ஆன்மிகம்

இன்று ஸ்ரீ ராம நவமி! ராம நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருங்கள்!!

தினமணி

பங்குனியில் நவமி திதியும், புனர்பூசம் நட்சத்திரமும் இணையும் நாளில் கொண்டாடப்படுவது தான் ஸ்ரீ ராமநவமி. மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம். சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று இவர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். 

தசரதரின் மகனாகப் பிறந்த ராமன், தந்தையின் சொல் கேட்டு அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக, காட்டிற்குச் சென்றார். 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தார். இவ்வேளையில் சீதையையும் பிரிந்தார். ஏகபத்தினி விரதனாக இருந்த ராமபிரானின் வாழ்க்கை, மனிதர்களுக்கு பல அரிய வாழ்க்கை முறைகளை போதிக்கிறது. ராமன் காட்டிய அயணம் (பாதை) என்பதால்தான், இவரது வரலாற்று நூல் ராமாயணம் எனப் பெயர் பெற்றது.

தமிழகத்தில் நாகையநல்லூர் என்னும் திருத்தலத்தில் கொண்டாடப்படும் ஸ்ரீராமநவமி உற்சவம் சற்று வித்தியாசமானது.

நாகையநல்லூரில் ஸ்ரீராம நவமி உற்சவத்தை முன்னிட்டு தினமும் உபன்யாசம், நடிப்புடன் கூடிய கதா காலட்சேபம் ஆகியவை சிறப்புற நடைபெறும். இந்த விழாவின் கடைசி நாளன்று சீதாராம திருக்கல்யாணம் நடைபெறும். அன்று அங்கு வரும் பக்தர்களுக்குத் திருமண விருந்து அளிக்கப்படும்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து முசிறி சென்று, அங்கிருந்து காட்டுப் புத்தூர் என்னும் ஊருக்குச் சென்றால் நாகையநல்லூர் செல்லலாம். அங்கிருந்து அக்ரஹாரம் தெருவில் உள்ளது ஸ்ரீராமர் கோயில். இங்கு நடைபெறும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஸ்ரீ சீதாராம திருமண வைபவத்திற்குப் பின் பக்தர்களுக்கு விருந்தளிக்கும் நிகழ்ச்சி சிறப்பானது. இந்த விருந்தில் கலந்து கொண்டாலே நம் பாவங்கள் நசிந்து புண்ணியம் சேரும் என்கிறார்கள்.

தார்சாலையில் அமைக்கப்பட்ட சுமார் 200 மீட்டர் நீளமும், ஐந்து மீட்டர் அகலமும் கொண்ட கீற்றுப் பந்தலின் கீழ், எவ்விதத் தரை விரிப்பும் இன்றி பக்தர்கள் வரிசையாக அமர்ந்து கொள்வார்கள். அனைவருக்கும் தலைவாழை இலை போடப்படும். இனிப்புடன் பதினாறு வகைக் காய்கறிகளுடன் வடை, அப்பளம், பாயசம் என்று உணவு வழங்கப்படுகிறது. 

அத்துடன் விருந்து உண்ணும் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் தட்சணை வழங்குகிறார்கள். விருந்து சாப்பிட்டதும் இலையை மூடக்கூடாது. அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் சிலர் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக அந்த இலைகளின் மீது அங்கப்பிரதட்சணம் செய்கிறார்கள். சிலர் அந்த இலைகளைத் தலைமேல் வைத்து எடுத்துச் செல்கிறார்கள்.

இத்திருமண வைபவத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயருடன் முனிவர்கள், தேவர்கள் ஆகியோர் மானசீகமாக விருந்தில் கலந்து கொண்டு, அடியார்களோடு அடியார்களாகச் சாப்பிட்டிருப்பார்கள் என்பது நம்பிகை. அதனால் அவர்கள் சாப்பிட்ட இலைகளில், குறிப்பாக அனுமனும் சாப்பிட்டிருப்பதால் அந்த இலைகளில் அங்கப்பிரதட்சணம் செய்கிறார்கள். இதனால் ராமனின் திருவருள் எளிதில் கிட்டும் என்பது ஐதீகம்.

"ராமா' என்ற திருநாமத்தை யார் ஒருவர் பன்முறை ஜபிக்கிறார்களோ, அவர்களுக்கு சீதாபிராட்டி, லட்சுமணன், ஸ்ரீஆஞ்சநேயருடன் ஸ்ரீராமபிரான் காட்சி தருவார் என்பது ஆன்றோர் கூற்று. ராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.

வழிபடும் முறை

ஸ்ரீராமநவமி இந்நாளில், ராமர் படத்தை பூஜையறையில் வைத்து, பொங்கல், பருப்பு வடை, நீர்மோர், பானகம், பாயசம், வெள்ளரிக்காய் படைத்து வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். இன்று முழுவதும் ராமபிரானை எண்ணிக்கொண்டு ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம்.

ஸ்ரீ ராம ஜெயம்..! ஸ்ரீ ராம ஜெயம்..! ஸ்ரீ ராம ஜெயம்..! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

SCROLL FOR NEXT