சந்திர தோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய மேலையூர் சிவன்கோயில்
திருநீலக்குடி- எஸ்.புதூர் சாலையில் உள்ளது மேலையூர் நிறுத்தம், இங்கிருந்து நாட்டாற்றினை கடந்து சென்றால் மேலையூர் கிராமம் உள்ளது.
திருநீலக்குடி- எஸ்.புதூர் சாலையில் உள்ளது மேலையூர் நிறுத்தம், இங்கிருந்து நாட்டாற்றினை கடந்து சென்றால் மேலையூர் கிராமம் உள்ளது.
சிறிய மூன்று நிலை கோபுரம் கடந்து சென்றால் அகன்று விரிந்த பிரகாரத்துடன் கோயில் உள்ளதைக் காணலாம். இறைவன் சந்திரமௌலீசர் கிழக்கு நோக்கி
அருள்பாலிக்கிறார். இவர் திருமால் வணங்கிய பெருமை கொண்டவர். அம்பிகை ஆனந்தவள்ளி தென்முகம் கொண்டு விளங்குகிறார். கோயில் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது, நான்கு கால பூசைகளும் நடைபெறுகிறது.
கருவறை கோட்டத்தில் அழகிய தென்முகன் சிலை நம்மை ஈர்க்கிறது. பிரகாரத்தின் மேற்கில் விநாயகர், விஸ்வநாதர் விசாலாட்சி, முருகன், மீனாட்சி உடனமர் சுந்தரேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
அர்த்தமண்டபத்தில் இறைவனின் இருபுறமும் விநாயகர், முருகன் சிலைகள் உள்ளன. அர்த்தமண்டபத்தில் நமஸ்கரிக்க நீண்ட சலவைக்கல் ஒன்று போடப்பட்டுள்ளது.
பிற கோயில்களில் கொடிமரம், நந்தியை தாண்டி தான் வீழ்ந்து வணங்க வேண்டும் என்ற விதி இக்கோயிலுக்குப் பொருந்தாது. இங்கு இறைவனுக்கும், அம்பிகைக்கும் சேர்த்து வணங்குவது சிறப்பு என்பதால் அர்த்த மண்டபத்தில் கற்பலகை போடப்பட்டுள்ளது.
ஒருமுறை இப்பகுதிக்கு வந்து தங்கிய காஞ்சி மஹா பெரியவர் இக்கல் பலகையில் தான் அமர்ந்து தியானித்ததாக குருக்கள் தகவல் தந்தார். காஞ்சி மடத்தின் வழிபாடு மூர்த்தி சந்திரமௌலீசர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுமன் கருடனும் திருமாலுடன் இத்தல இறைவனை வணங்கிய பெருமையும் இத்தல இறைவனுக்கு உண்டு. அதனால் இவ்வூர் பெருமாள் கோயில் இறைவனின் பீடத்திலேயே அனுமன், கருடன் வணங்கிய நிலையில் செதுக்கப்பட்டிருக்கிறதாம்.
திருவிடைமருதூர் பகுதியில் நவக்கிரக தலமாக சொல்லப்படும் ஊர்களில் சந்திர தோஷ நிவர்த்திக்கு வழிபடவேண்டிய இறைவன் மேலையூரானே. இத்தலம் நவக்கிரகங்களில் சந்திரனுக்கானது.