2023-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். முதல் ஆறு ராசிகள் (மேஷம் - கன்னி) வரை பலன்கள் .
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
சித்திரை முதல் புரட்டாசி வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதார நிலை மேம்படும். குழந்தைகளின் முன்னேற்றத்தில் சீரிய அக்கறையைக் காட்டுவீர்கள். சுப காரியங்கள் நடக்கும். குழந்தை இல்லாதோருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். மகிழ்ச்சியான பயணங்களையும் செய்வீர்கள். வருமானமும் பெருகும். உங்கள் பணிகளை நேரான பாதையில் செவ்வனே முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். லாட்டரி, ஷேர் மார்க்கெட் போன்ற இனங்களிலிருந்தும் திடீர் பண வரவுக்கும் இடமுண்டாகும். ஆன்மிக நாட்டம் கூடும். குல தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள்.
தர்ம காரியங்களுக்கும் செலவு செய்வீர்கள். சிலருக்கு தீட்சை பெறும் பாக்கியமும் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உங்கள் மன அழுத்தத்தைக் குறைப்பார்கள். அரசு பணியில் இருப்பவர்களின் ஆதரவும், உதவிகளும் கிடைக்கும். பெற்றோரின் எண்ணங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். இல்லத்துக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். புதிய முயற்சிகளால் வெற்றி கிடைக்கும். சட்டம் சார்ந்த விஷயங்களில் உள்ள சில நுணுக்கங்களை அறிவீர்கள். தன்னம்பிக்கையும், தனித்திறனும் வெளிப்படும்.
ஐப்பசி முதல் பங்குனி வரை உள்ள காலகட்டத்தில் தனித்து நின்று போட்டிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான காரியங்களையும் குறிப்பிட்ட காலத்துக்குள் தாக்குப் பிடித்துச் செய்து வெற்றி அடைவீர்கள். உங்களின் உடல் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். உங்கள் நடையில் மிடுக்கு உண்டாகும். உடல் நலம், மன வளம் இரண்டும் சீரடையும். உங்களுக்கு மறைமுகமாக கஷ்டம் கொடுத்தவர்கள் தானாகவே விலகி விடுவார்கள். சிலர் வசிக்கும் வீட்டை பழுது பார்ப்பார்கள். சிலர் நவீன இல்லங்களுக்கும் மாறுவார்கள். புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். புத்திசாலி, சாமர்த்தியசாலி என்று பெயரெடுப்பீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். பாகப் பிரிவினைகளால் இருந்த சிக்கல்கள் தீர்ந்து சுமுகமான பாகப் பிரிவினை உண்டாகும். பழைய காலத்தில் செய்த நல்ல காரியங்களுக்கு உண்டான நற்பலன்கள் இந்த காலத்தில் கிட்டும்.
குரு பகவான் சஞ்சாரம்
குரு பகவான் 22.4.2023 முதல் மேஷ ராசியில் நேர் கதியில் 4.9.2023 வரை சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில், "செய்வன திருந்த செய்' என்கிற பழமொழிக்கு ஏற்ப நடந்து கொள்வீர்கள். உங்கள் பிரச்னைகளை நண்பர்களின் உதவியால் சமாளிப்பீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும். உறவினர்கள் உங்கள் தயவை நாடி வருவார்கள். உங்களின் மன உறுதி கூடும். செய் தொழிலில் மாற்றம் செய்ய முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல மாற்று வழிகள் புலப்படும். பண நடமாட்டம் நன்றாக இருக்கும். குழந்தைகள் உங்களை மகிழ்விப்பார்கள். புதிய பொறுப்புகளை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். உடன் பிறந்தோருக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள்.
5.9.2023 முதல் 30.12.2023 வரை குரு பகவான் மேஷ ராசியில் வக்கிர கதியில் ( பின்னோக்கி ) சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் பெரிய காரியங்களையும் குற்றம் குறை காண முடியாதவிதத்தில் செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களைச் செய்ய நேரிடும். உடல் உழைப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மற்றபடி எவருக்கும் அறிவுரை கூற வேண்டாம். உங்கள் பேச்சாற்றலால் அனைவரையும் கவருவீர்கள். சமுதாயத்தில் பிரபலங்களைச் சந்தித்து உங்களின் மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள்.
31.12.2023 முதல் தமிழ்ப் புத்தாண்டு இறுதி வரை குரு பகவான் நேர் கதியில் ரிஷப ராசியை நோக்கி சஞ்சரிக்கிறார். அனைவரிடமும் நிதானமாகப் பேசி உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் ஈடுபவீர்கள். சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். விருப்பமான ஊர்களுக்கும் குடும்பத்துடன் சென்று வருவீர்கள். பழைய கடன்களையும் வசூலிப்பீர்கள். நண்பர்களின் குற்றங்களைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள். ராகு, கேது பகவான்கள் 28.11.2023 வரை உங்கள் ராசி, களத்திர நட்பு ஸ்தானத்திலும், பிறகு அயன ஸ்தானம், ருணம் ரோகம் சத்ரு ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
இந்த காலகட்டத்தில் தொழிலில் விறுவிறுப்பான வளர்ச்சியைக் காண்பீர்கள். குடும்பப் பிரச்னைகளை பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு தீர்த்து விடுவீர்கள். உங்கள் விண்ணப்பத்தின் மீது அரசாங்கம் சாதகமான முடிவெடுக்கும். உங்களின் மனக்குழப்பங்கள், தாக்கங்கள் வெளியில் தெரியாதபடி காரியமாற்றுவீர்கள். வங்கிக் கடன் பெற்று பெரிய முதலீடுகளைச் செய்வீர்கள். சமூகத்தில் உங்கள் பெயர், புகழ் உயரத் தொடங்கும். போட்டிகளிலிருந்தும் விலகி இருப்பீர்கள். வழக்குகளும் நீதிமன்றங்களுக்கு வெளியே சாதகமாக முடிவடையும். சிலருக்கு பழைய வீடு விற்பனையாகும். உங்கள் ஆன்மிக சிந்தனைகள் வளரும்.
பரிகாரம் : முருகப் பெருமானை வழிபடவும்.
*******
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டாலும் இறுதியில் கிடைத்துவிடும். தொழிலில் புதிய அனுபவம் கிடைக்கும். இதனால் எதிர்காலச் செயல்களில் மறுமலர்ச்சி உண்டாகும். சோர்வுகள் அகன்று சுறுசுறுப்பு கூடும். சாதுர்யமான பேச்சினால் மற்றவர்களின் நம்பிக்கைகளைப் பெறுவீர்கள்.
உறவினர்கள், நண்பர்கள் பற்றிய எண்ணங்களில் நேர்மறை சிந்தனைகள் நிறைந்து காணப்படும். காணாமல்போன சில பொருள்கள் திரும்பக் கிடைக்கும். போட்டியாளர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளிலும் எதிர்பார்த்த வாய்தா கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் சிறிது அதிருப்தி காணப்படும். மற்றபடி எதிர்பாராத தொலைதூரப் பயணம் கை கூடும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் அந்தஸ்து கௌரவம் கூடும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாகவே தொடரும். முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன்பு ஒன்றுக்கு இரண்டு ஆலோசனைகளை பெற்றபின் எடுக்கவும்.
ஐப்பசி முதல் பங்குனி வரை இருக்கும் காலகட்டத்தில் அரசு தொடர்பான பணிகளில் விவேகத்துடன் ஈடுபடுவீர்கள். திட்டமிட்ட பணிகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். சுப காரியங்கள் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சமுதாயப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். விடாப்பிடியான சிந்தனைகளைக் குறைத்துக் கொள்வீர்கள். பாகப் பிரிவினை விஷயங்களில் நிதானமாகச் செயல்படுவீர்கள். புதிய அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்க எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். சிலருக்கு நாளமில்லாச் சுரப்பிகள் சம்பந்தப்பட்ட உபாதைகள் தோன்றினாலும் மருத்துவத்தால் குணமடையும். அமைதியான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். தொழிலில் புதிய நுட்பங்களைப் புகுத்துவீர்கள். போட்டிகளிலிருந்து ஒதுங்கி இருக்கவும். உங்கள் ரகசியங்களை வெளியில் பேச வேண்டாம்.
குரு பகவான் சஞ்சாரம்
குரு பகவான் 22.4.2023 முதல் உங்கள் அயன ஸ்தானத்தில் நேர் கதியில் 4.9.2023 வரை சஞ்சரிக்கிறார். இந்த காலக்கட்டத்தில் தாய் வழி உறவினர்களின் அன்பும் ஆதரவும் கூடும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய தொழில்நுட்பப் பொருள்களைப் பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். வெளிநாடு செல்ல எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு விசா கிடைக்கும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் விரயங்கள் உண்டாகலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். எவரிடமும் பயனற்ற விவாதங்களும் வேண்டாம். குழந்தைகளிடம் கனிவுடன் நடக்கவும். அவர்களின் கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும்.
5.9.2023 முதல்30.12.2023 வரை குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்கிர கதியில் ( பின்னோக்கி )சஞ்சாரம் செய்வார்.
இந்தக் காலக்கட்டத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களின் கஷ்டங்களில் தாமாகவே உரிமை எடுத்துக் கொண்டு உதவி செய்வார்கள். வெளிவட்டாரத்திலும் புகழ் அந்தஸ்து உயரும். முன்னேற்றம் சார்ந்த சிந்தனைகள் வளரும். சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். குழந்தைகளின் பிரச்னைகளுக்கு தெளிவான ஆலோசனைகளை வழங்குவீர்கள். குடும்பத்தில் வருமானமும் படிப்படியாக உயரும்.
31. 12.2023 முதல் ஆண்டு இறுதி வரை குரு பகவான் நேர் கதியில் ரிஷப ராசியை நோக்கி சஞ்சரிக்கிறார். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் தர்ம சிந்தனைகள் உயரும். சிலர் புதிய வாகனங்களை வாங்குவார்கள். குடும்ப பெரியோரின் ஆசிகளைத் தேடி பெறுவீர்கள். மனதை உறுத்திய பிரச்னைகளுக்குத் தெளிவான முடிவெடுப்பீர்கள்.
ராகு, கேது பகவான்கள் 28.11.2023 வரை முறையே உங்கள் அயனஸ்தானம் மற்றும் ஆறாம் வீடான துலாம் ராசியிலும் , பிறகு ஆண்டு இறுதி வரை லாபஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானங்களில் சஞ்சரிக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் நெடு நாளாக வராமல் இருந்த கடன்கள் வசூலாகும். புதிய கடன்களையும் வாங்க நேரிடாது. உபரி வருமானத்தை தங்கம், வெள்ளியில் முதலீடு செய்வீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி புரிதல் உண்டாகும்.
கலை சார்ந்த பணிகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். இல்லத்திற்கு தேவையான நவீன உபகரணங்களையும் வாங்குவீர்கள். சிலர் வெளிநாடு பயணம் மேற்கொள்வார்கள், அல்லது உள் நாட்டிலேயே தொலை தூர பயணம் செய்வார்கள். தன்னம்பிக்கையுடன் வலம் வருவீர்கள். உங்கள் செயல்களை துரிதமாகவும், தைரியமாகவும், திட சிந்தனையுடனும் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். மற்றபடி எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உலகியல் வாழ்க்கைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.
பரிகாரம் : தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
*******
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
சித்திரை முதல் புரட்டாசி வரை உள்ள காலகட்டத்தில் சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைத்து செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். புதியவர்களின் உதவிகளும் தேவைக்கேற்ப கிடைக்கும். புதிய அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். நீண்ட நாள் பகையை நீக்கி உறவை மேம்படுத்துவீர்கள். வெளியூர் பயணங்களால் சிறப்புகள் கூடும். தொழிலை விரிவாக்கம் செய்ய புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிக்கலான விஷயங்களையும் சுலபமாக செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். வருமானம் இருமடங்காகும். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மறைமுக எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிப்பீர்கள். பங்கு வர்த்தகத்தின் மூலம் உபரி வருமானம் கிடைக்கும்.
சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயர்ந்து காணப்படும். சிலருக்கு தோல் வியாதிகள் ஏற்பட்டு மறையும். சம்பந்தமில்லாத விஷயங்களிலிருந்து விலகி இருக்கவும். கெட்டவர்கள், தகுதியற்றவர்களின் சகவாசத்தையும் தவிர்த்துவிடவும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொண்டு அரசுக்குச் சமர்ப்பிக்கவும். மற்றபடி குறிப்பறிந்து நடந்துக் கொண்டு உறவினர்கன் அன்பைப் பெறுவீர்கள்.
ஐப்பசி முதல் பங்குனி வரை உள்ள காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாகப் பேணிக் காப்பீர்கள். புதுவிதமான சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுப்பீர்கள். உங்கள் செயல்பாடுகளால் புத்தி கூர்மை வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதரவான வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளிலும் தெளிவு பிறக்கும்.
பெற்றோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். விலைஉயர்ந்த பொருள்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் மதிப்பு மரியாதை உயரத் தொடங்கும். பண வரவில் இருந்து வந்த தொய்வு நிலை மாறி நிலையான வருமானம் வரத் தொடங்கும். மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும் எதிர்பாராத சில முன்னேற்றகரமான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் பணிகளை நீங்களே செய்யவும். மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். மேலும் புதிய பொறுப்புகளை ஏற்கும்பொழுது பொறுப்பும் நிதானமும் தேவை.
குரு பகவான் சஞ்சாரம்
குரு பகவான் 22. 4. 2023 முதல் உங்கள் லாப ஸ்தானத்தில் நேர் கதியில் 4.9. 2023 வரை சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் பொழுதை கழிப்பீர்கள். தொழிலில் படிப்படியாக முன்னேறி இலக்குகளை எட்டி விடுவீர்கள். அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்கள் முழுமையான ஆதரவை வழங்குவார்கள். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். குழந்தைகளும் உங்கள் பேச்சைக் கேட்டு நல்லப் பிள்ளையாக நடப்பார்கள். நீங்கள் செய்யும் முதலீடுகள் உங்களுக்கு பயனுள்ளதாகவே அமையும்.
5.9.2023 முதல் 30.12.2023 வரை குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்கிர கதியில் ( பின்னோக்கி ) சஞ்சாரம் செய்கிறார். இந்த காலக்கட்டத்தில் தொழிலில் எதிர்பார்த்த பண வரவு வந்தாலும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களின் பெருமையை உணரக் கூடிய விஷயங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். சிலர் பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டுக்கு மாறலாம். ஆன்மிகப் பெரியோர்கள், மூத்தவர்களின் வழிகாட்டுதல்படி நடந்து கொள்வீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். சிலர் வசிக்கும் வீட்டிலும் நவீன மாற்றங்களை செய்வார்கள். எதிர்பாராத பிரச்னைகளின்போது விரைவாகச் செயல்பட்டு வெற்றி பெற்று புதிய அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் ஆளுமை வெளிப்படும்.
31.12. 2023 முதல் தமிழ்ப் புத்தாண்டு இறுதி வரை குரு பகவான் நேர் கதியில் ரிஷப ராசியை நோக்கி சஞ்சரிக்கிறார். உடல் ஆரோக்கியம், பொருளாதார நிலை இரண்டும் சிறப்பாக இருக்கும். உங்கள் லட்சியங்களை நிச்சயித்தபடி அடைவீர்கள். முக்கியத்துவம் இல்லாத விஷயங்களை தவிர்த்து விடுவீர்கள். ராகு, கேது பகவான்கள் 28.11.2023 வரை முறையே லாபஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பிறகு ஆண்டு இறுதி வரையில் முறையே தொழில், சுக ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் சமூக வாழ்வைவிட உடல் ஆரோக்கியம், மன வளம் இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தக்க நேரத்தில் தக்கவர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும், ஆலோசனைகளும் கிடைக்கும்.
முக்கிய முடிவுகள் லாபகரமாக அமையும். சிக்கலான விஷயங்களைச் செயல்படுத்தும்போது பழைய அனுபவங்கள் கைக் கொடுக்கும். அதிக சக்தியும், அதீத உற்சாகமும் உங்கள் செயல்களைச் சாதனைகளாக மாற்றும். உறவினர்கள் நண்பர்கள் கடன் கேட்டால் ஓரளவு உதவி செய்வீர்கள். உரிய காலத்தில் கறாராக பேசி வசூலித்தும் விடுவீர்கள்.
அடுத்தவர்களின் அழுத்தங்களுக்கு இடம் கொடாமல் சாதுர்யமாகச் செயல்களைச் செய்வீர்கள். வெளிநாட்டிலிருந்து வரும் ஒரு முக்கிய தகவல் ஒட்டு மொத்த குடும்பத்துக்கே மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
பரிகாரம் : ஸ்ரீ பெருமாளை வழிபடவும்.
*******
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
சித்திரை முதல் புரட்டாசி வரை உள்ள காலகட்டத்தில் தொழிலில் தேவையில்லாத சில அலைச்சல்கள் உண்டானாலும் முடிவு சாதகமாகவே அமையும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் பாசமும் பற்றும் அதிகரிக்கும். குடும்பத்தில் வருவாய் வந்து கொண்டிருந்தாலும் செலவுகளும் தொடர்ந்தபடியே இருக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களும் நடக்கும். மற்றபடி மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். உங்களுக்கு எதிராகப் போடப்பட்டிருந்த வழக்கு, வியாஜ்யங்களும் தோற்றுவிடும். சிறு ஆதாயங்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டி வரும். உங்களின் சமயோஜித புத்தியால் தக்க தருணத்தில் சரியான முடிவுகளை எடுப்பீர்கள்.
அரசு அதிகாரிகளிடம் தொடர்பு நல்ல முறையில் கிடைக்கும். ஆன்மிக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகி புதிய வழிகள் புலப்படும். வங்கிக் கடன்கள் கிடைத்து அசையும் அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள்.
ஐப்பசி முதல் பங்குனி வரை உள்ள காலகட்டத்தில் பெற்றோருக்குச் சிறிது மருத்துவச் செலவு உண்டாகும். இருப்பினும் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. தொழிலுக்குத் தேவையான வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். குடும்பத்தினரும் உங்களிடம் நேசமாகப் பழகுவார்கள். போட்டியாளர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். பூர்வீகச் சொத்துகள் கை வந்து சேரும். பழைய அசையாச் சொத்துகள் நல்ல விலைக்கு விற்பனையாகும். சமுதாயப் பணிகளிலும் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள்.
பங்கு வர்த்தகத்தின் மூலமும் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தைரியமாகச் செயலாற்றி தலைநிமிர்ந்து நடப்பீர்கள். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்தடையும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, தனியாக சிந்தித்து செயல்படுவீர்கள். தடைபட்டிருந்த திருமணத்தை நடத்திவைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்வதால் உங்கள் பழைய மனத் தாங்கல்கள் சீர்படும். உடல் நலம், மன வளம் இரண்டையும் மேம்படுத்த யோகா, பிராணாயாமம் போன்றவற்றை கற்றுக் கொள்ளவும்.
குரு பகவான் சஞ்சாரம்
குரு பகவான் 22.4.2023 முதல் தொழில் ஸ்தானத்தில் நேர் கதியில் 4.9.2023 வரை சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் உங்கள் பெயர் புகழ் கூடும். கவலைகள் படிப்படியாகக் குறையும். கடல் கடந்து வெளிநாடு செல்லக் கூடிய அமைப்பு ஏற்படும். தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். தீயோர் சேர்க்கையால் பண விரயம், கௌரவக் குறைவு ஆகியவை ஏற்படும் என்பதால் அவர்களின் சக வாசத்தை விட்டுவிடவும். இறை வழிபாடு அதிகமாக இருக்கும். வருமானத்தின் ஒரு பகுதியை தான தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்துவீர்கள். குடும்பத்திலும் ஒற்றுமை நீடிக்கும். சிலர் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். எதிர்கால கனவுகள் பலிப்பதற்கான அறிகுறிகளும் தென்படும்.
5.9.2023 முதல் 30.12.2023 வரை குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்கிர கதியில் ( பின்னோக்கி ) சஞ்சாரம் செய்கிறார்.
இந்த காலகட்டத்தில் சௌகர்யங்களை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு உதவியாக யாரையும் நம்பாமல் நீங்களே சிரத்தையுடன் செய்தால் நம்பிக்கை மோசம் போகமால் காப்பாற்றப்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய கற்பனை பயம் கொள்வதையும் தவிர்க்கவும். பொறுமையுடன் இருந்து சச்சரவுகளைத் தவிர்க்கவும். எதிர்பார்க்கும் இடத்திலிருந்து உதவி கிடைக்க தாமதமாகும். தொழிலில் புதிய மாற்றங்களை கொண்டு வருவீர்கள்.
31.12.2023 முதல் தமிழ்ப் புத்தாண்டு இறுதி வரை குரு பகவான் நேர் கதியில் ரிஷப ராசியை நோக்கி சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் வெளியூர் பயணங்களால் செய் தொழிலுக்குத் தேவையான வெற்றிகளைப் பெறுவீர்கள். சிறிய முதலீடுகளின் மூலம் உபரி வருமானத்தை ஈட்டுவீர்கள். அரசாங்கத்திலிருந்து மானியம், ஊக்கத் தொகை கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் அதிக நன்மை அடைவீர்கள். உறவினர்களிடம் இருந்த மனக் கசப்பை பேச்சுவார்த்தைகளின் மூலம் அகற்றுவீர்கள்.
எதிர்ப்புகளைத் தாண்டி போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். ராகு, கேது பகவான்கள் 28.11.2023 வரை தொழில் ஸ்தானம், சக ஸ்தானத்திலும் தமிழ்ப் புத்தாண்டு இறுதிவரை பாக்கிய ஸ்தானத்திலும், தைரிய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் தொழிலில் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்புகள் பெறுவீர்கள். குறுக்கு வழியில் செயல்பட நினைப்பவர்களை திருத்துவீர்கள். வீட்டிலும், வெளியிலும் உங்கள் அந்தஸ்து உயரும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். இல்லத்தில் சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கை கூடும். உங்கள் குண நலன்களில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்படும். அதோடு சாதுர்யமான பேச்சுகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கண்ணில் இருந்த குறைபாடுகள் நீங்கும். சிலர் புதிய வீட்டுக்கு மாற்றம் செய்வார்கள். போட்டிகளிலும் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம் : ஐயப்பனை வழிபட்டு வரவும்.
*******
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
சித்திரை முதல் புரட்டாசி வரை உள்ள காலகட்டத்தில் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் முக்கியஸ்தராக ஜொலிப்பீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து செய் தொழிலை விரிவுப்படுத்துவீர்கள். வருமானமும் படிப்படியாக உயரும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். சிலர் புதிய வீடுகளை வாங்குவார்கள். எதிர்காலத்தை வளப்படுத்த புதிய சேமிப்புத் திட்டங்களில் சேருவீர்கள். பழைய கடன்களையும் திருப்பி அடைத்து விடுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிறையும். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு வரும். நெடுநாளாக விற்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அசையாச் சொத்துகளும் நல்ல விலைக்கு விற்பனையாகும்.
எடுத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றி காண்பீர்கள். பங்கு வர்த்தகம் போன்ற துறைகளில் வருமானம் கிடைக்கும். மனக் குழப்பங்கள் மறைந்து தெளிவுடன் காணப்படுவீர்கள். புதிய இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அதற்குண்டான முயற்சிகளைச் செய்யத் தொடங்குவீர்கள். ஐப்பசி முதல் பங்குனி வரை உள்ள காலகட்டத்தில் சுறுசுறுப்புடனும், விடாமுயற்சியுடனும் காரியங்களை ஆற்றுவீர்கள். வெளியூர் சம்பந்தமான விஷயங்களில் இருந்த தடை தாமதங்கள் விலகிவிடும். வெளியூர், வெளிநாட்டிலிருந்து சுபச் செய்திகளும் வந்து சேரும். வருமானம் கூடும். இல்லத்துக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். உங்கள் நிர்வாகத் திறமை கூடும். அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். நேர் வழியில் சிந்திப்பீர்கள்.
நல்லவர்களின் நட்பை கூட்டி கொள்வீர்கள். பெற்றோருடனும் உறவு மேம்படும். இல்லத்தில் மருத்துவச் செலவுகள் என்று பெரிதாக எதுவும் ஏற்படாது. பூர்வீகச் சொத்துகளிலும் சுமூகமான பாகப் பிரிவினை உண்டாகும். மேலும் குடும்பப் பிரச்னைகளைப் பெரிதாக்காமல் சுமூகமாகப் பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். மற்றபடி அதிரடியான சில செயல்பாடுகளின் மூலம் எதிர்ப்புகளை வெற்றிக் கொள்வீர்கள். குடும்பத்தில் ஒரு முக்கியமான முடிவை எடுப்பீர்கள். சமுதாயத்தில் புதிய பதவிகள் தேடி வரும். வெளி வட்டாரத்திலும் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
குரு பகவான் சஞ்சாரம்
குரு பகவான் 22.4. 2023 முதல் உங்கள் பாக்கிய ஸ்தானத்தில் நேர் கதியில் 4.9.2023 வரை சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் பண வரவு ஊற்று போல் பெருகும். குழந்தைகளால் பெருமையடைவீர்கள். தொழிலைச் சிறப்பாக நடத்துவீர்கள். அநாவசிய செலவுகளைத் தவிர்த்து விடுவீர்கள். பழைய கடன்களும் வசூலாகும். புதிய முதலீடுகளைத் தைரியமாகச் செய்வீர்கள். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களைக் கவனத்துடன் கண்காணிப்பீர்கள். அரசு தொடர்பான வேலைகளும் சாதகமாகவே முடிவடையும்.
பெற்றோரின் ஆரோக்கியம் சிறப்பாகவே தொடரும். குடும்பத்திலும் மருத்துவச் செலவு உண்டாகாது. குழந்தைகளுக்கு வேறு ஊருக்குச் சென்று படிக்க வாய்ப்பு உண்டாகும். 5.9.2023 முதல் 30.12.2023 வரை குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்கிரம் ( பின்னோக்கி ) பெற்று சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை விலகி இணக்கமான சூழ்நிலை உருவாகும். குழந்தைகளை அவர்களின் போக்கிலேயே சென்று திருத்தி விடுவீர்கள். போட்டி பந்தயங்களால் சிறிது தாமதத்துக்குப் பிறகு வெற்றியடைவீர்கள். நிலம் வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபம் அடைவீர்கள். தொழிலை விரிவாக்க ஆயத்த வேலைகளைத் தொடங்குவீர்கள். குடும்பத்திலும் குதூகலமான சூழ்நிலையைக் கொண்டு வருவீர்கள். கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டு அதில் நடக்கும் தவறுகளையும் வெளிக் கொண்டு வருவீர்கள்.
31.12. 2023 முதல் தமிழ்ப் புத்தாண்டு இறுதி வரை குரு பகவான் நேர் கதியில் ரிஷப ராசியை நோக்கி சஞ்சரிக்கிறார். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். உங்கள் கடமைகளை அர்பணிப்புடன் செய்வீர்கள். தலை தூக்கும் பிரச்னைகளால் தடுமாற்றம் அடையாமல் தைரியமாக எதிர்கொள்வீர்கள். குழந்தைகளுக்கு அறக்கட்டளையிலிருந்து உதவித் தொகை கிடைக்கும்.
ராகு, கேது பகவான்கள் 28.11.2023 வரை முறையே பாக்கியஸ்தானம், தைரிய ஸ்தானத்திலும் பிறகு ஆண்டு இறுதி வரை அஷ்டமஸ்தானம், குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்கள். இந்த காலக் கட்டத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் சாதூர்யமான பேச்சினால் எதிர் வரும் பிரச்னைகளைச் சமாளித்து விடுவீர்கள். உடல் நலம் மன வளம் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவற்றை கற்பீர்கள்.
"செய்வன திருந்த செய்' என்கிற பழமொழிக்கு ஏற்ப உங்கள் செயல்களில் இரட்டிப்பு கவனம் செலுத்துவீர்கள். பண நடமாட்டம் சீராகவே தொடரும். தீர்க்க முடியாத பிரச்னைகளைத் தீர்க்க புதிய பாதைகள் புலப்படும். குடும்பத்திலும் பொறுப்புகள் அதிகரிக்கும். அதே நேரம் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். அரசாங்க சலுகைகளையும் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. உடலுழைப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
பரிகாரம் : மகாலட்சுமியை வழிபடவும்.
*******
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
சித்திரை முதல் புரட்டாசி வரையில் உள்ள காலகட்டத்தில் உங்களுக்கென்று தனிப்பாணியை வகுத்துகொண்டு செயல்படுவீர்கள். தொழிலில் வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்திலும் ஒற்றுமை மேம்படும். உறவினர்கள், நண்பர்கள் இல்லம் தேடி வருவார்கள். உடன்பிறந்தோருக்குத் தேவையான ஆலோசனைகளைக் கூறுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் பிரச்னைகளையும் தீர்த்து வைப்பீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தோர் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். பொருளாதார நிலை சீரடையும். ஆன்மிகத்திலும், தரும காரியங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மருத்துவர்களின் ஆலோசனைகளையும் கேட்டு நடப்பீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் பெயர், கௌரவம் கூடும். அசையும், அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். எவருக்கும் நம்பிக்கையின்பேரில் கடன் கொடுக்க வேண்டாம். அப்படி ஒரு நிர்பந்தம் ஏற்பட்டால் எழுதி வாங்கி கொண்டு, சாட்சிகளை வைத்துக் கொண்டு கொடுக்கவும். பங்கு வர்த்தகம் போன்ற துறைகளில் இருந்தும் உபரி வருமானம் கிடைக்கும்.
ஐப்பசி முதல் பங்குனி வரை உள்ள காலகட்டத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைத்து எதிர்பாராத லாபம் பெறுவீர்கள். உங்கள் காரியங்களில் முழுமையான அக்கறை செலுத்தி வெற்றி அடைய முயற்சி செய்வீர்கள். நீண்ட காலமாக மழலை செல்வத்துக்கு ஏங்கியவர்கள் நல்லச் செய்தியை கேட்பார்கள். ஆன்மிகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள்.
தொழிலை நல்ல நிலையில் நிறுத்தி விடுவீர்கள். மற்றவர்கள் உங்களை குறை சொல்லாத அளவுக்குக் கவனமாக இருப்பீர்கள். வாக்குத் திறமையினால் செயற்கரிய செயல்களால் போட்டியாளர்களை பொறாமைப்பட வைப்பீர்கள். குடும்பத்தைவிட்டு பிரிந்து இருந்த உறவினர்களைத் தேடிப் பிடித்து சமாதானப்படுத்துவீர்கள். குடும்பத்துக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். வெளியில் கொடுத்த கடன்களை சற்று சிரமப்பட்டு வசூலித்து விடுவீர்கள். ஏழை, எளியவர்களுக்கு உதவுவீர்கள். தேவையான பணம் கையிலிருப்பதால் திடீர் செலவுகளையும் சமாளித்து விடுவீர்கள்.
குரு பகவான் சஞ்சாரம்
குரு பகவான் 22.4.2023 முதல் உங்கள் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் நேர் கதியில் 4.9.2023 வரை சஞ்சரிக்கிறார். கேந்திராதித்ய தோஷம் நீங்கப் பெற்ற குரு பகவான் தொழிலில் இருந்த தடைகள் தானாகவே நீங்கச் செய்து விடுவார். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். முன்னேற்றத்துக்கான புதிய வாய்ப்புகளும் தானாகவே தேடி வரும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பைத் தேடி பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எவரிடமும் அநாவசிய வாக்குவாதங்கள் வேண்டாம். குடும்பத்தில் அமைதியைக் கொண்டு வருவீர்கள். அதேநேரம் அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள ஆடம்பரச் செலவுகளைச் செய்ய வேண்டாம். ரகசியங்களையும் எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
5.9.2023 முதல் 30.12.2023 வரை குரு பகவான் மேஷ ராசியில் வக்கிர கதியில் ( பின்னோக்கி ) சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் விமர்சனங்களும் தாழ்வு மனப்பான்மையும் வந்து நீங்கும். குழந்தைகளை அன்பால் அரவணைத்துச் செல்வீர்கள். பழைய கடன்களை தீர்க்க முயற்சி செய்வீர்கள். எதிரிகளிடமிருந்து ஒதுங்கி விடுவீர்கள். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஏழைகளுக்கும், ஊனமுற்றோருக்கும் உதவிகளைச் செய்வீர்கள். குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டு உங்கள் அந்தஸ்தை உயர்த்திக் கொள்வீர்கள்.
31.12.2023 முதல் தமிழ்ப் புத்தாண்டு இறுதி வரை குரு பகவான் நேர் கதியில் ரிஷப ராசியை நோக்கி சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறும். எதிர்பார்த்த நல்ல செய்தியும் கிடைக்கும். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். செய் தொழிலில் சில நுணுக்கங்களைக் கற்று கொள்வீர்கள். அதோடு சில முக்கிய முடிவுகளையும் எடுப்பீர்கள். முயற்சிகள் அனைத்தும் பலிதமாகும். உங்கள் உடலுழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
ராகு, கேது பகவான்கள் 28.11.2023 வரை முறையே அஷ்டம குடும்ப ஸ்தானத்திலும் பிறகு தமிழ்ப் புத்தாண்டு இறுதி வரை களத்திர நட்பு ஸ்தானம், ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் வருமானம் தொய்வு இல்லாமல் வந்து சேரும். புண்ணிய திருத்தலங்களுக்கும் சென்று வருவீர்கள். ஒரே சமயத்தில் நான்கைந்து வேலைகளைச் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். சரியாகத் திட்டமிட்டு உங்கள் காரியங்களைச் செய்வீர்கள். வெளி வட்டாரத்தில் சிறப்பாக மதிக்கப்படுவீர்கள். சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுவீர்கள். உடன்பிறந்தோருக்கும் இருந்த பிரச்னைகள் தீரும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். மற்றபடி ஒப்பந்தங்களில் கையெப்பமிடும் முன் அனைத்து ஷரத்துகளையும் படித்துப் புரிந்து கொண்டு கையெழுத்திடவும்.
பரிகாரம் : துர்கையை வழிபடவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.