திருவெம்பாவை

திருவெம்பாவை - பாடல் 20

என். வெங்கடேஸ்வரன்

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்


பாடியவர் - பொன் முத்துக்குமரன்
 

விளக்கம்

இந்தப் பாடல் முழுவதும் இறைவனின் திருவடிப் பெருமையை பேசுகின்றது. ஐந்து தொழில்களையும் இறைவன் செய்யும் தன்மையை, இறைவனின் திருவடிகளுக்கு ஏற்றி, தோற்றமாகவும், போகமாகவும் (இன்ப துன்பங்களை அளித்து காக்கும் நிலை), ஈறாகவும், மறைந்து இருக்கும் பொருளாகவும், அனைத்து உயிர்களும் உய்வதற்கான வழியாகவும் விளங்கும் தன்மை இங்கே கூறப்படுகின்றது. திருவடிகளை நாம் பற்றிக்கொண்டால் தான் உய்யமுடியும் என்பதால், இறைவன் கருணை கூர்ந்து அவனது திருவடிகளை, நாம் பற்றிக்கொள்வதற்கு ஏதுவாக, நமக்கு அருள வேண்டும் என்ற கோரிக்கை இங்கே வைக்கப்படுகின்றது.

பொருள்

எங்கள் தலைவனே, அனைத்துப் பொருட்களுக்கும் ஆதியாகத் திகழும் உனது திருவடித் தாமரையை எங்களுக்கு அருள்வாயாக. அனைத்துப் பொருட்களுக்கும் இறுதியாக இருக்கும் சிவந்த மலர் போன்ற திருவடிகளை எங்களுக்கு அருள்வாயாக. அனைத்து உயிர்களையும் தோற்றுவிக்கும் பொன்னான திருவடிகளை எங்களுக்கு அருள்வாயாக. அனைத்துப் பொருட்களையும் காத்தும், இன்ப துன்பங்களை நுகரச் செய்தும் அருள் புரியும் பூ போன்ற திருவடிகளை எங்களுக்கு அருள்வாயாக. ஊழிக்காலத்தில் அனைத்து உயிர்களும் ஒடுங்குவதற்கு உரிய இடமாக விளங்கும் திருவடியை எமக்கு அருள்வாயாக. திருமாலும் நான்முகனும் கண்டு அறியமுடியாத தாமரை போன்ற திருவடிகளை எங்களுக்கு அருள்வாயாக. எங்களை எல்லாம் ஆட்கொண்டு உய்விக்கும் பொன் மலர் போன்ற திருவடிகளை எமக்கு அருள்வாயாக. நாங்கள் செய்யும் மார்கழி நீராடலும், பாவை நோன்பும் உமது அருள் எங்களுக்கு கிட்டுவதற்கு வழி வகுக்க வேண்டும். மார்கழி நீராடலையும், உம்மையும், உமது திருவடிகளையும், இறைவனே நாங்கள் போற்றுகின்றோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT