திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு தேர்களைச் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ரத வீதிகளில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
நெல்லையப்பர் கோவிலின் ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லையப்பர் - காந்திமதியம்மாள் கோயிலின் நெல்லையப்பர் தேர் உள்ளிட்ட 5 தேர்களை தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தப்படுத்தினர் . இதனால் ரத வீதிகளில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி அனுப்பிவிடப்பட்டன.
தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்மாள் திருக்கோவிலின் ஆனித் தேரோட்டம் வருகிற ஜூன் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜூலை 3ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற உள்ளது.
இந்த ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வருகிற ஜூலை இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேராகவும், ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேராகவும் அருள்மிகு நெல்லையப்பர் கோவில் தேர் உள்ளது.
தேரோட்டத்தை முன்னிட்டு விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், காந்திமதி அம்மன் மற்றும் சுவாமி நெல்லையப்பர் தேர்களை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் முதல் கட்டமாக தேரைச் சுற்றி உள்ள கண்ணாடி கூண்டுகள் அகற்றப்பட்டு பேட்டை தீயணைப்புத் துறையினரால் வாகனங்கள் மூலம் ஐந்து தேர்களிலும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தேர்களை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நான்கு ரத வீதிகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.