திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி  - பாடல் 2

என். வெங்கடேஸ்வரன்

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
                    அகன்றது உதயம் நின் மலர்த் திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ நயனக் கடிமலர் மலர
                             மற்றண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
        திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே அலைகடலே
                                   பள்ளி எழுந்தருளாயே.  

பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

விளக்கம்

அருணன் = சூரியனின் தேரோட்டி. இந்திரன் திசை = கிழக்கு. கடி மலர் = நறுமணம் உடைய மலர். அறுபதம் = ஆறு கால்களை உடைய வண்டு. இறைவனை கடலுக்கும் மலைக்கும் ஒப்பிடுவது திருமுறை மரபு. அளவற்ற ஆழமும் எல்லையற்ற பரப்பும் கொண்டுள்ள கடல் தன்னுள்ளே முத்து, பவளம் ஆகிய விலை மதிப்பற்ற பொருட்களை வைத்துள்ளது. அதேபோன்று அமைதி, நிலையான ஆனந்தம் வீடுபேறு ஆகிய எளிதில் கிடைக்காத பொருட்கள் இறைவனிடத்தில் உள்ளன. இறையுணர்வில் ஆழ்ந்து ஈடுபடுவோருக்கு அவை கிடக்கும் என்பதை உணர்த்த கடலினை உவமையாக கூறுகின்றார். பல வளங்கள் கொண்டு, உயர்ந்தும், பரந்தும் காணப்படும் மலையின் மேற்பாகத்தைத் தான் நாம் காண்கின்றோம். பூமியின் அடியில் புதைந்து கிடைக்கும் பாகம் நமது கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோன்று, நாம் நமது மனதினில் நினைத்து அனுபவிக்கும் இறைவனது தன்மைகளும், அவனது உண்மையான தன்மைகளில் ஒரு சிறு பகுதியே. இந்த கருத்தினை உணர்த்தும் பொருட்டு மலையே என்று இங்கே கூறுகின்றார்.    

பொருள்

சூரியனின் தேரோட்டியாகிய அருணன், இந்திரனின் திசையாகிய கிழக்கு திசையை அணுகுகின்றான். அதுவரை சூழ்ந்திருந்த இருள் அகன்று உதயமாகும் சூரியனின் ஒளி எங்கும் பரவுகின்றது. இறைவனே, உனது மலர் போன்று திருமுகத்தில் உள்ள கண்கள் மெதுவாக மலர்கின்றன. அவ்வாறு மலரும் கண்களிலிருந்து வெளிப்படும் கருணைத் தேனைப் பருக, அடியார்களின் கண்கள், ரீங்காரம் செய்யும் வண்டுகள் மலர்ந்த மலரினை மொய்ப்பது  போன்று, உனது அழகிய கண்களை நோக்குகின்றன. உனது திருவருளாகிய ஆனந்தத்தை அள்ளித் தரவிருக்கும் மலையே, விரிந்து பரந்த கடல் போன்று கிடைத்தற்கரிய ஆனந்தம், திருவருள் மற்றும் வீடுபேறு ஆகிய செல்வங்களை உடையவனே, திருப்பெருந்துறை தலத்தில் உறையும் இறைவனே, நீ பள்ளி எழுந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT