ரமண தீட்சிதர் மீது அவதூறு வழக்கு தொடர ஆலோசனை: தேவஸ்தான அறங்காவர் குழுத் தலைவர் சுதாகர் யாதவ்
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீதும், அதில் பணிபுரிந்த அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டுகளை எழுப்பிய தலைமை அர்ச்சகர் மற்றும் சிலரிடம் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்வதற்கு
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீதும், அதில் பணிபுரிந்த அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டுகளை எழுப்பிய தலைமை அர்ச்சகர் மற்றும் சிலரிடம் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்வதற்கு ஆலோசனை நடத்தப்பட்டு வருதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுதாகர் யாதவ் தெரிவித்தார்.
திருமலை அன்னமய்யா பவனில் செவ்வாய்க்கிழமை காலை அறங்காவலர் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், குழுவின் தலைவர் சுதாகர் யாதவ் தலைமையில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதுகுறித்து, இந்தக் கூட்டத்துக்குப் பின் சுதாகர் யாதவ் கூறியதாவது:
தேவஸ்தானம் மீதும் அதில் பணியாற்றிய அதிகாரிகள் மீதும் ரமண தீட்சிதர் மற்றும் சிலர் பல்வேறு அவதூறு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். அவர்கள் மீது தேவஸ்தானம் சார்பில் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 நாள்களில் வழக்கு தொடர உள்ளவர்களின் பெயர்கள் வெளியிடப்படும்.
சுமார் 24 ஆண்டுகளுக்கு தேவஸ்தான தலைமை அர்ச்சகராகப் பணியாற்றிய ரமண தீட்சிதருக்கு தைரியம் இருந்தால் அவர் அறங்காவலர் குழுவின் முன்னால் வந்து தனது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும். ஏழுமலையானின் ஆபரணங்களை ஆகம ஆலோசகர்களின் அனுமதி பெற்று பக்தர்களின் பார்வைக்கு வைக்கத் தயார்.
தலித்துகள், மீனவர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளில் ரூ.10 லட்சம் செலவில் ஏழுமலையான் கோயில்கள் கட்டப்படும். சித்தூர் மாவட்டத்தில் உள்ள நாகலாபுரத்தில் வேத பாடசாலை ஏற்படுத்தப்படும். அலிபிரி அருகில் டாடா புற்றுநோய் ஆய்வு நிறுவனம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டிற்கு ரூ.25 லட்சம் வாடகையில் 33 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவஸ்தான மருத்துவமனைகளுக்காக 2018-19ஆம் ஆண்டிற்காக ரூ.4.84 கோடியில் மருந்துகளைக் கொள்முதல் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
ஆந்திர மாநிலத்தில் பால் உற்பத்தியைப் பெருக்க 2:9 சதவீத கொழுப்புச் சத்துள்ள பாலைக் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவஸ்தானத்தின் வேத பாடசாலை பராமரிப்பிற்காக ஸ்ரீபாலாஜி வேத பரிபோஷண அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு ஏழுமலையான் தரிசனமும், லட்டு பிரசாதமும் இலவசமாக வழங்கப்படும்.
திருப்பதியில் அறிவியல் அருங்காட்சியகம் ஏற்படுத்த 70 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு பெயரளவில் ரூ.1 வாடகையாக நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படும். ரூ.1.6 கோடியில் திருமலையில் பாதுகாப்பிற்காக விடியோ கேமராக்கள் அமைக்கப்படும். தர்மகிரி வேத பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல் வேத பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். அமெரிக்காவிலும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தேவஸ்தானப் பெருமாள் கோயிலில் தற்போது ஏழுமலையானுக்கு மட்டும் தினசரி கைங்கரியங்களுக்கு மலர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இனி பத்மாவதி தாயாருக்கும் தினசரி அலங்காரம் மற்றும் கைங்கரியங்களுக்கு மலர்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.