செய்திகள்

திருமீயச்சூர் மேகநாதசுவாமி கோயில் தேரோட்டம்: 147 ஆண்டுகளுக்குப் பின்னர் பவனி வந்த மரத்தேர்

DIN

நன்னிலம் அருகேயுள்ள திருமீயச்சூர் அருள்மிகு லலிதாம்பாள் உடனுறை மேகநாதசுவாமி திருக்கோயில் ரத சப்தமி விழாவை முன்னிட்டு, தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இத்தேரோட்டத்தில் 147 ஆண்டுகளுக்குப் பின்னர் மரத்தேர் பவனி வந்தது.
பண்டாசுரன் என்ற அசுரனை வதம் செய்வதற்காக வேள்விக் குண்டத்திலிருந்து ஸ்ரீ சக்ர ரதத்தில் தோன்றிய லலிதாம்பிகை, அசுரனை அழித்தபின் மிக உக்ரமாக இருந்தார். கோபம் தணிய பூலோகத்தில் சென்று தவம் செய்யும்படி இறைவன் பணித்ததாகவும், அதன்படி லலிதாம்பிகை திருமீயச்சூர் வந்து தவம் செய்து சாந்தமடைந்தார் என்பது இக்கோயில் புராண வரலாறு.
இங்கு லலிதாம்பிகை, ஸ்ரீ சக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டப்படி அருள்பாலிப்பது சிறப்பு. சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்.
இக்கோயிலில் தை மாத ரத சப்தமி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சிறிய வகையிலான தேர் பயன்படுத்தப்பட்டு, வீதியுலா நடைபெற்றுவந்தது. இந்நிலையில் கோயிலுக்கு புதிய மரத்தேர் செய்ய முடிவெடுக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து ரூ. 42 லட்சம் மதிப்பில் 42 அடி உயரம், 30 டன் எடையுடன் கூடிய புதிய மரத்தேர் உருவாக்கப்பட்டது. இந்த தேர் வெள்ளோட்டம் கடந்த டிச.14-ஆம் தேதி நடைபெற்றது. இதற்கு முன்னர் சுமார் 147 ஆண்டுகளுக்குப் முன் மரத்தேர் பவனி நடைபெற்றுள்ளது.
நிகழாண்டுக்கான ரத சப்தமி விழா, ஜன.15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜன.19-ஆம் தேதி இரவு இடப வாகன காட்சி, ஓலைச்சப்பர வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. 
முன்னதாக தேரில் எழுந்தருளிய சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் செய்விக்கப்பட்டன. பின்னர் 10.30 மணியளவில் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் கொடியசைத்து, வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து, மரத்தேர் நான்கு வீதிகளின் வழியாக வலம் வந்தது.
தேரோட்ட நிகழ்வைக் காண்பதற்காக சுற்றுவட்டாரத்திலிருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நிகழ்ச்சியில், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஆசைமணி, வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞானமகாதேவ தேசிகபரமாசாரிய சுவாமிகள், வருவாய்க் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, நன்னிலம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் சம்பத், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய துணைத் தலைவர் சி.பி.ஜி.அன்பு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தேரை வடம் பிடித்து இழுக்கிறார் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT