செய்திகள்

சிவராத்திரியில் தயாரிக்கப்படும் விபூதிக்கு இவ்வளவு மகத்துவமா? கேது கூறும் ரகசியங்கள்!

மாசி மாதம் கிரு‌ஷ்ணபக்ஷம் சதுர்த்தசி திதி திருவோணம் நக்ஷத்திரம் ஒன்று சேரும் நாள் சிவராத்திரி. இது

DIN

மாசி மாதம் கிரு‌ஷ்ணபக்ஷம் சதுர்த்தசி திதி திருவோணம் நக்ஷத்திரம் ஒன்று சேரும் நாள் சிவராத்திரி. இது வருடத்திற்கு ஒருமுறை மட்டும் வரும் சிவராத்திரி. மாசி மாத  சதுர்த்தசி திதியினை நாம் மஹா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம்.

இந்தாண்டு இன்று 04-03-2019 (திங்கள் கிழமை) சிவராத்திரி சோமவாரத்தில் அமைந்துள்ளது.  எண்ணியதெல்லாம் நிறைவேற ஈஸ்வரா நீயே கதி என்று ஈசனது திருவடி பற்றிப் பணியும் நேரமும் அதுவே. அப்படி பணிந்து பேருபெற்றவர்களில் சிலர்.

மகாபாரதத்தில்  அர்ஜூ தவத்தால் பாசுபதம் என்னும் அஸ்திரத்தைப் பெற்றது, கண்ணப்ப நாயனார் என்னும் அன்புக்குரிய வேடன் சிவகதி என்னும் முக்தி அடைந்தது, பகீரதன் தவப்பலன் கங்கையை பாரிக்கு தந்தது, என்றும் பதினாறு வயதுடையோன் மார்க்கண்டேயனுக்காக பாச கயிற்றை பஷ்பமாகியது, அன்னை உமையாளுக்காக சரீரத்திலும் பாதி தந்து  பற்றற்ற நிலையில் இருக்கும் எம்பெருமான் அர்த்தனாதீஸ்வரராக ஆனது, இப்படி கூறிக்கொண்டே செல்லலாம்.

கோடி சூர்ய பிரகாசத்துடன் பரமேஸ்வரன் லிங்க வடிவில் மஹாலிங்கமாக இன்று தான் முதன்முதலில் தோன்றினார் என்கிறது நாரத புராணம். சிவபெருமானின் அடி  முடி காண முடியாது நான்முகன் திகைத்த நாள். சிவபஞ்சாக்ஷர மந்திர உபதேசம் குரு மூலம் உபதேசம் பெற சிவ பஞ்சாக்ஷர மந்திர ஜபம் ஹோமம் செய்து சித்தி பெறச்  சிறந்த நாள். சிவராத்திரியன்று உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பதாலும் முயற்சியுடன் பகலிலும் இரவிலும் தூங்காமல் கண் விழிப்பதாலும் சிவ லிங்கத்தைப் பூஜை செய்வதாலும் குறைவற்ற அனைத்து யோகங்களும் அனுபவித்து விட்டு இறுதியில் சிவ லோகம் அடையலாம். சக்தியற்றவர்கள் பால் பழம் மட்டும் சாப்பிடலாம். சிவன்  கோவிலில் சிவன் சன்னதியில் மண்ணாலான அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைக்கலாம்.

மஹா சிவராத்திரியன்று விபூதி தயாரிக்கும் முறை

விபூதி (திருநீரு) சைவர்கள் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஐசுவரியம் என்றும் கூறப்படும். விபூதி தயார் செய்ய உபயோகிக்கும் சானத்தின் தன்மையைக்  கொண்டு விபூதியை நான்கு வகைகளாகவும் அந்த சானத்தை தரும் பசுக்களின் தன்னையைக் கொண்டு ஐந்து வகைகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி அன்று ருத்ர  ஜபத்துடன் தயாரிக்கப்படும் வீபூதியே முதல் தரமானது மற்றும் விஷேசமானதாகும்.

சிவராத்திரியன்று காலை நித்ய கர்மாக்களை முடித்துவிட்டு வீட்டின் நடுவிலோ அல்லது கொல்லைப்புறத்திலோ அல்லது திறந்த வெளியில் முன் சேகரித்து வைத்த நெல்பதர்  (கருக்காய்) - பச்சரிசி தவிடு, உமி, வைக்கோல் பசுமாட்டு காய்ந்த சாணி உருண்டைகள் வரிசையாக அடுக்கி குவித்துவிட வேண்டும். தினந்தோறும் பசு மாட்டு சாணியைச்  சிறிய அளவில் தட்டையாகத் தட்டி வெய்யிலில் காயவைக்க வேண்டும் 

பிறகு ஸ்வாமி சன்னிதியில் எரியும் தீபத்திலிருந்து கற்பூரம் ஏற்றிக்கொண்டு வந்து அதை ஹோமகுண்டத்தில் வைத்து அந்த அக்னியில் ருத்ர ஜபம் மற்றும் விரஜா  ஹோமம் என்னும் தைத்திரீய உபநிஷத்திலுள்ள மந்திரங்களால் அல்லது பஞ்சாக்ஷர மந்திரத்தால் பசு நெய்யால் ஹோமம் செய்ய வேண்டும்.

பிறகு இந்த அக்னியைக் குவித்து வைத்துள்ள சாணி உருண்டைகளில் போட்டு அது நன்கு எரிந்து சுமார் ஒரு நாள் முழுவதும் எரிந்து அதன் கறுப்பு நிறம் மாறி வெண்மையாக மாறும். அதைச் சலித்து சுத்தமான பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுவே விபூதி தயாரிக்கும் முறை. சிவனுக்கு இந்த விபூதியை  அபிஷேகம் செய்து விட்டு உபயோகிக்கலாம். 

விபூதியின் மூன்று கோடுகள் கூறும் ரகசியம்

முதல் கோடு
அகாரம், கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ரஜோகுணம், ஆத்மா, கிரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை மஹாதேவன் ஆகியவை அடங்கியது.

இரண்டாவது கோடு
உகாரம், தக்ஷிணாக்னி, ஆகாயம், யஜுர்வேதம், சத்வகுணம், பகல் நேர மந்திரதேவதை இச்சாசக்தி, அந்தராத்மா, மகேஷ்வரன் ஆகியோர் இதில் உள்ளனர். 

மூன்றாவது கோடு
மகாரம், ஆஹவனீயம், பரமாத்மா, தமோகுணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம், மாலைநேர மந்திர தேவதை, சிவன் ஆகியோர் இதில் உள்ளனர்.

திருநீறு அணிவதால் ஏற்படும் பலன்கள்

திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்றுச் சிறப்புடன்  வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்ப்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப்பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும்  அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.

சிவராத்திரி மற்றும் விபூதிக்கான ஜோதிட விளக்கங்கள்

ஆக்கல், காத்தல், அழித்தல் எனும் படைப்பின் சுழற்சியில் பிரம்மதேவர் ஆக்கல் தொழிலையும் ஸ்ரீ விஷ்ணு பகவான் காத்தல் பணிகளையும் ருத்ர மூர்த்தியான சிவ  பகவான் அழித்தல் தொழிலையும் செய்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். எனவேதான் அவரை கால சம்ஹார மூர்த்தி (The destroyer) என்றும் புராணங்களும்  இதிகாசங்களும் கூறுகின்றது. சிவபெருமான் அணிவது விபூதி என்பதும் சிவபெருமான் இருக்கும் இடம் மயானம் (ஸ்மசானவாசி என பைரவரை குறிப்பிடுகின்றது) ஆகும்.  காசியே ஒரு மயான பூமிதானே!

விபூதி கூறும் வாழ்க்கை தத்துவம்

எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும் தத்துவத்தை உணர்த்தி, நாமும் இதுபோல்தான்,  ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துவதாகக் கருதப்படுகிறது. சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது  குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.  விபூதி எனும் சாம்பலுக்கு ஜோதிட காரகர் யார் தெரியுமா? ஞான காரகன் என்றும் மோட்ச காரகன் என்றும் வர்ணிக்கப்படும் கேது பகவான்தான். கேதுவை ஞான காரகன்  எனவும் மோட்ச காரகன் என்றும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

