நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழுப்பிப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்
பாடியவர் - பவ்யா ஹரி
விளக்கம்
நோன்பு நோற்பதில் விருப்பமுள்ள சிறுமிகள் அனைவரும் ஒன்றுகூடி, மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு, கண்ணபிரான் இருக்கும் நந்தகோபனின் திருமாளிகைக்கு வருகின்றார்கள். ஆங்குள்ள வாயில் காப்பானை நோக்கி, கதவுகளை திறக்குமாறு வேண்டும் பாடல். எதற்காக அதிகாலையில் வந்தீர்கள் என்று வாயிற்காவலன் வினவினான் போலும். அதற்கு விடையளிக்கும் முகமாக கண்ணன் பறைக்கருவி தருவதாக வாக்களித்தமையால் அதனைப் பெற்றுக்கொள்வதற்காக வந்தோம் என்று கூறும் பாங்கினை நாம் உணரலாம்.
பொழிப்புரை
எங்கள் அனைவருக்கும் நாயகனாக உள்ள நந்தகோபனின் திருமாளிகை வாயில் காப்பானே, கொடிகள் கட்டப்பட்டு அழகாக விளங்கும் தோரண வாயிலை காப்பவனே, அழகிய மணிகள் கட்டப்பட்டு விளங்கும் கதவின் தாளினை நீக்கி, நாங்கள் அனைவரும் உள்ளே புகுவதற்கு வழிவிடுவாயாக. அனைவரும் வியக்கத்தக்க வகையில் பல மாயச் செயல்கள் புரிபவனும், மணி போன்று ஒளிவீசும் திருமேனியை உடையவனும் ஆகிய கண்ணன், நேற்றே, ஆயர் சிறுமிகளாகிய எங்கள் அனைவருக்கும் பறைக் கருவி தருவதாக வாக்களித்தான். நாங்கள் அனைவரும் தூய்மையான உள்ளத்துடன், கண்ணனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடி அவனை எழுப்பி, அவனிடமிருந்து பறை இசைக்கருவி பெறுவதற்காக இங்கே வந்துள்ளோம். உன்னை வணங்கிக் கேட்கின்றோம், எங்களது கோரிக்கையினை மறுக்கும் வகையில் உனது வாயால் மாற்று மொழி ஏதும் பேசாமல், வாயில் கதவினை அன்புடன் பிணைத்திருக்கும் தாளினை நீக்கி, நாங்கள் உள்ளே செல்வதற்கு உதவுவாயாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.