மயிலாடுதுறை துலா உத்ஸவ கடைமுகத் தீர்த்தவாரி
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் கோயில் துலா உத்ஸவத்தின் நிறைவு நிகழ்ச்சியான கடைமுகத் தீர்த்தவாரி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் கோயில் துலா உத்ஸவத்தின் நிறைவு நிகழ்ச்சியான கடைமுகத் தீர்த்தவாரி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் துலா உத்ஸவம் எனும் ஐதீக விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான துலா உத்ஸவம் கடந்த அக்.18-ஆம் தேதி ஐப்பசி மாதப் பிறப்பு தீர்த்தவாரியுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினந்தோறும் சிறப்பு பூஜைகள், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, துலாக்கட்ட காவிரியில் சுவாமி,அம்பாள் தீர்த்தம் கொடுத்தருளல் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
விழாவின் நிறைவு நாளான வியாழக்கிழமை மயிலாடுதுறை துலாக் கட்டக் காவிரியில் கடைமுகத் தீர்த்தவாரி நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி, காலை 6 மணிக்கு கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர் அருள்மிகு நடராஜர் புறப்பாடாகி, கோயில் பிரும்ம தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுத்தருளல் நடைபெற்றது.
பின்னர், வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி, பிற்பகல் 2 மணியளவில் மயிலாடுதறை துலாக்கட்டக் காவிரிக்கு எழுந்தருளினர்.
அதே நேரத்தில், அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர், காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோயில்களிலிருந்து சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் துலாக் கட்டக் காவிரியின் தென் பாகத்திலும், அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை வதான்யேஸ்வரர் சுவாமி துலாக்கட்ட காவிரியின் வடப்பாகத்திலும் எழுந்தருளினர்.
பின்னர், திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள், தருமையாதீன இளைய சந்நிதானம் ஸ்ரீஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆகியோர்களது முன்னிலையில் அஸ்திரத் தேவர்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, துலாக்கட்ட காவிரியில் சுவாமி அம்பாள் தீர்த்தவாரி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது. அப்போது, ஆயிரக்கணக்காண பக்தர்கள் காவிரியில் புனித நீராடி வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீனக் கட்டளை விசாரணை ஸ்ரீமத் அம்பலவாணத் தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் த. கஜேந்திரன், மயூரநாதர் கோயில் கண்காணிப்பாளர் எஸ். குருமூர்த்தி, மயிலாடுதுறை வணிகர் சங்கத் தலைவர் சி. செந்தில்வேல், வணிகர் சங்க பேரமைப்பின் நாகை மாவட்டத் தலைவர் ஏ. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.