திருப்பாவை

திருப்பாவை - பாடல் 14

உங்களது வீட்டின் புழக்கடை தோட்டத்து குளத்தில்

என். வெங்கடேஸ்வரன்

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கு இடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்

பாடியவர் - பவ்யா ஹரி


விளக்கம்

வரும் நாட்களில் பாவை நோன்பு அனுசரிப்பது பற்றி சிறுமிகள் ஒன்று கூடி, முந்தைய நாளில் பேசியபோது அனைவர்க்கும் முன்னமே எழுந்து, தானே ஒவ்வொருவரையும் எழுப்புவேன் என்று கூறிய சிறுமி அவ்வாறு, செய்யாததால், அவளைத் தேடிக்கொண்டு அவளது வீட்டிற்கு சென்ற மற்ற சிறுமிகள் பாடும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. முந்தைய நாட்களில் வாய் கிழிய பேசிய சிறுமி, தான் சொல்லியவாறு முன்னம் எழுந்திருந்து அடுத்தவரை எழுப்பாத நிலை சுட்டிக்காட்டப்பட்டு பரிகாசம் செய்வதை நாம் உணரலாம். ஆண்டாள் பிராட்டியார் காலத்தில், காலையில் கோயில்கள் திறக்கப்பட்டதை அனைவர்க்கும் உணர்த்தும் முகமாக சங்குகள் முழங்கின போலும். வாய்ச்சொல் வீராங்கனை என்பதை உணர்த்தும்வண்ணம் நாவுடையாய் என்று கேலியாக பேசுவதை நாம் உணரலாம்.

பொழிப்புரை

உங்களது வீட்டின் புழக்கடை தோட்டத்து குளத்தில், செங்கழுநீர் மலர்கள் பூத்துவிட்டன, அதில் இருந்த அல்லி மலர்கள் கூம்பியாறு காணப்படுகின்றன. இந்த காட்சியை நீ இன்னும் காணவில்லை போலும்; இந்த காட்சியைக் கண்டு பொழுது புலர்ந்ததை நீ அறிந்துகொள்வாயாக. சுட்ட செங்கற்களின் பொடியின் நிறத்தில் உள்ள காவி உடையினையும் வெண்மை நிறைந்த பற்களையும் கொண்டுள்ள தவசிகள், தங்களது பொறுப்பில் உள்ள திருக்கோயில்களில் சங்குகள் முழங்க வேண்டும் என்ற கருத்துடன், திருக்கோயில்களைத் திறப்பதற்காக சென்றுள்ளார்கள். ஆனால், எங்களை முன்னம் வந்து எழுப்புவேன் என்று நேற்று பேசிய நீ, வெறும் வாய்ச் சொல் வீரர் போன்று, இன்னும் வெட்கமில்லாமல் உறங்குகின்றாயே, நீண்ட நாவினை உடைய பெண்ணே, உடனே எழுவாயாக, எங்களுடன் சேர்ந்து, சங்கினையும் சக்கரத்தினையும் ஏந்தும் நீண்ட கைகளை உடையவனும், தாமரை மலர்கள் போன்ற கண்களை உடையவனும் ஆகிய கண்ணனைப் பாடுவாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் இந்திய அணி!

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் ‘ஷிபு சோரன்!’ -ஜார்க்கண்ட் முதல்வர் உருக்கம்!

எஸ்எஸ்சி தேர்வர்கள் போராட்டம்: தேர்வு நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவு!

மாசாணி அம்மன் கோவிலில் விமலின் புதிய படப் பூஜை!

SCROLL FOR NEXT