செய்திகள்

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருமுலைப்பால் திருவிழா

DIN


நாகை மாவட்டம், சீர்காழி சட்டைநாதர் கோயிலில்,திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் ஐதீக விழாவான திருமுலைப்பால் விழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
தருமை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீசுவரர் சுவாமி அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் உமையம்மை திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய  நிகழ்வு திருமுலைப்பால் விழாவாக ஆண்டுதோறும்  கொண்டாடப்படுகிறது. நிகழாண்டுக்கான விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, உற்சவர் திருஞானசம்பந்தர், பிரம்மபுரீசுவரர் சந்நிதியிலிருந்து பிரதான சந்நிதிக்கு எழுந்தருளினார். அங்கு, திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், இளைய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் முன்னிலையில், திருஞானசம்பந்தர் சிறப்பு அலங்காரத்தில் முத்துப்பல்லக்கில்  புறப்பாடு நடைபெற்றது.
 இதில், ஓதுவார்கள் தேவார திருமுறைகளைப் பாடியபடி வந்தனர். முத்துப்பல்லக்கு கோயிலை வலம் வந்து, பிரம்ம தீர்த்தக் கரைக்கு கொண்டுவரப்பட்டது. அதே வேளையில், சிவன் சன்னிதி கோயிலின் உட்புறம் உள்ள மலைக்கோயிலில் இருந்து உமாமகேசுவரி அம்பாள் வெள்ளி புஷ்பப் பல்லக்கில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்  திறக்கப்படும் சிறப்பு வாயில் வழியாக தீர்த்தக் கரைக்கு எழுந்தருளி, தங்கக் குடத்தில் உள்ள ஞானப்பாலை பொற்கிண்ணத்தில் எடுத்து, திருஞானசம்பந்தருக்கு அளிக்கும்  வைபவம்  நடைபெற்றது.
 பின்னர், உமாமகேசுவரர், உமாமகேசுவரிஅம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதான வாயில் வழியாக எழுந்தருளி, திருஞானசம்பந்தருக்கு காட்சி கொடுத்தனர்.  அப்போது சுவாமி, அம்பாள், திருஞானசம்பந்தருக்கு பட்டு வஸ்திரங்கள் சாற்றப்பட்டு, ஒருசேர மகா தீபாராதனை நடைபெற்றது. 
தருமபுரம் ஆதீனம் மற்றும் இளைய ஆதீனம் ஆகியோர் நிவேதனம் செய்த திருமுலைப்பாலை பக்தர்களுக்கு வழங்கினர்.  
விழாவில், சீர்காழி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி யுவராஜ் , சமுஇ. மேல்நிலைப் பள்ளி முன்னாள் செயலர் பாலசுப்பிரமணியன், சியாமளா பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயலர் எம். முரளிதரன் உள்பட திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருஞானசம்பந்தர் பிறந்த வீடு...
இதைத்தொடர்ந்து,  சீர்காழி இரட்டை தெருவில் உள்ள   பிறந்த வீட்டுக்கு  திருஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் புறப்பட்டுச் சென்றார். அங்கு சங்கரமடம் சார்பில் காஞ்சியிலிருந்து கொண்டுவரப்பட்ட வஸ்திரம் சாற்றப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. 
பின்னர், மாலையில் திருஞானசம்பந்தர் புஷ்பப் பல்லக்கில் முக்கிய வீதிகளின் வழியாக திருக்கோலக்கா திருத்தாளமுடையார் கோயிலுக்கு எழுந்தருளினார். அப்போது, கடைவீதியில் வர்த்தகர்கள் சார்பில் பஞ்சாட்சரம் கடை முன்பு பட்டு அணிவிக்கப்பட்டு, மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதைத்தொடர்ந்து, திருக்கோலக்கா கோயிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, திருஞானசம்பந்தருக்கு இறைவன் பொற்தாளம் அளிக்க, அம்பாள் அதற்கு ஓசை கொடுக்கும் நிகழ்வு  நடைபெற்றது. பின்னர், திருஞானசம்பந்தர் புஷ்பப் பல்லக்கில் சீர்காழி கோயிலை  வந்தடைந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT