செய்திகள்

அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் தொடக்கம்

தினமணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் ஆடிப்பூர பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
கொடியேற்றம் கோலாகலம்: பின்னர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதி எதிரே உற்சவர் ஸ்ரீபராசக்தியம்மன் எழுந்தருளினார். காலை 7 மணிக்கு ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதி எதிரே புதிதாக செய்து நிறுவப்பட்ட தங்கக் கொடிமரத்தில் ஆடிப்பூர பிரம்மோற்சவத்துக்கான கொடியேற்றம் நடைபெற்றது.
வேத மந்திரங்கள் முழங்க கோயில் சிவாச்சாரியார்கள் ஆடிப்பூர பிரம்மோற்சவத்துக்கான கொடியேற்றினர்.
நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் ஜெகந்நாதன், கோயில் ஊழியர்கள், பக்தர்கள், உபயதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகள்: வருகிற 25-ஆம் தேதி வரை தினமும் காலை, இரவு வேளைகளில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபராசக்தியம்மன் மாட வீதியுலா நடைபெறும். வருகிற 26-ஆம் தேதி காலை கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக் குளத்தில் ஸ்ரீபராசக்தியம்மன் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
அன்றைய தினம் மாலை வளைகாப்பு மண்டபத்தில் அம்மனுக்கு வளைகாப்பு உத்ஸவமும், இரவு காமதேனு வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், நள்ளிரவில் அம்மன் சன்னதி எதிரே தீமிதி விழாவும் நடைபெறுகின்றன.

கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில்...
வேலூர் கோட்டை அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோயிலில் அம்பாள் சந்நிதி முன்புள்ள கொடி மரத்தில் ஆடிப்பூர பிரம்மோற்சவ கொடி, கோயில் தலைமை குருக்கள் கனகசண்முகம் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க ஏற்றப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று ஆடி மாதப் பிறப்பை யொட்டி வேலூரில் உள்ள பாலாற்று செல்லியம்மன், சோளாபுரியம்மன், சத்துவாச்சாரி கெங்கையம்மன் உள்ளிட்ட பல கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிம்ம கொடி ஏற்றத்துடன் தொடங்கிய ஆடிப்பூர பிரம்மோற்சவம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT