ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை
ஆலங் குடியான்என்று ஆர்சொன்னார்-ஆலம்
குடியானே யாகில் குவலயத்தோ ரெல்லாம்
மடியாரோ மண்மீதினில்
- காளமேகப் புலவர்
நவகிரகத் தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயில் திருவாரூர், வலங்கைமான் வட்டத்தில் இருக்கிறது. சோழவள நாட்டில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்குத் தென் கரையில் உள்ள 127 தலங்களில் 98-வது தலமாக விளங்குகிறது இத்திருத்தலம்.
மிகவும் பிரசித்தி பெற்ற குருபரிகாரத் தலமாகிய ஆலங்குடி, மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்டது.
தல வரலாறு
இத்திருத்தலம் காவிரி நதியின் கிளை நதியான வெட்டாற்றின் கரைக்கு அருகே அமைந்துள்ளது. பாற்கடல் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காத்து ரட்சித்தமையால் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. அசுரர்களால் தேவருக்கு நேர்ந்த இடுக்கண்களைக் களைந்து காத்தமையால் இத்தல விநாயகருக்குக் கலங்காமற் காத்த விநாயகர் எனப் பெயர் உண்டாயிற்று. அம்மையார் தவம் செய்து இறைவனைத் திருமணம் செய்த சிறப்பும் கொண்டதால், திருமணம் நடந்த இடத்திற்கு திருமண மங்கலம் எனப் பெயர் வழங்கப்பெறுகிறது.
மத்தியார்சுனம் ஆகிய திருவிடைமருதூர் மகாலிங்க பெருமானுக்கு பரிவாரத் தலமாக விளங்குகிறது. பஞ்ச ஆரண்ய தலங்களில் நான்காவதாகச் சாயரட்சைக்கு உகந்த திருத்தலமாக விளங்குகிறது. முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சர் சிவ பக்தரான அமுதோகர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாகும் இத்திருக்கோயில். அமைச்சர் செய்த சிவ புண்ணியத்தில் பாதியேனும் மன்னருக்குத் தத்தம் செய்து தரும்படி கேட்க, மறுத்த அமைச்சருக்குச் சிரச்சேதம் ஏற்பட்டது. இதன் விளைவால் அரசனுக்குத் தோஷங்கள் ஏற்பட இத்தல மூர்த்தியை வணங்கி வழிபட்டு தோஷ நிவர்த்தி செய்ததாக புராண வரலாறு.
தல மூர்த்திகள்
அருள்மிகு கலங்காமற் காத்த விநாயகர்
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர்
அருள்மிகு ஏலவார்குழலி அம்மை, உமையம்மை
அருள்மிகு குருதட்சிணாமூர்த்தி
தலச் சிறப்பு
திருஇரும்பூளை மற்றும் ஆலங்குடி என்ற பெயர்களால் விளங்கப் பெறுவது. திருஞானசம்பந்த பெருந்தகையால் எழிலார் இரும்பூளை என அருளப்பெற்றது. இவ்வூரில் விஷத்தால் எவருக்கும் யாதொரு தீங்கும் ஏற்பட்டதில்லை. இது இன்றளவும் விளங்கும் உண்மையாகும். நவக்கிரகங்களில் உள்ள குரு பகவானுக்குப் பரிகார ஸ்தலமாகும். பூளைச் செடி இக்கோயிலின் தல விருட்சமாகும். இத்தலத்து இறைவன் (சிவன்) சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். எனவே, இத்திருக்கோயிலின் காலத்தை நிர்ணயிக்க இயலவில்லை. ஞானசம்பந்தரின் காலம் கி.பி. ஆறு, ஏழாம் நூற்றாண்டாகும். எனவே, அதற்கு முன்னரே இவ்வாலயம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
வழிபட்டோர்
விஸ்வாமித்திரர், அஷ்டதிக்பாலகர்கள், அகஸ்தியர், புலஸ்தியர், காகபுஜண்டர், சுகர்பிரம்ம மகரிஷி மற்றும் ஆதிசங்கரர் ஆகியோர் பூஜித்த திருத்தலம். அம்மையின் திருமணத்திற்கு வந்த திருமால், பிரம்மா, லக்குமி, கருடன், ஐயனார், வீரபத்திரர் முதலானோர் தத்தம் பெயரால் லிங்கங்கள் நிறுவி பூஜித்து வழிபட்ட தலம். முசுகுந்த சக்கரவர்த்தி, சுவாசனன் மற்றும் சுந்தரர் வழிபட்ட தலமாகும். திருஞானசம்பந்தரால் பதிகம் பெற்றது. அப்பர் அடிகளால் திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில் சேர்த்துப் பாடல் பெற்ற சிறப்புடையது. திருஞானசம்பந்தர் தமது பாடல்களால் இத்தலத்தைச் சிறப்பித்து இரண்டாம் திருமுறையில் பாடியுள்ளார்.
தீர்த்தங்கள்
இத்திருத்தலத்தைச் சுற்றி 15 தீர்த்தங்கள் உள்ளன. முக்கியமாகத் திருக்கோயிலைச் சுற்றி அகழியாக அமைந்துள்ள அமிர்த புஷ்கரணி எனும் தீர்த்தம் மிகவும் சிறப்புடையதாகும். பிரம்ம தீர்த்தம், லக்குமி தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அமிர்த புஷ்கரணி, ஞான கூபம் கிணறு, பூளை வள ஆறு ஆகிய 15 தீர்த்தங்கள் உள்ளன.
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஆலங்குடி (குரு) பரிகாரத் தலம் பற்றித் தினமணி வெள்ளிமணியில் புகழ்பெற்ற ஜோதிட வல்லுநர் ஏ.எம். ராஜகோபாலன் என்ன சொல்லியிருக்கிறார்?
"என் பெண்ணிற்குக் குரு பலம் வந்து விட்டதா?" என்று கேட்காத பெற்றோர்களே கிடையாது. பெண்ணைப் பெற்றவர்கள் எதிர்பார்க்கும் பெருமையும், சக்தியும் கொண்ட, பரம சுபக்கிரகம் வியாழன் என்று பிரசித்தி பெற்ற தேவ குரு ஆவார்.
தனது சுப பார்வையினால் ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களையும் நொடிப் பொழுதினில் போக்கிடும் அளவற்ற சக்தி வாய்ந்த இவர் ''பொன்னன்" என்ற பெயராலும் புகழப்படுபவர். தர்ம குணம் படைத்தவர்களையும், முக்காலமும் உணர்ந்த பிரம்ம ஞானிகளையும் மற்றவர் துயர் கண்டு மனம் உருகும் நன் மனம் படைத்த உத்தமர்களையும் ஜாதகத்தில் குரு பகவான் இருக்கும் நிலையைக் கண்டு அறிந்துகொள்ளலாம்.
விவாகத்திற்கு வரன் நிர்ணயிக்கும்போது, லக்கினம், பூர்வ புண்ணியம், சயனம், புத்திரம், ஆயுள் (பெண்களுக்கு இதுவே மாங்கல்ய ஸ்தானம் ஆகும்) ஆகிய இந்த 5 ராசிகளுக்கும் குரு பகவானின் பார்வை, அல்லது ஏதாவது ஒரு விதத்தில் சம்பந்தம் உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் ஜாதகத்தில் உள்ள 12 ராசிகளில் மேற்கூறிய ஐந்து ராசிகள் மிக மிக முக்கியமாகும்.
திருமண வாழ்வில் பணத்தைவிட, மகிழ்ச்சிக்கும், மன நிறைவிற்கும், ஒழுக்கம் நிறைந்த புத்திர, புத்திரிகள் கிடைக்கும் பாக்கியத்திற்கும், நோயற்ற உடல் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு என்ன செய்வது?
பணமும் அவசியம்தான். ஆனால் மேற்கூறிய 5 ராசிகளும் நல்லபடி இருப்பின் அதற்குப் பிறகே ஜாதகத்தில் ஐஸ்வரிய பாக்கியத்தை ஆராய வேண்டும். மேற்கூறிய ஐந்து ராசிகளும் சுபமாக இருந்தால்தான் பணத்தினால் பெறும் சுகங்களை அனுபவிக்க இயலும்.
ஜாதகத்தில் குரு பகவான் பலஹீனம் அல்லது பகை ஸ்தானம் அடைந்திருந்தால், பரிகாரம் செய்வது நல்ல பலனைத் தரும். ஏனெனில் பக்தி பரிகாரம், தர்மச் செயல்கள், இறைவனின் திருநாம பாராயணம் ஆகியவற்றை மனமுவந்து ஏற்பவர் குரு. நவக்கிரகங்களில், அளவற்ற ஒளி வீசிப் பிரகாசிக்கும் குரு பகவானுக்குச் சூரியனார்கோயிலில் எழுந்தருளியுள்ள ஈசன் அதி தேவதை ஆவார். படைப்புக் கடவுளான நான்முகப் பிரம்மா ப்ரத்யதி தேவதை ஆவார்
இத்தகைய பெருமைகளைப் பெற்ற தேவ குருவான ப்ரகஸ்பதிக்கு மூன்று பரிகாரத் தலங்கள் உள்ளன.
1. சூரியனார் கோயில்
2. ஆலங்குடி
3. புஷ்கரம் (ராஜஸ்தானில், ஆஜ்மீர் வழி)
இவற்றில் ஆலங்குடி திருத்தலம், மிகச் சிறந்த பரிகாரத் தலமாகும். அங்கு ஸேவை தரும் குரு பகவானை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சாலச் சிறந்த பரிகாரமாகும். முக்கியமாகக் 'குரு வாரம்' எனப் போற்றிப் புகழப்படும் வியாழக்கிழமைகளில், கீழ்க்கண்ட குரு ஸ்தோத்திரத்தை 1008 முறைகள் பாராயணம் செய்வது நல்ல பலன்களை அளிக்கும் சக்தி கொண்ட துதி ஆகும். அந்தக் கிழமைகளில் உண்ணாமல் விரதம் இருப்பது மேலும் நற்பலன்களை அளிக்கும்.
பூவுலக மக்களுக்கு நன்மைகளைச் செய்வதையே, தனது தவமாகத் திருவுள்ளம் கொண்டு, அளவற்ற கருணை காட்டும் குரு பகவானைப் பூஜித்து நல்வாழ்வைப் பெற்று மகிழ்வோம்.
"தேவானாம்ச ரிஷிணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ரஹஸ்பதிம்"
- ஸ்ரீ வியாஸ பசுவான் மகாபாரதம்
பொருள்: "தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும். ஆத்ம ஞானிகளுக்கும் குருவானவர் ஸ்வர்ண மயமாகப் பிரகாசிப்பவர் அறிவை அளிப்பவர், மூவுல சுகங்களுக்கும் சகல நன்மைகளையும், தரும் ஈசன். அந்த ப்ரஹஸ்பதி என்று வணங்கப்படும் குருவை நமஸ்கரிக்கிறேன்." (மீள்பிரசுரம்)
வழிபாடும், வழிபடும் முறைகளும்
இத்திருக்கோயிலுக்கு 14 தலைமுறைகள் புண்ணிய பேறு பெற்றவர்களே வருகை தர இயலும். முதலில் கலங்காமற் காத்த விநாயகரை வணங்கிப் பின்னர் கொடி மரம் சென்று அங்குள்ள துவஜ கணபதியை வணங்கி நேராகச் சென்று சுவாமியை (ஆபத்சகாயேஸ்வரர்) தரிசித்து பின்னர் குரு தட்சிணாமுர்த்தியை வணங்கி சங்கல்பம் செய்து அர்ச்சனை முதலியவற்றை முடித்து பிரகாரத்தில் உள்ள சோமாஸ்கந்தர், முருகன், மகாலட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், உற்சவர் குருமூர்த்தி முறையே வழிபட்டு, ஏலவார் குழலி அம்மை மற்றும் சனிபகவானைத் தொழுது கொடிமரத்தில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வித்தல் வேண்டும். பின்னர் குரு பரிகாரமாகிய இருபத்து நான்கு நெய் தீபங்களைத் தீபம் ஏற்றும் இடத்தில் ஏற்றி திருக்கோயிலை மூன்று முறை வலம் வந்து ஒவ்வொரு முறையும் கொடி மரத்தின் கீழே விழுந்து நமஸ்காரம் செய்து பரிகாரத்தை நிறைவு செய்தல் வேண்டும்
தினசரி மற்றும் சிறப்புப் பூஜைகள்
தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
1. காலசந்தி காலை 8.00 மணி முதல் 8.30 மணி வரை
2. உச்சிக்காலம் மதியம் 12.30 மணி முதல் 1.00 மணி வரை
3. சாயரட்சை மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை
4. அர்த்தசாமம் இரவு 8.30 முதல் 9.00 மணி வரை
குருப்பெயர்ச்சி விழா
வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலில் வருடம்தோறும் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அன்னதானத் திட்டத்தின்கீழ் நாள்தோறும் சுமார் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
எப்படிச் செல்வது?
கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வடக்கே 7 கிலோ மீட்டர் தொலைவிலும், மன்னார்குடி சாலையில் தெற்கே 17 கிலோ மீட்டர் தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து ஏராளமான பேருந்துகள் செல்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஆலங்குடி வந்து செல்ல பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.