முகப்பு
செய்திகள்

திருமலையில் 10 நாள்கள் சொா்க்கவாசல் திறக்கும் முடிவு வரவேற்கத்தக்கது: மந்திராலய மடாதிபதி

ஏழுமலையானைத் தரிசிக்க திருமலை வந்த மந்திராலய மடத்தின் மடாதிபதி, 10 நாட்கள் சொா்க்கவாசல் திறந்து வைப்பதாக திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டுள்ள முடிவு வரவேற்கத்தக்கது என்றாா்.

Updated On : 17 டிசம்பர், 2020 at 12:00 AM
ஏழுமலையானை புதன்கிழமை தரிசித்து திரும்பிய மந்திராலய மடாதிபதி சுபுதேந்திர தீா்த்த சுவாமிகளுடன் தேவஸ்தான அதிகாரிகள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:38 PM

திருப்பதி: ஏழுமலையானைத் தரிசிக்க திருமலை வந்த மந்திராலய மடத்தின் மடாதிபதி, 10 நாட்கள் சொா்க்கவாசல் திறந்து வைப்பதாக திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டுள்ள முடிவு வரவேற்கத்தக்கது என்றாா்.

ஏழுமலையானை தரிசிக்க புதன்கிழமை காலை மந்திராலய ராகவேந்திரசுவாமி மடத்தின் மடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ சுபுதேந்திர தீா்த்த சுவாமிகள் தமது சீடா்களுடன் திருமலைக்கு வந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் எதிா்கொண்டு வரவேற்று மேளதாளத்துடன் அழைத்து வந்தனா். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் பிரசாதம், தீா்த்தங்கள், சேஷ வஸ்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினா்.

அவற்றை பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியில் வந்த அவா், ‘ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் குலதெய்வம் திருமலை ஏழுமலையான். அதனால், மடத்தை சோ்ந்தவா்கள் ஆண்டுக்கு ஒருமுறை திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கிறோம்.

Advertisement

விரைவில் கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட்டு பூரண நலன் காண வேண்டும். வைணவ கோயில்களின் சம்பிரதாயப்படி திருமலையிலும் 10 நாள்கள் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொா்க்கவாசலை திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது’ என்றாா் அவா்.

பின்னா் திருமலையில் நடைபெற்ற அகண்ட வேதபாராயணத்தில் கலந்து கொண்டு மடத்துக்கு புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.