செய்திகள்

கலசப்பாக்கம் செய்யாற்றில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி

DIN

கலசப்பாக்கம் செய்யாற்றில் ரத சப்தமியையொட்டி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தை மாதம் 5-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றிலும், ரத சப்தமி தினத்தன்று திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் செய்யாறிலும், மாசி மகத்தில் திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியிலும் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நடைபெறுவது பல நூறாண்டு நடைமுறை.
அதன்படி, ரத சப்தமியையொட்டி, கலசப்பாக்கம் செய்யாற்றில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
நிலத்தை பார்வையிட்ட ஸ்ரீஅருணாசலேஸ்வரர்: தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கலசப்பாக்கம் செய்யாற்றுக்குப் புறப்பட்டார். செல்லும் வழியில் திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம், தனகோட்டிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலத்தை ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர் வலம் வந்து விவசாயம் செழித்திருப்பதை பார்வையிட்டார்.
செய்யாற்றில் திரண்ட பக்தர்கள்: இதையடுத்து, தென்பள்ளிபட்டு கிராமம் வழியாக உற்சவர் சுவாமிகள் கலசப்பாக்கம் செய்யாற்றை சென்றடைந்தனர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் சுவாமிகளை பல ஆயிரம் பக்தர்கள் வழிபட்டனர்.
அதே நேரத்தில், கலசப்பாக்கத்தில் இருந்து திரிபுர சுந்தரி சமேத திருமாமுடீஸ்வரர் உற்சவர் சுவாமியும் கலசப்பாக்கம் செய்யாற்றில் எழுந்தருளினர்.
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி: பின்னர், ரத சப்தமியையொட்டி ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நடைபெற்றது. மேலும், புனித நீரைக் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. இறுதியாக செய்யாற்றின் நடுவே அமைக்கப்பட்ட பந்தலில் திருவண்ணாமலை ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர், கலசப்பாக்கம் திரிபுரசுந்தரி சமேத திருமாமுடீஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலசப்பாக்கம், போளூர், திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT