முகப்பு
செய்திகள்

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் (தனுசு, மகரம், கும்பம், மீனம்): கே.சி.எஸ் ஐயர் கணித்தது

2021-ம் ஆண்டுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் (தனுசு, மகரம், கும்பம், மீனம்) ஆகிய நான்கு ராசிகளை கணித்து வழங்கியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

2021-ம் ஆண்டுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் (தனுசு, மகரம், கும்பம், மீனம்) ஆகிய நான்கு ராசிகளை கணித்து வழங்கியுள்ளார்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய) 

01.01.2021 முதல் 30.06.2021 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் இருந்த சுணக்கங்களும், இடையூறுகளும் நீங்கி ராஜபாட்டையில் பயணம் செய்வீர்கள். உங்கள் செயல்களில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உடன் உழைப்பவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள். எதிர்பார்க்கும் பணம் மொத்தமாகக் கைக்கு வந்து சேரும்.  

வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் வருமானம் வரக்கூடிய வெற்றி உண்டாகும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். உங்கள் புத்திசாலித்தனம் மிளிரும். பெயர், புகழ், செல்வாக்கு ஆகியவை உயரத் தொடங்கும். 

உடல் ஆரோக்கியம், மன வளம் இரண்டும் நன்றாகவே இருக்கும். உங்களுடன் தகராறு செய்ய வந்தவர்கள் பேசாமல் திரும்பிப் போய் விடுவார்கள். உங்கள் பேச்சுத் திறமையால் "கெட்டிக்காரர்' என்று பெயர் எடுத்து விடுவீர்கள். பழைய கடன்களையும் திருப்பி அடைத்து விடுவீர்கள். இல்லத்திலும் சுபநிகழ்ச்சிகளுக்குப் பிரயத்தனங்கள் நடக்கத் தொடங்கும் காலகட்டமிது. 

01.07.2021 முதல் 31.12.2021 வரை உள்ள காலகட்டத்தில் சாதனையின் நுழைவுவாயிலில் இருப்பீர்கள். குடும்பத்தில் எந்தக் குறையும் உண்டாகாது. சிலருக்கு திடீரென்று திருமண வாய்ப்புகள் தேடி வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.  

உறவினர்கள் நண்பர்கள் நடுவில் ஒரு சிகரம் போல் ஜொலிப்பீர்கள். வாழ்க்கையில் முன்னேற சிறப்பான முயற்சிகளை எடுப்பீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உதவுவார்கள். பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு அதிக லாபத்தைக் காண்பீர்கள். அதேநேரம் எவரிடமும் அதீதமான அன்பு செலுத்த வேண்டாம். உடன்பிறந்தோரிடம் விட்டுக் கொடுத்துப் போகவும். எவருக்கும் கடன் வாங்கிக் கொடுப்பதோ, முன் ஜாமீன் போடுவதோ கூடாது. எதிலும் எச்சரிக்கையாக இருக்கும் காலகட்டமிது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்தப் புத்தாண்டில் படிப்படியான வளர்ச்சி உண்டாகத் தொடங்கும். புதிய விஷயங்களையும், தொழில் நுட்பங்களையும் கற்றுக் கொள்வீர்கள். கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.  

வியாபாரிகளுக்கு கணிசமான லாபம் உண்டாகும். நண்பர்களும் கூட்டாளிகளும் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். ஏற்கெனவே செய்துவந்த வியாபாரத்தைத் தவிர புதிய வியாபாரம் செய்யவும் முயற்சி எடுப்பீர்கள். உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றிபெறும்.  

விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். நீர் வரத்து அதிகமாக இருப்பதால் லாபம் அதிகரிக்கும். உங்களுக்கு நியாயமாக வரவேண்டிய பணம் தானாகவே உங்கள் கை வந்து சேரும். மற்றபடி உங்கள் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுத்து செய்யும் காரியங்களில் எதிர்பார்ப்புக்கும் மேலான பலன்களைப் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு அனைத்து காரியங்களும் குறித்த நேரத்தில் நடக்கும். இக்கட்டான தருணங்களில் உங்கள் சமயோஜித புத்தி கைகொடுக்கும். முயற்சி இன்றியே பல சாதனைகளைச் செய்து காட்டுவீர்கள்.  
கலைத் துறையினரின் திறமைகள் பளிச்சிடும். புதிய தொழில் நுட்பத்துடன் பணிபுரிந்து வெற்றியடைவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான பயணங்களை மேற்கொள்வீர்கள்.  

பெண்மணிகள் குடும்பத்தில் நிம்மதி காண்பார்கள். கணவருடன் ஒற்றுமை ஓங்கும். உற்றார் உறவினர்களிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். தெய்வ பலம் கூடும். எந்தக் காரியத்திலும் நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். 

மாணவமணிகள் படிப்பில் கவனம் சிதறாமல் எச்சரிக்கையுடன் இருப்பீர்கள். ஆசிரியர்களாலும் பாராட்டப்படுவீர்கள். நண்பர்களின் ஆதரவு அதிகம் கிடைக்கும். 

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.

******

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

01.01.2021 முதல் 30.06.2021 வரை உள்ள காலகட்டத்தில் "கிணற்றில் போட்ட கல்' மாதிரி கிடந்த காரியங்கள் யாவும் மீண்டும் நடக்கத் தொடங்கும். நண்பர்களும் உங்கள் முயற்சிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். எதையும் எதிர்கொள்ளும் துணிவும், தைரியமும் உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். 
பின் விளைவுகளை ஆராய்ந்து பார்த்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டும்.  குடும்பத்தில் உள்ளவர்களின் குற்றம், குறைகளைப் பெரிது படுத்த வேண்டாம். உங்களின் அனைத்துச் செயல்களும் இறைவனின் இச்சைப்படியே நடக்கிறது என்கிற தத்துவத்தை உணர்ந்து கொள்வீர்கள்.    

உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவற்றில் ஈடுபடவும். உடல் திறனை நன்றாகப் பராமரித்து கொள்வீர்கள். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் யோகம் ஆகியவை உண்டாகும் காலகட்டமிது. 

01.07.2021 முதல் 31.12.2021 வரை உள்ள காலகட்டத்தில் சிரித்துப் பேசியே சாதனைகளைச் செய்து விடுவீர்கள். சிலருக்கு வெளிநாடு சென்று மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வருமானம் படிப்படியாக உயரும். 

புதிய கடன்கள் மூலம் புது வீடு வாங்கி குடி புகும் பாக்கியமும் உண்டாகும். மனதில் எழும் நல்ல சிந்தனைகள் மூலம் பிறருக்கு நன்மைகள் செய்வீர்கள்.   தொட்டதற்கெல்லாம் பயந்து கொண்டிருந்த மனோபாவம் மாறி எதிலும் தைரியத்துடன் முடிவெடுப்பீர்கள். பூர்வீகச் சொத்து விவகாரங்களில் அமைதியான போக்கைக் கடைப்பிடித்து வருவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நட்புடன் பழகி அவர்களின் ஆதரவைப் பெறுவார்கள். அலுவலகத்தில் உங்கள் பெயர், புகழ் உயரத் தொடங்கும். குறுக்கு வழியை யோசிக்காமல் நேர்மையாகச் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வு சிறிது தாமதமாகக் கிடைக்கும்.  

வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக அமையும். நண்பர்களின் உதவியும் கிடைக்கும். புதிய வண்டி, வாகனங்களை வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக நடைபெறும். செலவுகளைக் குறைத்து வருமானத்தைப் பெருக்க முற்படுவீர்கள். புதிய முதலீடுகளையும் செய்யும் காலகட்டமாக இது அமைகிறது. 

விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் உழைப்புக்கு இரட்டிப்பு மதிப்பு உண்டாகும். கால்நடைகளால் லாபமடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிறையும். பணம் கை நிறைய இருக்கும். புதிய குத்தகைகளை எடுத்துத் திறம்பட நடத்துவீர்கள். 

அரசியல்வாதிகளின் ஆற்றலும், தைரியமும் அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். கடன் பிரச்னைகளில் நெருக்கடி எதுவும் இருக்காது. கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.  

கலைத்துறையினரின் படைப்புகளுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும். பெயரும், புகழும் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களைத் திறம்படச் செய்து முடிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். ரசிகர்களுக்கும் செலவு செய்து மகிழ்வீர்கள். 

பெண்மணிகளுக்கு பணவரவு சீராக இருப்பதால் இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவருடன் ஒற்றுமையைக் கடைப்பிடிப்பீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். உடல் நலத்துக்காக யோகா, பிராணாயாமம் போன்றவைகளைக் கற்றுக்கொள்வீர்கள். 

மாணவமணிகள் பொறுப்புடன் செயல்பட்டு ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் நல்ல பெயர் எடுப்பார்கள். படிப்பிலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விளையாட்டிலும் கவனம் செலுத்தி வெற்றி பெறுவீர்கள். 

பரிகாரம்: அம்மன் வழிபாடு உகந்தது.

******

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

01.01.2021 முதல் 30.06.2021 வரை உள்ள காலகட்டத்தில் கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் செயல்களில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். செய்தொழிலை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் பலிதமாகும். திட்டமிட்டச் செயல்களைத் திட்டமிட்டபடியே செய்து  முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார நிலையில் மேன்மை உண்டாகும். 

நீண்ட காலமாக மனதை அரித்து வந்த பிரச்னைகளுக்குத் தீர்வு உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக விளங்கும். வேலை விஷயமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மீண்டும் இணைவார்கள். பிரிந்திருந்த தம்பதியர் இடையே ஒற்றுமை உண்டாகும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மழலை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பிள்ளைப்பேறு உண்டாகும். 

சிலர் வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று வருவார்கள். அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். ஏற்கெனவே உள்ள சொத்துகளில் தடைப்பட்டிருந்த வருமானம் வரத்தொடங்கும். சோம்பலை மூட்டை கட்டி வைத்துவிட்டு சுறுசுறுப்புடன் செயலாற்றும் காலகட்டமாக இது அமைகிறது. 

01.07.2021 முதல் 31.12.2021 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தினர் மீது செலுத்தும் அக்கறை அதிகரிக்கும். வருமானம் சீராகவே தொடரும். அதிக முதலீடு செய்யாமல் அறிவுசார்ந்த சேவைத் துறைகளிலும் ஈடுபடுவீர்கள். பங்கு வர்த்தகம், ஸ்பெகுலேஷன் போன்ற துறைகளிலிருந்தும் சிறிது லாபம் கிடைக்கும்.  

ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் எதுவும் பெரிதாக ஏற்படாது. குழந்தைகளை விளையாட்டுகளில் ஈடுபடுத்துவீர்கள். அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். எந்தக் காரியத்திலும் திருப்தி, தெளிவுடன் செயல்பட்டு வெற்றி பெறும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்கள் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து பழக வேண்டியிருக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். தடைப்பட்ட ஊதிய உயர்வு கிடைக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும்.  

வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் வளர்ச்சியைக் காண்பார்கள். கூட்டாளிகளுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயர்ந்து காணப்படும். தொடர்ந்து வந்த தடைகள் நீங்கி அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் மேன்மையைக் காண்பீர்கள்.  

விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். தானிய விற்பனையும் சிறப்பாக இருக்கும். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். உங்கள் கெüரவம், அந்தஸ்து உயர்ந்து காணப்படும். புதிய பாசன வசதிக்கு ஏற்பாடு செய்வீர்கள். 

அரசியல்வாதிகள் தன்னலம் கருதாமல் கட்சிப் பணியாற்றுவார்கள். கட்சி மேலிடத்தில் நற்பெயர் பெற்று கொண்டாடப்படுவீர்கள். மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது கவனமாக இருக்கவும். எதிர்க் கட்சியினரிடையே பேசும் போது எச்சரிக்கை தேவை. 

கலைத்துறையினர் பிரகாசமான எதிர்காலத்தைக் காண்பார்கள். வருமானம் பலவகைகளிலும் வரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் தேடி வரும். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உங்கள் படைப்புகளுக்கு அங்கீகாரமும் கிடைக்கும். 

பெண்மணிகள் புதிய ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் கடன் தொல்லை சற்று குறையும். பெரியவர்களின் அன்பும், ஆதரவும், அரவணைப்பும் இருப்பதால் உங்கள் அந்தஸ்து உயர்ந்து கொண்டே இருக்கும். 

மாணவமணிகள் கல்வியில் சாதனை படைப்பார்கள். உள்ளரங்கு மற்றும் வெளி விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர்கள் உங்களைப் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.  

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.

******

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

01.01.2021 முதல் 30.06.2021 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழில் எதுவானாலும் அதில் சிறப்பான முன்னேற்றங்களைக் காண்பீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கும் ஆதரவு கொடுப்பீர்கள்.  

சமூகத்திலும் உங்கள் பெயர், புகழ், அந்தஸ்து உயர்ந்து காணப்படும். எதிலும் நேர்மையைக் கடைப்பிடிப்பீர்கள். அந்தஸ்தான பதவிகளில் அமர்வீர்கள். புதிய வருமானத்தால் அசையும், அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். உடன் பிறந்தோரின் ஆதரவால் சுமுகமான பாகப்பிரிவினைகள் ஏற்படும்.

01.07.2021 முதல் 31.12.2021 வரை உள்ள காலகட்டத்தில் வெளியில் கொடுத்திருந்த கடன்கள் வட்டியும் முதலுமாக வசூலாகிவிடும். முகத்தில் பொலிவுடனும், நடையில் மிடுக்குடனும் காணப்படுவீர்கள். செய்தொழிலில் உயரிய நிலையை எட்டி விடுவீர்கள். உயர்ந்தவர்களின் நட்பும் ஆதரவும் உண்டாகும்.  

செய்தொழிலை பல இடங்களுக்கும் விரிவுபடுத்துவீர்கள். மனதிலிருந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். பூர்வீகச் சொத்துகளில் உண்டான பிரச்னைகள் நீங்கிவிடும். பெற்றோரும் உங்கள் எண்ணங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அதேநேரம் அவர்களுக்கு சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். பழைய சிந்தனைகளை விலக்கி, புதிய சிந்தனையோடு உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் செயலாற்றும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் எடுத்த காரியங்களில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகி அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். மேலதிகாரிகளின் உங்களைப் பாராட்டுவார்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு இரண்டும் கிடைக்கும். சிலருக்கு பணிமாற்றம், பணியிட மாற்றம் உண்டாகும்.  

வியாபாரிகள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கூட்டாளிகளும் நண்பர்களும் தேவையான ஆதரவை நல்குவார்கள். வெளியில் கொடுத்திருந்த கடன்களும் வசூலாகும். பொருளாதார நிலைமை மேம்படும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். 

விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். இதனால் வருமானம் படிப்படியாக உயரும். கால்நடைகளும் கணிசமான லாபத்தைப் பெற்றுத்தரும். சிலர் புதிய குத்தகைகளை எடுத்து நடத்துவார்கள். உங்கள் வருமானத்தைப் பங்கு போட நினைக்கும் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்கவும்.  

அரசியல்வாதிகளுக்கு எதிராக மற்றவர்கள் தீட்டும் ரகசியத் திட்டங்களைச் சாதுர்யத்துடன் சமாளித்து முறியடிப்பீர்கள். மாற்றுக் கட்சியினரிடம் மனம் திறந்து பேச வேண்டாம். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெற்று புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். தொண்டர்களிடம் உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். 

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் மனநிம்மதி அடைவீர்கள். வருமானம் இரட்டிப்பாகக் கிடைக்கும். புதிய நண்பர்கள் அமைவார்கள். அவர்கள் மூலம் சில வாய்ப்புகளும் கிடைக்கும். ரசிகர்கள் உங்களை ஊக்கப்படுத்துவார்கள். கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகன்று, குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்து காணப்படும். உங்களுக்குரிய பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றுவீர்கள். உற்றார் உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். உடல்நலம் சீராகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  

மாணவமணிகள் கடின உழைப்பினால் முதல் இடத்திற்கு வருவார்கள். பெற்றோர்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள். விரும்பிய துறையில் மேற்படிப்பு படிக்க வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களால் ஏற்படும் இடையூறுகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். 

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.

முழு கட்டுரையைப் படிக்க →