முகப்பு
திருவெம்பாவை

திருவெம்பாவை - பாடல் 7

தேவர்கள் பலரும் நினைப்பதற்கு அரியவனும்

Updated On : 25 டிசம்பர், 2017 at 4:56 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:51 PM

அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென்று எல்லோமும்
சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.


பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் - சுந்தர் ஓதுவார்
 

Advertisement

விளக்கம்

உன்னுதல் = நினைத்தல். பேதை என்ற சொல் இங்கே பெண்ணின் பருவத்தை குறிப்பதல்ல, அறிவிலி என்ற பொருள்பட அமைந்துள்ளது. இந்த பாடல் முழுவதும் எழுப்ப வந்தவர்களின் கூற்றாக அமைந்துள்ளது. சின்னம் என்பதற்கு இருவகையான பொருள்கள் கூறப்படுகின்றன. பெருமானுடன் தொடர்புகொண்ட, திருநீறு, உருத்திராக்கம், இடபம் என்பன முதல் பொருள். சங்கு, தாரை போன்று அதிகாலையில் இசைக்கப்படும் இசைக்கருவி என்பது இரண்டாவது பொருள். உள்ளே உறங்கிக்கொண்டிருக்கும் பெண்மணியின் செயல்பாடுகள், பெருமான் மீது அவளுக்கிருந்த ஆழ்ந்த பக்தியை குறிப்பிடுவதாக உணர்ந்த தோழிகளுக்கு, அவள் இன்னும் உறங்கிக்கொண்டிருப்பது வியப்பை அளிக்கின்றது. அதனால்தான் என்னே என்ற வியப்புக் குறியுடன் தங்களது பேச்சினைத் தொடங்குகின்றார்கள். யானை சிறுவர்களையும் பெரியவர்களையும் ஒரு சேர கவரும் தன்மை வாய்ந்த மிருகம். உருவில் பெரியதாக இருந்தாலும் பழகுவதற்கு இனிய மிருகம், அதேபோன்று, அனைவர்க்கும் பெரியவனாகிய பெருமானுடன் பழகப் பழக, நாம் அவனது எளிய தன்மையை புரிந்துகொள்ளலாம். எனவே பெருமானை யானையுடன் இங்கே மணிவாசகர் ஒப்பிடுகின்றார். தென்னாடு உடைய சிவனே என்று முழக்கம் இடுவது அடிகளார் காலத்தலும் பழக்கத்தில் இருந்தது போலும்,

பொருள்

தேவர்கள் பலரும் நினைப்பதற்கு அரியவனும், ஒப்பற்ற ஒருவனும், மாபெரும் சிறப்பை உடையவனும் ஆகிய சிவபெருமானை நினைத்து, அதிகாலை நேரத்தில் சின்னங்கள் ஒலிக்கும்போது, சிவ சிவ என்று சொல்பவளே, தென்னாட்டுக்கு உரிய சிவனே என்று எவரேனும் சொல்வதற்கு முன்னமே, தீயினைச் சாரும் மெழுகு போன்று உருகும் உள்ளத்தை உடையவளே, நேற்று வரை இவ்வாறு இருந்த உனக்கு இன்று என்ன நேர்ந்துவிட்டது, உனது தற்போதைய நிலை எங்களுக்கு மிகவும் வியப்பாக உள்ளது. அனைவர்க்கும் பெரியவனாகிய பெருமான் யானை போன்று பழகுவதற்கும் நாம் சிந்திப்பதற்கும் நினைப்பதற்கும் மிகவும் எளியவன் என்றும், எங்களது தலைவன் என்றும், அமுதம் போன்று எங்களுக்கு இனிமையானவன் என்றும், நாங்கள் ஒன்றாக சேர்ந்தும், தனித்தனியாகவும், அவனது புகழினைப் பாடுகின்றோம். அதனைக் கேட்ட பின்னரும் உறக்கத்தில் ஆழ்ந்து இருக்கின்றாயே, வலிய நெஞ்சம் கொண்ட அறிவில்லாத பெண் போன்று, எந்த விதமான தாக்கமும் இல்லாமல் இருக்கின்றாயே, இவ்வாறு இருப்பதும் உனது பண்பு போலும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.