முகப்பு
ஆன்மிகம்

நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத் திருநாள் கொடியேற்றம்

திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருநாள் கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:35 AM
பகிர்:

திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருநாள் கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மூலத் திருநாள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதன்பின்பு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. நமச்சிவாய முழக்கத்துடன் பக்தர்கள் வழிபட்டனர்.

தொடர்ந்து 10 நாள்கள் திருவிழா நடைபெற உள்ளது. இம் மாதம் 28 ஆம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி-அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மர மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும் பஞ்சமூர்த்திகள் உலா திருநெல்வேலியின் நான்கு ரத வீதிகளிலும் நடைபெற உள்ளது.

செப்டம்பர் 2 ஆம் தேதி கரூர் சித்தர் மானூரில் எழந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு 9 மணிக்கு கரூர் சித்தர் திருநெல்வேலியில் ரத வீதிகளில் உலா வந்து, சங்கரன்கோவில் சாலை வழியாக மானூரில் உள்ள அம்பலவாண சுவாமி கோயிலைச் சென்றடைய உள்ளார்.

10 ஆம் திருநாளான செப்டம்பர் 3 ஆம் தேதி நள்ளிரவில் அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் இருந்து  சந்திரசேகரர்,  பவானிஅம்பாள், பாண்டியராஜா, சண்டிகேஸ்வரர்,தாமிரபரணி,  அகஸ்தியர்,  குங்குலிய கலய நாயனார் ஆகிய மூர்த்திகள் பல்லக்கிலும், சப்பரத்திலும் எழந்தருளி திருநெல்வேலியில் 4 ரத வீதிகளிலும் வீதியுலா வருவார்கள்.

பின்னர் சங்கரன்கோவில் சாலை வழியாக ராமையன்பட்டி ரஸ்தா வழியாக 4-9-2014 அன்று காலை 5 மணிக்கு மானூர் சென்றடைய உள்ளனர்.இதைத்தொடர்ந்து மானூர் அருள்மிகு அம்பலவாண சுவாமி கோயிலில் வைத்து கரூர் சித்தருக்கு சாபவிமோசனம் நிவர்த்தி செய்தலும், காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் வரலாற்று புகழ்மிக்க புராண பாடல் பாடப்பெற்ற ஆவணி மூலம் மண்டபத்தில் வைத்து நெல்லையப்பர்-காந்திமதியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ந.யக்ஞநாராயணன் மற்றும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →