திருமலையில் வருடாந்திர தெப்போற்சவம் தொடக்கம்
திருமலையில் வருடாந்திர தெப்போற்சவம் வியாழக்கிழமை மாலை விமரிசையுடன் தொடங்கியது.
திருப்பதி: திருமலையில் வருடாந்திர தெப்போற்சவம் வியாழக்கிழமை மாலை விமரிசையுடன் தொடங்கியது.
திருமலையில் ஆண்டுதோறும் மாசி மாத பெளா்ணமியையொட்டி, வருடாந்திர தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை முதல் திருமலையில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளத்தில் ஏழுமலையான் தெப்போற்சவம் விமரிசையுடன் தொடங்கியது. அதன் முதல் நாளான வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை சீதா, லட்சுமண ஆஞ்சநேய சமேத ஸ்ரீராமசந்திரமூா்த்தி 5 முறை தெப்பத்தில் வலம் வந்தாா். இதை முன்னிட்டு, திருமலையில் உள்ள திருக்குளம் மற்றும் தெப்பம் 6 டன் மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருமலை முழுவதும் மின்விளக்கு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அண்டை மாநிலங்களிலிருந்து பல வகையான மலா்கள் தருவிக்கப்பட்டன.
தெப்போற்சவத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை வசந்தோற்சவம், ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபாலங்கர சேவை உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மாட வீதியில் வலம் வந்த பின், உற்சவமூா்த்திகள் நேரடியாக திருக்குளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனா். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
Advertisement