செய்திகள்

திருவனந்தபுரம் நவராத்திரி திருவிழா: பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் முத்துக்குடை பிடிக்கப்பட்ட யானையில் கேரளம் புறப்பாடு

தினமணி

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் வளாகத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்க முத்துக்குடை பிடிக்கப்பட்ட யானை மீது தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன், குமாரகோவில் குமாரசுவாமி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பவனியாக வியாழக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டன.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்க திருவிதாங்கூர் மன்னர் காலத்திலிருந்தே மன்னரின் உடை வாளை முன்னே ஏந்திச் செல்ல, தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன், குமாரகோவில் குமாரசுவாமி, முன்னுதித்த நங்கை ஆகிய சுவாமிகளின் விக்ரகங்கள் பவனியாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். நிகழாண்டும் நவராத்திரி பூஜையில் பங்கேற்க இந்த சுவாமி விக்ரகங்கள் வியாழக்கிழமை பவனியாக எடுத்துச் செல்லப்பட்டன.
உப்பரிகை மாளிகையில் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி: சரஸ்வதி அம்மன் பவனி புறப்படுவதற்கு முன்பாக பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் மன்னரின் உடைவாளை எடுத்துக் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூஜையில் வைக்கப்பட்ட மன்னரின் உடைவாளை தொல்லியல் துறை இயக்குநர் பிரேம்குமார், கேரள தொல்பொருள் துறை அமைச்சர் கடனபள்ளி ராமச்சந்திரனிடம் வழங்க, அவர் கேரள தேவஸம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனிடம் வழங்கினார். பாரம்பரியபடி அமைச்சர் அதை கன்னியாகுமரி மாவட்ட தேவஸம் போர்டு இணை ஆணையர் ப.பாரதியிடம் வழங்க, அவர் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் மேலாளர் சுதர்சனகுமாரிடம் வழங்கினார்.
மன்னரின் வாளை இவர், தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் பவனிக்கு முன்னால் எடுத்துச் செல்வார். இந்த விழா இரு மாநில மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விழாவாக காலம் காலமாக நடைபெற்று வருகிறது.
வாள் எடுத்துக் கொடுக்கும் நிகழ்ச்சிக்கு பின்னர், தேவாரக்கெட்டில் சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர், நெற்றிப்பட்டம் சூட்டப்பட்டு, முத்துக்குடை பிடிக்கப்பட்ட யானை மீது, அம்மன் எழுந்தருளல் நடைபெற்றது. அம்மனின் இருபுறமும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் குமாரகோவில் குமாரசுவாமியும், மற்றொரு பல்லக்கில் முன்னுதித்த நங்கையும் அமர, பூஜை நடைபெற்றது.
பூஜைக்கு பின்னர் கேரள பாரம்பரிய உடையணிந்த பெண்கள் மற்றும் சிறார்கள் மலர்தூவி முன்னே செல்ல, தாலப்பொலி மற்றும் மேளதாளங்கள், சிங்காரிமேளம், கேரள காவல் துறையின் பேண்டு வாத்தியங்கள் முழங்க சரஸ்வதி அம்மனை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அம்மன் பவனி கணபதி கோயில் வழியாக அரண்மனையை வந்தடைந்தது. அங்கு அரண்மனை சார்பில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பிடி பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தமிழக போலீஸார் துப்பாக்கி ஏந்தி அம்மனுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து கேரள போலீஸாரின் பேண்டு வாத்தியங்கள் முழங்க அம்மன் திருவனந்தபுரத்துக்கு புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மனை வரவேற்கும் வகையில், வீதிகளில் வழிநெடுகிலும் மலர்களால் வண்ணத் தோரணங்கள் கட்டி வீட்டு முன் விளக்கேற்றி பூஜை செய்து, பின்னர் அம்மனை வழியனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT