவும் இல்லை. ஆனால், உறையூர் கடைவீதியில் பல விடுதிகள் உள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் கட்டணம் வெவ்வேறு விகிதமாக வாங்கப்படுகிறது. குறைந்தது ரூ. 250 முதல் தங்கலாம்.
உயர்ரக விடுதிகள் தங்க வேண்டும் என்றால் மத்திய பேருந்து நிலையத்தில் பல்வேறு விடுதிகள் உள்ளன. இந்தப் பகுதியில் குறைந்தது ரூ. 500 - க்கும் மேல்தான் விடுதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
திருக்கோயில் நிர்வாகத்தை செயல் அலுவலர், வெக்காளியம்மன் திருக்கோயில், உறையூர் -620003, தொலைபேசி எண் -0431- 2761869 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
www.vekkaaliammantemple.org என்ற கோயில் இணையதள முகவரியிலும், vekkaaliamman@sancharnet.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.