முகப்பு
செய்திகள்

சனிப் பெயர்ச்சி 2020 - பொதுப் பலன்கள்

2020-ம் ஆண்டுக்கான சனிப் பெயர்ச்சி டிசம்பர் 27-ம் தேதி அதிகாலை 5.22-க்கு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுகிறார். 

Updated On : 14 டிசம்பர், 2020 at 1:35 PM
சனிப் பெயர்ச்சி 2020
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:37 PM

நவக்கிரகங்களில் கர்ம கிரகம் - தொழில் கிரகம் வாழ்வில் அனைத்து விதமான நல்ல விஷயங்களையும் அளிப்பவர் - சூரியனின் மகன் மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான் அழைக்கப்படுகிறார்.

சனி கிரகம் மட்டுமே ஈஸ்வர பட்டம் ஒரே கிரகம். இவர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வித கர்மாக்களுக்கும் குரு. நம் வாழ்வில் முக்கியமான விஷயங்கள் - ஆயுள், தொழில், கர்மா. இம்மூன்றிக்கும் அதிபதி அதாவது காரகன் சனியாவார். ஒருவருடைய ஜாதகத்தில் ஆயுள்ஸ்தானாதிபதி பலம் குன்றியிருந்தாலும் சனீஸ்வர பகவான் பலமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று சொல்லலாம். 

சனி பகவானுக்குரிய ஆதிக்கம் பெற்ற விஷயங்கள்

Advertisement

உழைப்பு, சமூக நலம், தேச தொண்டு, புதையல், தலைமை தாங்கும் வாய்ப்பு, உலகியல் அறிவு, பல மொழிகளில் பாண்டித்யம், விஞ்ஞானத்தில் தேர்ச்சி, எண்ணைக் கிணறு, பெரிய இயந்திரங்கள் போன்றவற்றிற்கு காரகத்துவம் கொடுப்பவர். கிரக வரிசையில் ஆறாவதாக வருபவர். கிழமைகளில் சனிக்கிழமைக்கு ஆதிக்கம் செலுத்துபவர். அளவின் அடிப்படையில் குருவிற்கு அடுத்த பெரிய கிரகம் சனி கிரகமாகும். 

குருவிற்கு பார்வை பலமும் சனிக்கு ஸ்தான பலமும் சொல்லப்பட்டிருக்கிறது. நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகளில் இருக்கும் தடை தாமதத்தை நமக்கு உணர்த்தும் கிரகம் சனியாகும். சனி இருக்கும் கிரகத்தை வைத்தே ஒருவரது வாழ்வில் இருக்கும் தடைகளைத் தெரிந்து கொள்ள இயலும். சனி எங்கு இருக்கிறாரோ அதற்குண்டான பரிகாரங்களைச் செய்வதன் மூலம் நாம் தடைகளை அகற்ற முடியும். 

சனியின் பலம்

சனி எந்த ஸ்தானத்தைப் பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் சிறிது காலத்திற்குப் பிறகு பலமும், விருத்தியும் அடைகிறது. சனிக்கு 3, 7, 10 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்திலிருந்து 3, 7, 10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். மூன்றாம் பார்வையும், பத்தாம் பார்வையும் சிறப்புப் பார்வைகளாகும்.

2020-ம் ஆண்டுக்கான சனிப் பெயர்ச்சி நிகழும் மங்களகரமான ஸ்ரீசார்வரி வருஷம், மார்கழி மாதம் 11ம் நாள், ஆங்கில தேதி 26.12.2020 அன்றைய தினம் பின்னிரவு 27.12.2020 தேதி முன்னிரவு அதிகாலை 5.22க்கு தனுசு லக்னத்தில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஆட்சியாக மாறுகிறார். 

மகர ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மகர ராசியிலிருந்து தனது மூன்றாம் பார்வையால் மீன ராசியையும் - ஏழாம் பார்வையால் கடக ராசியையும் - பத்தாம் பார்வையால் துலா ராசியையும் பார்க்கிறார். சனி பகவானுக்கு பார்வை பலத்தை விட ஸ்தான பலமே அதிகம். அதாவது பார்க்கும் இடத்தின் பலத்தினை விட இருக்கும் இடத்தின் பலமே அதிகம். 

2020-ம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சிப் பொதுப் பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்குகிறார். 

டிச. 15 ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ராசிக்கு என இந்தப் பலன்கள் தொடரும். இன்று பொதுவான பலன்கள்:

பொதுப் பலன்கள்

சனி ஆட்சியாக மாறுவதால் சுப நிகழ்ச்சிகளில் தடை அகலும். திருமணம் சம்பந்தப்பட விஷயங்களில் தொய்வு ஏற்படும். ஆனால் பொருளாதார நிலைமை சீருடையும். அதிக அளவில் விரயங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். 

அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக உயரும். அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன்கள் உருவாகும். 

இடி மின்னல் அதிகம். இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். 

உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். புராதன ஆலயங்கள் மற்றும் கட்டடங்களில் சேதமும் நஷ்டமும் உண்டாகும். அதேவேளையில் புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும்.

மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். பல முக்கிய வழக்குகளுக்கு இந்த ஆண்டு எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும்.

எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

ராசி

சனியின் பெயர்

பலன்

மேஷம்

தொழில் சனி

தொழிலில் சிறிது சிறிதாக முன்னேற்றம்

ரிஷபம்

பாக்கிய சனி

தந்தை - தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல் - பணப் பிரச்சனை

மிதுனம்

அஷ்டம சனி

அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை

கடகம்

கண்டக சனி

வாகனங்களில் செல்லும் போது கவனம் - வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற மன சஞ்சலம்

சிம்மம்

ரண ருண சனி

உடல்நலத்தில் கவனம் தேவை

கன்னி

பஞ்சம சனி

குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதம்

துலாம்

அர்த்தாஷ்டம சனி

வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்குவதற்கு தடை

விருச்சிகம்

தைரிய வீர்ய சனி

தைரிய அதிகரிக்கும் - மதியூகம் வெளிப்படும்

தனுசு

வாக்குச் சனி

வாக்கு கொடுக்கும் போது அதிக கவனம் தேவை

மகரம்

ஜென்ம சனி

அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை

கும்பம்

விரைய சனி

வீண் விரையம் ஏற்படுதல்

மீனம்

லாப சனி

அதிக முயற்சிக்குப் பிறகு லாபம் அதிகரிக்கும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.