ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ம்தேதியை உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மதியிறுக்கம் அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு எனும் ஆட்டிசம் குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு நரம்பு சார்ந்த வளர்ச்சிக் குறைபாடு. மூளையின் முக்கிய செயல்பாடுகளாகிய பேச்சு திறன், சமுதாய தொடர்பு மற்றும் புலன் உணர்வு ஆகியவற்றைப் பாதிக்கும் நோய். மற்ற குழந்தைகளை போல் பேச முடியாது, நடக்க முடியாது, நாம் யார், எங்கு இருக்கிறோம் என்ற விவரங்கள் தெரியாது. இதனால், அவர்களால் மற்றவர்களைப் போல் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது.
அறிகுறிகள்
ஒதுங்கி இருப்பது, கண்களைப் பார்த்து பேசாமல் இருத்தல், ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டாமல் இருத்தல், சமூகப் புரிதல்கள் இல்லாமல் இருப்பது, பயம், ஆபத்து ஆகியவற்றை உணராமல் இருப்பது, பாவனை, விளையாட்டுகள் இல்லாமல் இருப்பது, வித்தியாசமான நடவடிக்கைகளை ஒரே மாதிரியாகத் திரும்பத் திரும்ப செய்வது, காரணம் இல்லாமல் அழுகை, சோகம் ஆகியவற்றை வெளிப்படுத்துவது, வலியை உணராமல் இருப்பது, மாற்றங்களை அசவுகரியமாக உணர்வது, பொருளற்ற சொற்களைத்
திரும்பத் திரும்ப சொல்வது முதலானவை இதன் அறிகுறிகளாகும்.
இதன் அறிகுறிகளும் பண்புகளும் குழந்தைகளில் பலவிதமாகக் காணப்படுகின்றன, அவர்களை வெவ்வேறு வகைகளில் பாதிக்கின்றன. சில குழந்தைகளுக்கு இதைச் சமாளிப்பதில் பெரிய சவால்கள் ஏற்படக்கூடும், அவர்களுக்குப் பிறருடைய உதவித் தேவைப்படும், ஆனால் வேறு சில குழந்தைகள் தங்களுடைய பெரும்பாலான வேலைகளைச் சுதந்திரமாகச் செய்வார்கள், அபூர்வமாகச் சில சிறிய உதவிகள் மட்டுமே இவர்களுக்குத் தேவைப்படும்.
ஆட்டிச குழந்தைக்கும் மற்ற குழந்தைக்கும் உள்ள வேறுபாடு
மற்ற குழந்தைகளைப் போல் அல்லாமல் இக்குழந்தைகளின் பார்வை, கூரையையே வெறித்துப் பார்ப்பது போல், ஒரே இடத்தில் நிலைத்திருக்கும். நாம் ஒருவரிடம் பேசும் போது கண்ணைப் பார்த்து பேசுவது போல், ஆட்டிசம் குழந்தைகள் கண்ணைப் பார்த்து பேசாது. கைகளை உதறிக் கொண்டே இருக்கும். மற்ற குழந்தைகளை நாம் கட்டி அணைப்பது போல், இக்குழந்தைகளைக் கட்டி பிடித்தால் கோபம் வரும். சில குழந்தைகள் மூர்க்கமாக நடந்து கொள்வர். தண்ணீர் வேண்டும் என்றால் வாய் திறந்து கேட்காமல், சைகை மூலம் கேட்பார்கள்.
சில குழந்தைகள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள். பாத்ரூம் செல்வதற்கு தண்ணீர் வேண்டும் என்பார்கள், தண்ணீர் வேண்டும் என்றால் பாத்ரூம் போக வேண்டும் என்பார்கள். சில குழந்தைகள் தனக்குத் தானே பேசிக் கொண்டிருப்பார்கள். வேறு சில குழந்தைகள் திடீரென சிரிக்கும், சில குழந்தைகள் திடீரென அழும். எதற்காக சிரிக்கிறார்கள், எதற்காக அழுகிறார்கள் எனத் தெரியாது. வலி, சிறிய அளவில் இருந்தாலும் "ஓ' என அலறும்.சில குழந்தைகள் கடும் வலி இருந்தாலும் வலியை உணர்வதில்லை.
ஆட்டிசம் இருப்பதைக் கண்டுபிடிக்கமுடியுமா?
ஆட்டிசம் பிறவி குறைபாடாக இருந்தாலும், பிறந்த உடனே கண்டுபிடிக்க முடியாது. 6 மாதம் முதல் 3 வயதுக்குள் ஆட்டிசம் குறைபாட்டை கண்டுபிடிக்க முடியும்.
இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், பலர் 3 வயதுக்குள் கண்டுபிடிக்க தவறிவிடுகின்றனர். 3 வயதுக்குள் கண்டுபிடித்தால் உரியப் பயிற்சி அளித்து, ஓரளவு குறைபாட்டை சரி செய்துவிடலாம். எதனால், ஆட்டிசம் குறைபாடு ஏற்படுகிறது என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பெண் குழந்தைகளை விட, ஆண் குழந்தைகள் தான் இக்குறைபாட்டால் 4 மடங்கு பாதிக்கப்படுகின்றனர். இதற்கான காரணமும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. 10 ஆயிரம் குழந்தைகளில், 5 பேருக்கு இக்குறைபாடு
ஏற்படுகிறது.
பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?
இக்குழந்தைகளுக்குப் பெற்றோரின் பங்கு முக்கியம். அவர்களால் தான், இக்குழந்தைகளை இயல்பு வாழ்க்கைக்கு அழைத்து வர முடியும். இது ஒரு குறைபாடு என உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை அவமானம் எனக் கருதக்கூடாது. நாம் நம் குழந்தையை ஏற்று, அதற்குரிய முக்கியத்துவம் கொடுத்தால் தான், இச்சமூக மக்களும் மரியாதை கொடுக்க முன் வருவர். நமது இன்ப, துன்பத்தை அவர்களால் உணர முடியாது. ஒரு துயரமான சூழலில் சிரித்துக் கொண்டிருப்பர். இதற்காக, அவர்களை வெறுக்கக் கூடாது. மூளை குறைபாட்டால்தான், அவர்கள் அப்படி இருக்கின்றனர் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.
மதியிறுக்கம் எனும் ஆட்டிசத்திற்கான ஜோதிட காரணங்கள்
ஆட்டிசம் மூளை நோய் பிரிவை சேர்ந்ததாக ஆயுர்வேதம் கூறுகிறது. மூளை நோய்க்கான காரக கிரகமான புதனே ஆட்டிச நோய்க்கும் காரக கிரஹம் ஆகிறார். என்றாலும் மூளையின் செயல்பாடுகளில் சந்திரனின் பங்கும் உண்டு. பொதுவாக கிராமங்களில் தவறான செயலை செய்தவரை "மதிகெட்டவனே" எனத் திட்டுவதை காணலாம்.
மூளைக்கும் மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. "சந்த்ரமா மனஸோ ஜாத" என வேதத்தில் புருஷ சூக்தத்தில் சந்திரனை மனதோடு தொடர்புப்படுத்தி
போற்றப்படுவதில் இருந்து மூளைக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பை அறியலாம்.
ஆட்டிசம் என்பதை நோய் என்று குறிப்பிடுவதை விடக் குறைபாடு எனக் குறிப்பிடுவதே பொருத்தமாகும். ஆட்டிச குறைபாடு குழந்தைநிலையில் ஏற்படும் ஒரு குறைபாடாகும். ஒரு குழந்தைக்கு பாலாரிஷ்ட அமைப்பும் மூளை நோய்க்கான கிரஹ அமைப்பும் இருந்தால் அவர்களுக்கு ஆட்டிசம் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகமிருப்பதாக மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.
ஆட்டிசத்தை கர்மாவோடு தொடர்புடைய நோயாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எந்தக் குழந்தையோ அல்லது பெற்றோரோ தங்கள் பெற்றோர் அல்லது குழந்தைகளையோ உடன் பிறந்தவர்களையோ தீர்மானிக்க முடியாது. மாறாக அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்பவே அமைகிறது.
ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து 12 வயது வரை ஜாதகம் பார்க்க கூடாது என ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது. குழந்தையின் முதல் நான்கு வயது வரை தாயின் பாப கர்மத்தையும் ஐந்து வயது முதல் எட்டு வயது வரை தந்தையின் பாப கர்மத்தையும் ஒன்பது வயது முதல் பன்னிரண்டு வயது வரை தனது சுய பாப கர்மத்தையும் அனுபவிக்கும் காலமாகும். எனவே எந்த வயதில் ஒருவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது என்பதைப் பொருத்து கர்ம வினையைத் தீர்மானிக்கலாம். என்றாலும் பன்னிரண்டு வயது வரை பாலாரிஷ்ட தோஷங்களை அறிய ஜோதிடம் தடை செய்யவில்லை.
பாலாரிஷ்ட தோஷங்கள்
சந்திரனின் நிலை
பாலரிஷ்டத்தை குறிப்பிடுவதில் சந்திரனின் நிலை முதன்மையானது என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. சந்திரனின் பலம்/பலவீனம், சுப அசுப தன்மைகள் ஒரு குழந்தையின் பாலரிஷ்டத்தை தீர்மானிக்கிறது. சந்திரனின் அசுப தன்மைக்கு ஏற்றவாரு குழந்தையில் ஏற்படும் நோய் மற்றும் குழந்தை இறப்பு ஆகியவை அமைந்து விடுகிறது.
லக்னத்தின் பலம்
சந்திரனை அடுத்து ஒரு குழந்தையின் லக்னத்தின் பலமே குழத்தையின் ஆரோக்கியம் மற்றும் ஆயுளைத் தீர்மானிக்கிறது. லக்னம் மற்றும் லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளுடன் மற்றும் பாதகாதிபதி, அசுப கிரஹ தொடர்பு ஏற்படாமல் இருப்பதும் அவர்களின் தசா புத்தி குழந்தை பருவத்தில் ஏற்படாமல் இருப்பதும் அவசியம் ஆகும்.
கேந்திர திரிகோணங்களின் நிலை
ஒரு குழந்தைக்கு கேந்திர திரிகோணங்களில் அசுப கிரஹம் அமைவதும் குழந்தையின் ஆயுள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் காரணிகளாக அமைந்துவிடுகிறது. முக்கியமாக ஒரு ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்கள் என்பவை தூண்களை போல அமைந்துவிடுகிறது. கேந்திரங்களில் சுப கிரஹங்கள் இருப்பது ஜாதகருக்கு பலத்தைத் தருகிறது. மாறாக கேந்திர ஸ்தானங்களில் அசுப கிரஹங்கள் நிற்பது அல்லது அசுப தொடர்புகள் ஏற்படுவது மற்றும் கேந்திராதிபதிகள் வக்கிரம் பெறுவது, கேந்திராதிபதிகள் மாந்தி சேர்க்கை பெறுவது ஆகியவை பாலாரிஷ்டத்தை முக்கியமாக ஆட்டிச குறைபாடு ஏற்படும் அமைப்பாகிறது.
அசுப தசாபுத்தி மற்றும் கோச்சாரம்
குழந்தை பருவத்தில் அசுப கிரஹங்கள் தசா புத்தியை நடத்துவது மற்றும் அசுப கிரஹங்களின் கோச்சார சேர்க்கை லக்னம், 6,8,12 பாவங்களுடன் ஏற்படுவது ஆகியவை குழந்தை பருவத்தில் நோய் மற்றும் கண்டம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
ஆட்டிசம் எனும் மதியிருக்க குறைபாட்டை நோயை ஏற்படுத்தும் கிரஹ நிலைகள்
ஜோதிடத்தில் மனதிற்கு சந்திரனையும், புத்திசாலித்தனத்திற்கு புதன் மற்றும் குருவையும் காரக கிரஹங்களாக கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று கிரஹங்களும் நல்ல நிலையில் இணையும்போது மிகுந்த புத்திசாலித்தனத்தையும் அவர்களில் ஒருவர் அசுபத்தன்மை பெற்றாலும் மன நிலையில் பாதிப்புகள் ஏற்படுகிறது.
ஒருவருடைய மனநிலை மற்றும் புத்திசாலித்தனம், ஆழ்மனதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் பாவம் பூர்வ புண்ணியம் எனப்படும் ஐந்தாம் பாவம் ஆகும். ஐந்தாம்பாவம் கெடாமல் இருப்பது நல்ல மனநிலைக்கு முக்கியமானதாகும். ஐந்தாம் வீட்டில் அசுப தொடர்புகள் ஏற்படும்போது அது மனதினை பாதிக்கின்றது.
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி பலமாக நிற்பது, காலபுருஷனுக்கு லக்னமாகிய மேஷத்தில் அசுப கிரஹங்கள் தொடர்பு இன்றி இருப்பது, அதன் அதிபதி செவ்வாய் பலமாக இருப்பது, ஆத்ம காரகனாகிய சூரியன் அசுபத்தன்மை இன்றி நல்ல நிலையில் பலம் பெற்று இருப்பது ஆகியவை ஜாதகரை ஆட்டிசம் மற்றும் மன நோயில் இருந்து காக்கும் அம்சங்களாகும்.
1. லக்னம் அல்லது லக்னாதிபதி 6,8,12 தொடர்பு பெற்று நிற்பது.
2. ஒருவருடைய ஜாதகத்தில் பக்ஷ பலமற்ற சந்திரன் லக்னத்திற்கு 6,8,12 ஆகிய வீடுகளில் நிற்பது.
3. சந்திரன் விருச்சிக ராசி மற்றும் காலபுருஷனுக்கு எட்டாம் வீட்டில் நீசமடைந்து சனியுடன் சேர்ந்து நிற்பது மற்றும் சனி 6,8,12 அதிபதிகளாகி அவருடன் சேர்ந்து எந்த ராசியிலும் நிற்பது.
4. லக்னத்தில் மாந்தி நிற்பது கற்பகாலத்தில் தாயாருக்கு ஏற்பட்ட விபத்தினால் மூளை வளர்ச்சியில் தடையை ஏற்படுத்தி அதனால் ஆட்டிசம் மற்றும் மறதி நோய் ஏற்படும். லக்னத்தில் மாந்தி இருப்பவர்களுக்கெல்லாம் சண்டை வரும்போது தலையில் அடித்துக்கொள்ளுதல், சுவற்றில் முட்டிக்கொள்ளுதல் போன்ற வழக்கம் இருக்கும்.
5 கோப உணர்ச்சியைத் தூண்டும் கிரஹங்களான சூரியன், செவ்வாய், தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் சனி, பலவித ஃபோபியாக்களையும் தற்கொலை
மனப்பான்மையையும் ஏற்படுத்தும் ராகு மற்றும் கேது ஆகிய கிரஹங்கள் மற்றும் மாந்தி சந்திரனோடு சேர்க்கை பெற்று கேந்திர திரிகோணங்களில் நிற்பது.
6. புதன் 6,8,12 தொடர்பு பெற்று அசுபத்தன்மை பெறுவது.
7. புதனுடன் சனி, செவ்வாய், கேது போன்ற கிரஹங்களின் சேர்க்கை பெற்று எந்த வீட்டில் நின்றாலும் ஆட்டிச குறைபாடு ஏற்படும்.
8. லக்னத்தில் சனி ஆறாமதிபதி, நின்று அவற்றோடு புதனும் அசுப சந்திரனும் தொடர்பு பெறுவது.
9. சந்திரனும் புதனும் இணைந்து 6,8,12 ஆகிய வீடுகளில் நின்று மற்ற அசுப கிரஹ தொடர்பு பெறுவது.
10. புதன் சூரியனின் பின் அஸ்தங்க நிலையில் நின்று சனி கேது போன்ற அசுப கிரஹங்களின் சேர்க்கை பெறுவது.
11. புதன் 6/8/12 அதிபதிகள் மற்றும் தேய்பிறை சந்திரன், செவ்வாய், சனி கேது ஆகிய கிரஹங்களுடன் சேர்ந்து ஐந்தாம் பாவத்தில் நிற்பது.
12. புதன் மீனத்தில் நின்று நீச பங்கம் அடையாமல் அசுப கிரஹங்களின் தொடர்பு பெறுவது.
ஆட்டிசத்தினால் மனபாதிப்பு எப்போது ஏற்படும்?
1. சந்திராஷ்டம காலங்கள், அமாவாசை போன்ற சந்திரபலம் குறைந்த தினங்கள்
2. ஏழரை, அஷ்டம அர்தாஷ்டம சனி காலங்கள்,சந்திரன்/சனி/ ராகு தசாபுத்தி காலங்கள்
3. சந்திரன் கேது புத்தி காலங்கள்,சூரியன் / ராகு / கேது தசா புத்தி காலங்கள், புதன் ராகு புக்தி, புதன் கேது புக்தி ஆகிய காலங்களில் ஆட்டிசத்தின் காரணமாக மன பாதிப்புஏற்படும்
ஆட்டிச குறைபாடு நீங்கப் பரிகாரங்கள்:
1. குல தெய்வ வழிபாடு மற்றும் பித்ருகள் வழிபாடு.
2. புதபகவானை வணங்குவதன் மூலம் நோய்களில் இருந்து விடுபடலாம். கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் இருக்கும் திருவெண்காடு புதன் ஸ்தலமாகும். தனி சன்னதியில் புத பகவான் அருள்புரிகிறார். மதுரையில் மீனாட்சி அம்மன் புதன் அம்சமாகவே இருக்கிறார்.
3. புதனின் அதிதேவதை விஷ்னு பகவானாவார். அசுரர்களிடமிருந்து வேதத்தை காக்க மகாவிஷ்னு எடுத்த அவதாரங்களில் ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ லக்ஷமி ஹயக்ரிவர் கல்விக்கதிபதியான சரஸ்வதியின் குரு என புராணங்கள் போற்றுகின்றன. ஸ்ரீ லக்ஷமி ஹயக்ரிவ மூர்த்தியை செங்கல்பட்டு அருகே இருக்கும் செட்டிபுண்ணியம், கடலூர் திருவஹிந்திபுரம் போன்ற ஸ்தலங்களில் வணங்குவது கல்வியறிவையும் ஞாபக சக்தியையும் பெருக்குவதோடு புத்திக்கூர்மையையும் அளிக்கும். மேலும் ஆட்டிச குறைபாட்டை போக்கும்.
4. புதனின் அதிதேவதையான விஷ்ணுவின் அவதாரமும் ராகு/கேதுக்கள் ஆதிக்கம் கொண்ட ஸ்ரீ லக்ஷமி நரசிம்மரை ஸ்வாதி நட்சத்திர தினத்திலும், பிரதோஷ காலத்திலும் வணங்கி வருவது.
5. சந்திரன் மற்றும் புதனின் இணைவு பெற்ற சந்திர ஸ்தலங்களான திருப்பதி, குணசீலம் ஆகிய ஸ்தலங்களுக்குத் திங்கள் கிழமையில் சென்று வணங்குவது.
6. மனோ பலம் தரும் திருக்கடையூர் அபிராமி வழிபாடு மற்றும் குணசீலம் மற்றும் திருப்பதி போன்ற சந்திர ஸ்தலஙளுக்கு சென்று வருவதும் சிறந்த பலனளிக்கும்.
7. புதனுக்கு உகந்த தானியமான பச்சை பயறு சுண்டல், பயத்த லட்டு போன்றவை செய்து நவக்கிரக புதனுக்கு அல்லது ஸ்ரீலக்ஷமி ஹயக்ரீவ மூர்த்திக்கு நிவேதனம் செய்து பல குழந்தைகளுக்கு வினியோகம் செய்வது.
8. மும்மூர்த்திகளும் வாசம் செய்யும் அரசமர பிறதக்ஷிணம் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
செல்பேசி - 9498098786
வாட்ஸ் அப் 9841595510
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.