முகப்பு
செய்திகள்

திருப்பணிக்காகக் காத்திருக்கிறது புரசக்குடி சிவன்கோயில்

தஞ்சாவூர் மாவட்டத்தில் அய்யம்பேட்டை அருகேயுள்ள சூலமங்கலம் என்னுமிடத்திற்கு...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:04 PM
பகிர்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் அய்யம்பேட்டை அருகேயுள்ள சூலமங்கலம் என்னுமிடத்திற்கு அருகே புரசக்குடி என்னுமிடத்தில் அமைந்துள்ளது சிவன்கோவில். புரசமரங்கள் நிறைந்து காணப்பட்டதால் பெயராகுபெயராக புரசக்குடி என வழங்கப்படுகிறது. கோயிலின் தலவிருட்சமாக புரசமரமே உள்ளது. 

சிறிய அழகிய கிராமம், அய்யம்பேட்டை - சூலமங்கலம் - புரசக்குடி என வரவேண்டும். பழமையான அக்கிரகார திண்ணை வீடுகள் கொண்ட தெருவின் கடைசியில் உள்ளது திருக்கோயில். கோயிலின் தென்புறம் பெரிய நீர்நிறந்த குளம் உள்ளது. உயர்ந்த மதில் சுவர்கள், கிழக்கு நோக்கிய திருக்கோயில். கோயில் விமானம் பார்க்க கம்பீரமாகக் காட்சி தருகிறது. ஆனால் கோயிலின் இன்றைய நிலை நெஞ்சை உலுக்குவதாய் உள்ளது. ஆம் முகப்பு மண்டபம் பெரும் விரிசல் கண்டு இப்போ விழுமோ? அப்போ விழுமோ என உள்ளது. கருவறை சுவர்களும் அதன் தொடர்ச்சியாக விரிசல் கண்டுள்ளது.

இறைவன் - காளஹஸ்தீஸ்வரர் 

இறைவி -  ஞானாம்பிகை 

தரை மட்டத்தில் இருந்து ஐந்தடிக்கும் உயரமாக முகப்பு மண்டபம் உள்ளது. இறைவன் எதிரில் செப்புக்கொடிமரம் நிற்கிறது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரம்மாண்டமான முறையில் ஆலய பிரமோத்சவமாக நிகழ்ந்து வந்த சிவத்தலம் இது. இன்றோ திறப்பதற்கும் பூசைசெய்யவும் ஆளின்றி இறுக்கமான அமைதி நிலவுகிறது. பெரிய மணி ஒலித்து நேரமறிந்து கொண்ட இப்பகுதி மக்கள் இன்று திரும்பி பார்க்கக் கூட மனமின்றி செல்கின்றனர்.

திருப்பணிகள் ஆரம்பித்து மதில் சுவர், பிரகார சிற்றாலயங்கள் எனப் பெரும்பகுதி முடிந்துள்ளது மகாமண்டபம், கருவறைகள் மட்டும் பணிகள் ஆரம்பிக்கப்படாமல் உள்ளன. 

தென்புரவாயில் கிழக்கு வாயில் என இரு வாயில்கள் மண்டபதிலுள்ளன. வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பீடம், நந்தி ஆகியவை காணப்படுகின்றன. அதனை அடுத்து உள்ளே செல்லும்போது மூலவர் சன்னதி கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. அம்மன் சன்னதி தெற்கு நோக்கியபடி உள்ளது. இறைவன் கம்பீரமான உருவுடன் நம்பிக்கை தருபவராகவும் உள்ளார்.

காசி விசுவநாதர் மற்றும் விஸ்வக்ஞானர் என்றழைக்கப்படுகின்ற இரு லிங்கத் திருமேனிகள், பைரவர், சூரியன், சந்திரன், சனீசுவரர், ஆஞ்சநேயர், விநாயகர், வரதராஜப் பெருமாள், முருகன், சண்டிகேசுவரர் ஆகியோர் வடபுறம் ஓர் கொட்டகையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

தேவகோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். இந்த தட்சிணாமூர்த்தி சிற்பத்தின் இடப்புற காலுக்கு கீழ் ஓர் அடியவர் காணப்படுகிறார். அந்த அடியவர் இரு கரங்களைக் கூப்பிய நிலையில் தட்சிணாமூர்த்தியை வணங்கும் கோலத்தில் இருப்பதும் சிறப்பு. இச்சிற்பம் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச் சார்ந்தது என்று கூறுகின்றனர். அப்படியெனில் 700 ஆண்டுகள் பழமையான கோயில் எனலாம். கோயிலின் பிரகாரத்தில் ஞான சரஸ்வதி, மற்றும் ஞானமஹாலட்சுமி இருவரும் இணைந்த நிலையில் சிற்றாலயங்களில் உள்ளனர். 

கோயிலின் அருகில் உள்ள பெண்மணியின் வீட்டில் கோயில் சாவி உள்ளது, அவரிடம் திருப்பணி பற்றிக் கேட்டபோது சென்னையை சேர்ந்தவர்கள் பணிகள் செய்துவந்ததாகவும் சில மாதங்களாக பணிகள் கிடப்பில் உள்ளன என்றார். யாரேனும் உதவி செய்தால் விரைவில் பணிகள் முடிக்க நாங்கள் ஒத்துழைப்பு தருவோம் என்றார். புனரமைக்கப் பெற்று வரும் இவ்வாலயத்திற்கான திருப்பணிகளில் பங்கேற்பதும் வாழ்வில் அடைதற்கரிய பாக்கியமாகும். 

மேலும் ஒரு சுவாரசியம்...

நூறு வருடங்களின் முன் இவ்வூரில் ராமைய்யர் எனும் அன்பர் வாழ்ந்து வந்தார், வயலும் இறைவனுமே உலகம் என்று வாழ்ந்து வந்த இவருக்கு இரு மகன்கள், சுப்பிரமணியன், சந்திரசேகரன் இருந்தனர். இருவரும் நன்கு படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலையினை அடைந்தார்கள். நாம் மட்டுமல்ல அவர்கள் உலகமே அறிந்தவர்கள்.

ஆம்.....இந்த சந்திரசேகரன் அவர்களின் மகன் தான் நோபல் பரிசு பெற்று உலகமே போற்றும் சர்.சி.வி. ராமன் எனப்படும் வெங்கடராமன். இவர் மட்டுமல்ல இன்னொருவரும் இவ்வூரில் நோபல் பரிசு பெற்றவர், அவர் சுப்பிரமணியம் அவர்களின் மகனான சந்திரசேகரன் ஆவார். 

ஆக..... நோபல் பரிசு பெற்ற இருவரின் சொந்த ஊர் இந்த புரசக்குடி. இவர்களுக்கு வரமளித்து மகிழ்ந்த இறைவனை நாமும் வணங்குவோம் வாருங்கள்.

- கடம்பூர் விஜயன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.