முகப்பு
ஆன்மிகம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயில்

ஸ்ரீராமர் லிங்க வடிவில் ஈஸ்வரனை பூஜை செய்த இடம் என்பதால், ராமேசுவரம் என்று அழைக்கப்படுகிறது. ராமநாத சுவாமி கோயில், மாவட்டத் தலைநகரான ராமநாதபுரத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில், வங்கக் கடலில் உயரே இருந

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:25 PM
பகிர்:

ஸ்ரீராமர் லிங்க வடிவில் ஈஸ்வரனை பூஜை செய்த இடம் என்பதால், ராமேசுவரம் என்று அழைக்கப்படுகிறது.

ராமநாத சுவாமி கோயில், மாவட்டத் தலைநகரான ராமநாதபுரத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில், வங்கக் கடலில் உயரே இருந்து பார்க்கும்போது, சங்கு போன்ற வடிவில், சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆலயமாகும்.

ஸ்ரீராமரே வணங்கியதால் ராமேசுவரத்திலுள்ள சிவலிங்கத் திருமேனிக்கு ஸ்ரீராமநாதர் என்ற பெயர் வந்ததாக ஐதீகம்.

மூலஸ்தான லிங்கம் சிதையால் ஆக்கப்பெற்று, ஸ்ரீராமபிரானால் புனிதமாக்கப் பெற்றதாகும்.

ஸ்ரீராமநாதரும், ஸ்ரீபர்வதவர்த்தினி தாயாரும் மூலவர்களாக இருந்து அருள்பாலிக்கின்றனர்.

ஆலயச் சிறப்புகள்: ராமேசுவரம் திருக்கோயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய முப்பெருமைகளை உடையது.

பனிரெண்டு ஜோதிர்லிங்க தலங்களுள், வடக்கே பதினொன்றும் தெற்கே ஒன்றுமாக (ராமேசுவரம்) அமைந்துள்ள ஆலயம்.

ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, சிவபெருமானை ஸ்ரீராமர் வழிபட்ட தலமாகும்.

இங்கு அக்னிதீர்த்தக் கடலிலும், புனித தீர்த்தங்களிலும் நீராடினால் பிதுர்க்கடன்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், தாயுமானவர் சுவாமிகள் பாடல் பெற்ற தலமாகும்.

ஆலயத்தின் அமைப்பும், அடுக்கடுக்கான பிரகாரங்களும் தென்னிந்திய சிற்பக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

1,212 அழகிய தூண்களும் 2,250 அடி சுற்றளவும் கொண்ட மூன்றாம் பிரகாரம், உலகிலேயே மிகப்பெரிய முற்றமாகவும், உலக அதிசயங்களில் எட்டாவது அதிசயமாகவும் உள்ளது.

இத்திருக்கோயிலின் உள்ளே 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபடுவது, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத தனிச் சிறப்பு.

காசியிலிருந்து தொடங்கும் யாத்திரை, ராமேசுவரத்திலுள்ள அக்னிதீர்த்தத்தில் நீராடி, இறைவனை தரிசித்த பிறகே நிறைவு பெறுகிறது.

இத்தகு சிறப்புவாய்ந்த கோயிலின் திருப்பணிகளை ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களும், தேவகோட்டை ஜமீன்தாரர்களும் வழிவழியாகச் செய்து வந்துள்ளனர்.

திருவிழாக்கள்: மாசி மாத மகா சிவராத்திரி, வைகாசி வசந்தோற்சவம், ஆனி மாத ராமலிங்க பிரதிஷ்டை உற்சவம், திருக்கல்யாணத் திருவிழா, நவராத்திரி விழா, கந்தசஷ்டி விழா, ஆருத்ரா தரிசன விழா ஆகியன முக்கிய விழாக்களாகும்.

யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு வசதியாக திருக்கோயில் மூலமாக 9 விடுதிகளும், பல தனியார் விடுதிகளும் உள்ளன.

மேலும் விபரங்களுக்கு: இணையதள முகவரி: ழ்ஹம்ங்ள்ஜ்ஹழ்ஹம்ற்ங்ம்ல்ப்ங்.ர்ழ்ஞ் இ-மெயில்: ப்ர்ழ்க்ழ்ஹம்ய்ஹற்ட்ஃள்ஹய்ஸ்ரீட்ஹழ்ய்ங்ற்.ண்ய் கோயில் அலுவலக தொலைபேசி எண்கள் 04573-221223, 221241, பேக்ஸ் -04573-223230.

மேலும் பார்க்க வேண்டிய இடங்கள்:

அருள்மிகு கோதண்டராமர் கோயில்: இத்திருக்கோயில், ஸ்ரீராமநாத சுவாமி ஆலயத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது.

விபீஷணர் சரணாகதி அடைந்ததும், லக்குவணன் அவருக்கு முதல் பட்டாபிஷேகம் நடத்தி வைத்ததும் இந்த இடத்தில்தான் எனப் புராணத்தில் உள்ளது.

கந்தமான பர்வதம்: ராமேசுவரம் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயிலில் இருந்து, வடக்கே 2 கி.மீ. தொலைவில் மண்மேட்டில் இம்மண்டபம் இருக்கிறது.

இம்மண்டபத்தில் ராமர் பாதங்கள் பட்ட தடங்கள் இருப்பதால், இதனை பக்தர்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.

இந்த மண்டபத்தின் உச்சியிலிருந்து பார்த்தால், நகரின் அழகிய தோற்றமும், தீவின் சில பகுதிகளையும் பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.