கேது தான் இருக்கும் இடங்களையும் (பாவங்கள்) பார்க்கும் இடங்களையும் அழித்து அந்த பாவ காரகங்களின் மூலமாக ஞானத்தை வழங்கி பின் மோட்சத்தையும் வழங்கி  விடுகிறார். கேதுவின் அதிதேவதை ருத்திரன் ஆகும். அதாவது சிவனின் மிக ஆக்ரோஷமான ஸ்வரூபம் ஆகும். எனவேதான் கேதுவும் அழிக்கும் தன்மையைப் பெற்றிருக்கிறார்  போலும்! கேதுவின் தன்மை நெருப்புத்தன்மை ஆகும். தேவையற்ற அனைத்தையும் அழித்துப் பிடி சாம்பலாக்கி படைப்பின் மறுசுழற்சிக்கு உதவுபவர் கேதுவாகும்.

மேலும், கேதுவின் காரகங்களில் மயானம், கல்லரை, சுடுகாடு, பிணவறை, பிண ஊர்தி, கழிவு அகற்றுதல், முடி, முடி திருத்துதல், பிணம் எரித்தல்/அடக்கம் செய்தல்,  பிரளயங்கள், குரூர சம்பவங்கள், கொத்து கொத்தான மரணங்கள், தீ விபத்துகள், எரிந்து நாசமாகுதல் போன்றவை அடங்கும். ஆக்கத்திற்கு உபயோகிக்கும் நெருப்பிற்கு  சூரியனும் செவ்வாயும் காரகனாகின்றனர். ஆனால் அழிவைத் தரும் நெருப்பு, தீ விபத்துகள், பிணத்தை எறிக்கும் நெருப்பு, எரிமலை, தூமகேது எனப்படும் எரிகற்கள் (தூமகேது  கேதுவின் மகனாவார்) ஆகியவை கேதுவின் ஆதிக்கமும் காரகமும் கொண்டவையாகும்.

இன்று சிவராத்திரியில் சிவ பூஜை செய்யும் அகோரிகளும் கேதுவின் ஆதிக்கம் பெற்றவர்களே. அவர்கள் அறைகுறையாக வெந்த பிணந்தின் மாமிசத்தையும் கஞ்சா போன்ற  போதை வஸ்துவின் பிடியில் யோக நிஷ்டையில் இருப்பதும் கேதுவின் ஆதிக்கமே. எனவே கேதுவை அழித்தல் மற்றும் மறுபிறப்பிற்கு வழிவகுத்தல் என கூறப்படுகின்றது.   ஜோதிடத்தில் அசுவினி, மகம் மற்றும் மூலம் ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கு கேதுவை அதிபதி என்கிறது ஜோதிடம். இதைச் சற்று கூர்ந்து கவனித்தால் கேது  அழிவிற்கும் மறு உற்பத்திக்கும் இடையில் இருப்பது புலனாகும்.

விம்சோத்தரி தசா வரிசையில் ஒருவரின் கடைசி நிலையை (மரணத்தை) குறிப்பது புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம்-கேட்டை-ரேவதி ஆகும். உலகில் உற்பத்தியின்  ஆரம்பம் சுக்கிலமாகும். அதைக் குறிக்கும் சுக்கிரனின் நட்சத்திரங்கள் பரணி, பூரம்  பூராடம் ஆகும். மேஷ மண்டலமானாலும், சிம்ம மண்டலமானாலும், தனுர்  மண்டலமானாலும் புதனின் நட்சத்திரத்திற்கும் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கும் இடையில் தான் கேதுவின் நட்சத்திரங்கள் அமைந்திருக்கும். இதுவே நமக்குப் பிறப்பின்  மறுசுழற்சியை விளக்கும்.

கேது தான் இருக்கும் பாவத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தியும் (ஞான காரகன்) நம்மிடமிருந்து நீக்கிவிடுகிறார். தான் நின்ற மற்றும் பார்த்த பாவத்தை முற்றிலும்  செயல்படாமல் செய்தும் நீக்கி விடுகிறார் (மோட்ச காரகர்). அவர் பக்தியையும் ஞானத்தையும் மட்டுமே கேட்காமலே வாரி வாரி வழங்கிவிடுகிறார். காஞ்சி பெரியவரின்  ஜாதகத்திலும் சீரடி சாய் பாபாவின் ஜாதகத்திலும் லக்னத்திற்கு இரண்டில் கேது சனியோடு சேர்ந்து நின்று குடும்ப ஸ்தானம், சுகஸ்தானம், மற்றும் அயன சயன போக  ஸ்தானங்களுக்கு மோட்சத்தை அளித்து அவர்கள் சித்த புருஷர்களாக வாழ்ந்தது கேதுவின் ஞான காரகத்திற்கு உதாரணமாகும்.

அழிக்கும் கடவுளான ருத்ரனை அதிதேவதையாக கொண்ட கேது, 14/2/2019 அன்று உத்திராட நக்ஷத்திர சாரத்தில் கோச்சாரத்தில் பயணம் செய்யும் போது சுதந்திர  இந்தியாவின் ஜாதகத்தில் லக்னாதிபதியும் ஆறாம் பாவாதிபதியுமான சுக்கிர பகவானை தொடர்புகொள்ளும்போது புல்வாமா தாக்குதலும் அதனைத் தொடர்ந்து 40 வீரர்களும்  உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. முண்டேன் அஸ்ட்ராலஜி எனப்படும் மேதினி ஜோதிடத்தில் ஆறாம் பாவம் என்பது ராணுவத்தையும் கூர்ம சக்கரத்தின்படி உத்திராட  நக்ஷத்திரம் வடமேற்கு இந்திய பகுதியையும் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது.

கேதுவிற்கான பரிகார ஸ்தலங்கள்

காளஹஸ்தி, திருபாம்புரம், கீழப்பெரும்பள்ளம் போன்ற ஸர்ப ஸ்தலங்கள் பல கேது பரிகார ஸ்தலங்களாக இருந்தாலும் கேதுவின் காரகத்தின் அடிப்படையில் கீழ்கண்ட  கோயில்கள் பரிகார ஸ்தலங்களாக அமைகிறது.

1. ஞானம், கல்வித்தடை, புத்தி கோளாறு போன்ற பிரச்னைகளுக்கு சிவாம்சமான திருச்சி உச்சி பிள்ளையார் மற்றும் ஆலங்குடி தக்ஷிணாமூர்த்தி ஸ்தலங்கள் சிறந்த  பரிகார ஸ்தலங்களாகும்.

2. குடும்ப வாழ்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு சிவாம்சம் பொருந்திய சக்தி ஸ்வரூபமான காளியை வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாகும்.

3. அழிவிற்கும் ஆக்கத்திற்கும் இடையே நிற்கும் கேதுவால் ஏற்படும் மற்ற விபத்து போன்ற பிரச்னைகளுக்கும் சேதாரங்களைக் குறைக்கவும் ருத்ர அம்சமான  திருவண்ணாமலை, திருச்செந்தூர், திருக்கடையூர் கால சம்ஹார மூர்த்தி, திருச்சி திருப்பைஞ்சிலி ஸ்ரீஞீலிவணநாதர் ஆலயங்களும் சிறந்த பரிகார ஸ்தலங்களாகும்.

4. தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் அருகில் தேப்பெருமாநல்லூர் மோட்சத்தை அருளும் ஸ்தலமாகும். மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின்  குறிக்கோள் என்பர் பெரியோர். அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமாநல்லூர். புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த  நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த சிவராத்திரி நாளில் சிவனை வழிபடுவதால் கேதுவின் அருளும் பெற்று ஞானமும் மோக்ஷமும் பெற்று உய்வோமாக.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்சியில் பிஐஎஸ் அலுவலகத்தை அமைக்க மத்திய அமைச்சா்களிடம் துரை வைகோ கோரிக்கை

மயிலை சிவக்குமாா் கொலை வழக்கு: ரெளடி நீதிமன்றத்தில் சரண்

வளா்ப்பு நாய்க்கு உரிமம் பெறதாவருக்கு அபராதம் விதிப்பு!

உயா்கல்வி, ஆராய்ச்சி நடவடிக்கையில் தமிழகத்தின் பங்கு அதிகரிக்கும்: டி.ஆா்.பி.ராஜா

157 மீனவா்களுக்கு உயிா் காப்பு சாட்டைகள் வழங்கும் பணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT