முகப்பு
ஆன்மிகம்

கந்த சஷ்டி விரத முறை! யாரெல்லாம் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்?

கந்தர் சஷ்டி விரதம் என்ற பிரபலமான விரதம் ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்துப் பிரதமை..

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:32 AM
கந்த சஷ்டி விரத முறை
பகிர்:

கந்தர் சஷ்டி விரதம் என்ற பிரபலமான விரதம் ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலும் ஆறுநாட்களுக்கு ஸ்ரீ முருகப் பெருமானைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதமாகும்.

அனைத்து சிவ ஆலயங்களிலும் இந்த ஆறு தினங்களும் முருகனுக்கு கந்தர் சஷ்டி உற்சவம் கொண்டாடப்பெறும். ஆறுபடை வீடுகளிலும் பிற முருகன் தலங்களிலும் இத்திருவிழா மேலும் சிறப்பாக நடைபெறும்.

இந்த விரதத்தின் முக்கியத்துவம் என்னவென்றால் அய்யன் முருகனை எந்த நேரமும் நினைத்து இருக்க வேண்டுமே தவிர, பட்டினி இருந்து தான் முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயமில்லை. நம் உடல் வலிமைக்கு ஏற்றவாறு உண்ணாவிரதத்தை மேற்கொள்ளலாம். 

Advertisement

முருகன் கோயிலுக்கு சென்று தான் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இல்லை. நாம் இருக்கும் இடத்திலேயே விரதத்தை தொடரலாம். நம் மனமது செம்மையாக வேண்டும், இறைவனிடம் முழுமையாக சரணாகதி அடைய வேண்டும் என்பதே முக்கியமாகும்.

யாரெல்லாம் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்..

அனைவரும் கலந்துகொள்ளும் விரதம் தான் கந்தசஷ்டி. உதாரணமாக சொத்து வாங்கி இருப்போம். அதில் ஏதேனும் வில்லங்கம் இருக்கலாம். இல்லையெனில் சொத்து வாங்க பணம் கொடுத்திருப்போம், ஆனால் பத்திரப் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம். வீடு கட்ட அஸ்திவாரம் போட்டிருப்போம்..ஆனால் கட்ட முடியாத சூழ்நிலை உண்டாகுதல். 

வேலையில் கடுமையான உழைப்பு இருந்தும், அதற்கான அங்கீகாரம் இல்லாது இருத்தல், பதவி உயர்வு தள்ளி போகுதல், தொழிலில் மேன்மை இல்லாதிருத்தல், வாழ்க்கையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் சூனியமாக இருத்தல் இவர்கள் அனைவருமே இந்த விரதத்தை மேற்கொண்டு மேன்மை அடையலாம். குலதெய்வத்திற்குச் சென்று வழிபட முடியாமல் இருந்தாலும் இந்த விரதத்தின் மூலம் அதைச் சரிசெய்யலாம். சுபநிகழ்ச்சிகள் தடை ஏற்படுவர்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். 

விரத முறை

இந்த ஆறு நாட்களும் விரதமிருப்பவர்கள் காலையில் நீராடி, உபவாசம் இருத்தல் வேண்டும். கோவிலிலோ அல்லது இல்லத்திலோ முருகனை வழிபாடு செய்து பாராயணம் செய்யலாம். இக்காலங்களில் திருப்புகழ், கந்தர் சஷ்டிக் கவசம், சண்முகக் கவசம் ஆகியவற்றைப் பாராயணம் செய்தல் சிறப்பாகும்.

ஆறு தினமும் உபவாசம் இருந்து ஆறாம் நாள் இரவு பால் பழம் சாப்பிடலாம். உடல்நிலை இடம் கொடுக்காதவர்கள் தினமும் ஒரு வேளை மதியமோ, அல்லது இரவோ பலகாரமோ அல்லது பால் பழமோ சாப்பிட்டுக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments