செய்திகள்

தீபத் திருவிழாவின் ஆறாம் நாள்: வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா

தினமணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 6-ஆம் நாளான திங்கள்கிழமை காலை வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு வெள்ளித் தேரில் அருணாசலேஸ்வரரும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா நவ. 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, பல்வேறு வாகனங்களில் சுவாமிகளின் வீதி உலா நடைபெற்று வருகின்றன.
தீபத் திருவிழாவின் 6-ஆம் நாள் விழாவில் 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெறுவது வழக்கம். அதன்படி, திங்கள்கிழமை காலை 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெற்றது. முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட 63 நாயன்மார்களுக்கு கோயிலில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதையடுத்து, காலை 10 மணிக்கு நாயன்மார்கள் வீதியுலா தொடங்கியது.
நாயன்மார்களைத் தொடர்ந்து, சமயக் குறவர்கள் நால்வரும், யானை வாகனத்தில் விநாயகரும் வீதியுலா வந்தனர். இறுதியாக, வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவும் நாயன்மார்களுடன் சேர்ந்து வீதியுலாவில் வலம் வந்தார்.
இரவு 10 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், வெள்ளித் தேரில் அருணாசலேஸ்வரர், வெள்ளி விமான வாகனங்களில் பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.
கோயில் ராஜகோபுரம் எதிரே இருந்து புறப்பட்ட பஞ்ச  மூர்த்திகள் வீதி உலா தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகள் வழியாகச் சென்றது. வழிநெடுகிலும் காத்திருந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் இரா.ஞானசேகர், கோயில் உபயதாரர்கள், ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
இன்று பஞ்ச ரதங்களின் தேரோட்டம்: தீபத் திருவிழாவின் 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (நவ. 20) பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் விநாயகர் தேரோட்டம் தொடங்குகிறது.
தொடர்ந்து, முருகர், அருணாசலேஸ்வரர், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரர் தேர் என பஞ்ச ரதங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வீதி உலா வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

SCROLL FOR NEXT